Sports

#IPL2022 வீணான ராயுடுவின் அதிரடி ஆட்டம்.. முடிவுக்கு வரும் சென்னை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் சென்னை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. சேஸிங்கின் போது இவ்வளவு நெருக்கமாக வந்து சென்னை தோற்றதற்கான காரணம் என்ன?

சென்னை அணிக்கான டார்கெட் 188 ரன்கள். இந்த 188 ரன்களை சேஸ் செய்த போது சென்னை அணிக்கு அவ்வளவு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. பவர்ப்ளேயான முதல் 6 ஓவர்களில் சென்னை அணி 32 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்னிங்ஸை தொடங்கும்போது 9.5 க்கு நெருக்கமாக இருந்த தேவைப்படும் ரன்ரேட் பவர்ப்ளே முடிந்த சமயத்தில் 11 க்கும் மேல் சென்றது.

இங்கிருந்தே சென்னை அணிக்கான அழுத்தம் தொடங்கிவிட்டது. ஆனால், இந்த அழுத்தத்தை சமாளிக்கும் வகையில் அம்பத்தி ராயுடு அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஓவருக்கு ஓவர் சிக்சர்களையும் பவுண்டரிக்களையும் அடித்து கையை மீறி சென்று கொண்டிருந்த ரன்ரேட்டை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்தார்.

இதனால் 7-16 இந்த 10 ஓவர்களில் மட்டும் சென்னை அணி 109 ரன்களை எடுத்திருந்தது. கிட்டத்தட்ட ஓவருக்கு 11 ரன்கள். ஓவருக்கு 11 ரன்கள்தானே தேவைப்பட்டது? அதை மிகச்சிறப்பாக இந்த 10 ஓவர்களில் ராயுடு எடுத்துக் கொடுத்திருந்தார். சந்தீப் சர்மா வீசிய 16 வது ஓவரில் மட்டும் 23 ரன்கள் வந்திருந்தது. தொடர்ச்சியாக 3 சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் ராயுடு அடித்திருந்தார்.

அம்பத்தி ராயிடுவின் அட்டகாசமான ஆட்டத்தால் கடைசி 4 ஓவர்களில் சென்னையின் வெற்றிக்கு 47 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. டி20 போட்டிகளில் இது மிக எளிதாகவே எடுத்துவிடக்கூடிய ஸ்கோர்தான். ஜடேஜா, தோனி, ப்ரெட்டோரியஸ், ப்ராவோ ஆகியோர் இன்னும் இருந்ததால் இந்த டார்கெட்டை சென்னை எளிதில் எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நிகழாமல் போனது. அதற்கு மிக முக்கிய காரணம் அர்ஷ்தீப் சிங். இவர் வீசிய 17 மற்றும் 19 இந்த இரண்டு ஓவர்களிலும் சேர்த்து வெறும் 14 ரன்கள் மட்டுமே வந்திருந்தது. தனது க்ளியரான லைன் & லெந்த் மூலம் சிறப்பாக வீசி அதகளப்படுத்தினார்.

குறிப்பாக, பேட்ஸ்மேன்களின் காலுக்கு அடியில் விழுந்த துல்லியமான யார்க்கர்களை சென்னை பேட்ஸ்மேன்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இவரோடு 18 வது ஓவரை வீசிய ரபாடா மற்றும் 20 வது ஓவரை வீசிய ரிஷி தவாண் ஆகியோரும் சிறப்பாக வீசவே சென்னை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த 11 என்கிற எண் சென்னையின் சேஸிங்கில் புகுந்து விளையாடிவிட்டது. பவர்ப்ளேக்கு பிறகு ஓவருக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட போது 39 பந்துகளில் 78 ரன்களை எடுத்து அம்பத்தி ராயுடு அதை சாத்தியப்படுத்தினார். கடைசி டெத் ஓவர்களில் ஏறக்குறைய ஓவருக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட போது அதை சென்னை பேட்ஸ்மேன்களால் எடுக்க முடியவில்லை. மொத்தத்தில் சென்னை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் தழுவியிருக்கிறது. இந்த தோல்வி மூலம் சென்னை அணியின் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது.

Also Read: வெற்றிப் பாதைக்குத் திரும்புமா RCB..? முந்தைய தோல்விக்கு பழிவாங்குமா RR..? - என்னென்ன மாற்றங்கள்?