Sports

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெண்கள் IPL.. 6 அணிகள் : BCCI உறுப்பினர் சொன்ன முக்கிய தகவல் இங்கே!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெண்கள் ஐ.பி.எல் தொடர் 2023ம் ஆண்டிலிருந்து தொடங்கப்படலாம் என்று தெரிகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் ஒருவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

ஐ.பி.எல் தொடரின் வெற்றி கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இத்தொடரில் பங்குபெறுகிறார்கள். ஆப்கானிஸ்தான், சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் பெரும் கவனம் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், சின்ன சின்ன ஊர்களைச் சேர்ந்த வீரர்களுக்கும் இந்தப் பெரிய அரங்கில் வாய்ப்புகள் கிடைக்கிறது. வீரர்கள், கிரிக்கெட் வாரியங்கள் முதல் பொருளாதார அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் தலைமுறை மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

14 ஆண்டுகள் ஐ.பிஎல் வெற்றிகரமாக நடந்திருக்கும் நிலையில், இடையே வுமன்ஸ் சேலஞ்ச் என்ற பெண்கள் ஐ.பி.எல் 3 முறை நடந்தது. ஐ.பி.எல் போல் அல்லாமல், முதல் முறையாக 2018ம் ஆண்டு இரண்டு அணிகள் மட்டும் மோதிய போட்டி நடந்தது. அதில் ஹர்மன்ப்ரீத் கௌர் வழிநடத்திய சூப்பர்நோவாஸ் அணி வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு இரண்டு அணிகளின் எண்ணிக்கை மூன்றானது. மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா ஒவ்வொரு அணிகளை வழிநடத்தினர். வெலாசிடி அணியை வீழ்த்தி மீண்டும் கோப்பை வென்றது சூப்பர்நோவாஸ். 2020ம் ஆண்டும் மூன்று அணிகள் ஆட, முதல் முறையாக கோப்பை வென்றது டிரெய்ல்பிளேசர்ஸ். கொரோனா காலமாக 2021 தொடர் நடக்கவில்லை.

இந்நிலையில் ஆண்கள் தொடரைப் போல் பெண்கள் தொடரும் நடக்கவேண்டும் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்திய வீராங்கனைகள் மூலம், வெளிநாட்டு வீராங்கனைகள் வரை பலரும் பெண்கள் ஐ.பி.எல் தொடர் நடக்கவேண்டும் என்று தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். இந்தியாவில் பெண்கள் ஐ.பி.எல் ஆடும்போது, அது இளம் தலைமுறையிடம் விளையாட்டை அதிகமாக எடுத்துச்செல்லும் என்றும், இந்திய கிரிக்கெட்டை பலமடங்கு பலப்படுத்தும் என்றும் பலரும் கூறிவருகின்றனர். பல முன்னாள் கிரிக்கெட் வீராங்கனைகள் கூட இதை வலியுறுத்திவந்தனர். ஆனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இந்திய அணியில் மேக்னா சிங், யஷ்திகா பாடியா, ரிச்சா கோஷ், ஷெஃபாலி வெர்மா என பல வீராங்கனைகள் உலகக் கோப்பை அரங்கிலேயே விளையாடிவிட்டனர். அந்த அளவுக்கு இந்தியாவில் இளம் வீராங்கனைகள் கிரிக்கெட் அரங்கில் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், நிறைய அணிகள் உருவாக்கப்படுவதால் எந்தப் பிரச்சனையும் இருக்கப்போவதில்லை. அந்த அளவுக்கான வீராங்கனைகள் இருக்கிறார்கள். பல முன்னணி வெளிநாட்டு வீராங்கனைகளும் தயாராக இருக்கும்போது, தரமான அணிகளை உருவாக்க முடியும்.

இந்நிலையில் 2023ம் ஆண்டு பெண்களுக்கென பிரத்யேகமான ஐ.பி.எல் தொடர் நடத்தப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது. 6 அணிகள் அதில் ஆடலாம் என்று தெரிகிறது. இந்தத் தொடர் தொடங்கப்படும் பட்சத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் அதில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும்.

Also Read: #IPL2022: 6 போட்டியில் 5 தோல்வி - ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பு இழக்கும் சென்னை அணி? - CSK தோல்விக்கு என்ன காரணம்?