Sports

டாஸை வென்றாலும் சேஸிங்கை தேர்வு செய்ய விரும்பும் அணிகள்.. காரணம் என்ன? #IPL2020

நடப்பு ஐ.பி.எல் சீசனில் டாஸை வென்று சேஸிங்கை தேர்வு செய்வதே அத்தனை அணிகளின் விருப்பமாகவும் இருக்கிறது. அப்படி டாஸை வென்று சேஸ் செய்யும் அணிகள் வெல்வதுதான் வழக்கமாகவும் இருக்கிறது. இதற்கு இரவு நேரத்தின் பனிப்பொழிவே காரணம் என கூறப்படுகிறது. ஆனால், ராஜஸ்தான் அணி மட்டும் இந்த வழக்கத்தை உடைத்துக் கொண்டே இருக்கிறது. 4 போட்டிகளில் ராஜஸ்தான் அணி மூன்று போட்டிகளில் வென்றிருக்கிறது. இந்த மூன்று போட்டிகளிலுமே ராஜஸ்தான் அணி இரண்டாவதாக பந்துவீசி ஸ்கோரை டிஃபண்ட் செய்தே வென்றிருக்கிறது.

நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியிலும் இரண்டாவதாக பந்துவீசியே வென்றிருந்தனர். இதில், ஆச்சர்யம் என்னவெனில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 165 என்கிற சுமாரான ஸ்கோரையே எடுத்திருந்தது. இருந்தும் அவர்களால் அந்த ஸ்கோரை டிஃபண்ட் செய்து வெல்ல முடிந்ததற்கு காரணம் அவர்களின் வெறித்தனமான பந்துவீச்சே.

பவர்ப்ளேயிலேயே ராஜஸ்தான் பௌலர்கள் கட்டுக்கோப்பாக வீச தொடங்கிவிட்டனர். ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே கே.எல்.ராகுல் டக் அவுட் ஆகியிருந்தார். ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து பயங்கர வேகத்தில் இன்கம்மிங் டெலிவரியாக போல்ட வீச அதை கணிக்கவே முடியாமல் பேட்டுக்கும் பேடுக்கும் இடையில் விட்டு போல்டை பறிகொடுத்தார். இரண்டாவது பந்தை ஒயிடாக வீசிவிட்டு மீண்டு அந்த பந்தை வீச ஓவர் தி விக்கெட்டில் வந்த ட்ரெண்ட் போல்ட் கிருஷ்ணப்பா கௌதமையும் lbw ஆக்கினார். அந்த ஒயிடை தவிர்த்துவிட்டு லக்னோ அணி ரன்கணக்கை தொடங்குவதற்கு முன்பாகவே அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

பவர்ப்ளே முடிவதற்குள்ளேயே மேலும் ஒரு விக்கெட்டை லக்னோ இழந்திருந்தது. 6 ஓவர்களில் 31 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை லக்னோ இழந்திருந்தது. பவர்ப்ளேயை போல்டும் பிரசித் கிருஷ்ணாவும் கனகச்சிதமாக வீசி முடிக்க, மிடில் ஓவர்களில் அஷ்வினும் சஹாலும் சிறப்பாக வீசினர். குறிப்பாக, சஹால் 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். லெக் ஸ்பின்னரான சஹால் ஒரே ஓவரில் டீகாக் மற்றும் க்ரூணால் பாண்ட்யா என இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்தியிருந்தார். டீகாக் நன்கு செட்டில் ஆகி நின்றிருந்தார். அவர் கடைசி வரை நின்றிருந்ததால் ஆட்டமே மாறியிருக்கக்கூடும். சரியான நேரத்தில் சஹால் அவரை வீழ்த்தினார்.

பவர்ப்ளே மற்றும் மிடில் ஓவர்கள் ராஜஸ்தான் பௌலர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தாலும் டெத் ஓவர்களில் கொஞ்சம் தடுமாறவே செய்தனர். ஸ்டாய்னிஸ் டெத் ஓவர்களில் உள்ளே வந்து கொஞ்சம் அச்சுறுத்தவும் செய்தார். 19 வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா மட்டும் 19 ரன்களை வாரி வழங்கியிருந்தார். கடைசி ஓவரில் லக்னோவின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவர் வேறு வழியே இன்றி அறிமுக வீரரான குல்தீப் சென்னிற்கு வழங்கப்பட்டது.

எப்படி வீசுவாரோ எனும் சந்தேகத்தோடே இந்த ஓவர் தொடங்கியது. ஆனால், முடியும்போது எந்த சந்தேகமமுமே இல்லை. இந்த சீசனின் மிகச்சிறந்த கடைசி ஓவர் ஒன்றை குல்தீப் வீசிவிட்டு சென்றார். ஸ்டாய்னிஸ் அபாயகரமான வீரர். பல போட்டிகளில் இந்த மாதிரியான சூழலில் அடித்து வெளுத்து போட்டிகளை வென்றிருக்கிறார். ஆனால், இங்கே இந்த அறிமுக வீரரிடம் ஸ்டாய்னிஸ் திணறியே போனார். குல்தீபின் கடைசி ஓவரில் ஸ்டாய்னிஸ் 5 பந்துகளை சந்தித்தார். அதில் முதல் 3 பந்துகளில் ஸ்டாய்னிஸால் ஒரு ரன்னை கூட எடுக்க முடியவில்லை. மூன்றுமே டாட்கள். அங்கேயே போட்டி முடிந்துவிட்டது. கடைசி இரண்டு பந்துகளில் 14 ரன்கள் தேவை என்ற சூழலில் ஒரு பவுண்டரியையும் ஒரு சிக்சரையும் ஸ்டாய்னிஸ் அடித்தார். அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. குல்தீப் மிகச்சிறப்பாக துல்லியமான லைன் & லெந்த்தில் வீசியிருந்தார். ஒரு எக்ஸ்ட்ராவை கூட அவர் வீசியிருக்கவில்லை என்பதுதான் ஹைலைட்டான விஷயம். ராஜஸ்தான் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Also Read: டெல்லியின் ரன் குவிப்புக்கு காரணமான உமேஷ் யாதவ்.. ரன்களை வாரி வழங்கியதற்கு காரணம் என்ன?