Sports
#IPL 2022.. பிழைத்திருத்தலே முக்கியம் - பாடம் கற்க மறுக்கும் பஞ்சாப் அணி!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை குஜராத் அணி கடைசி பந்து வரை சென்று 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவை என்ற சூழலில் ராகுல் திவேதியா கடைசி 2 பந்துகளையுமே சிக்சராக்கி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து அசத்தியிருந்தார்.
பஞ்சாப் அணியின் தோல்விக்கு அந்த அணியின் பௌலிங்கை விட பேட்டிங்கே மிக முக்கிய காரணமாக இருக்கிறது என சொல்லலாம். 189 ரன்கள் அடித்த பேட்டிங் யுனிட்டை தோல்விக்கு காரணமே இவர்கள்தான் என சுட்டுவது கொஞ்சம் விந்தையாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை.
பஞ்சாப் அணியில் பேர்ஸ்ட்டோ, லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, ஷாரூக்கான், ஒடேன் ஸ்மித் என அத்தனை வீரர்களும் அதிரடியாக ஆடக்கூடியவர்கள். ஒவ்வொரு பந்திலும் சிக்சர் அடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டவர்கள். இந்த போட்டியிலும் அதே மனப்பாங்குடன் தான் ஆடியிருந்தார்கள். ஒடேன் ஸ்மித் இந்த போட்டியில் டக் அவுட் ஆகியிருந்தார். பேர்ஸ்ட்டோவிற்கு இந்த சீசனில் இதுதான் முதல் போட்டி. அவரும் 8 ரன்களில் அவுட் ஆகியிருந்தார். இவர்களை தவிர மற்ற வீரர்கள் நல்ல ஸ்க்கொர் செய்திருந்தனர். அதிரடியாக ஆடியிருந்தனர். ஆனால், அதுதான் இங்கே பிரச்சனையாகவும் அமைந்திருந்தது. இவர்கள் அடித்த அடிக்கு அந்த அணி குறைந்தபட்சமாக 220 ரன்களையாவது கடந்திருக்க வேண்டும்.
ஆனால், அது சாத்தியப்படவில்லை. பஞ்சாப் அணி 189 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. காரணம், பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் வேக வேகமாக ரன்கள் அடிக்கிறார்கள். அதே வேகத்தில் விக்கெட்டையும் விடுகிறார்கள். ரன்களை விட பார்ட்னர்ஷிப்களே அதி முக்கியமானது. நல்ல பார்ட்னர்ஷிப்கள் அமைந்தால் ரன்கள் தானாக கூடிக்கொண்டே போகும். பஞ்சாப் அப்படியான பார்ட்னர்ஷிப்களை உருவாக்க முனைவதே இல்லை. ஒவ்வொரு பேட்டரும் தனித்தனியாக ஆடுவதையே விரும்புகின்றனர். லிவிங்க்ஸ்டனின் ஸ்ட்ரைக் ரேட் 237 ஆகவும், ஜித்தேஷ் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 210 ஆகவும், ஷாரூக்கானின் ஸ்ட்ரைக் ரேட் 187 ஆகவும் இருந்தது.
ஆனால், என்ன பிரயோஜனம்? இவர்கள் அடித்த அடிக்கு 220+ ஸ்கோர் வந்திருக்க வேண்டும். ஆனால், பஞ்சாப் இங்கே 189 ரன்களையே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிதான் தொட்டிருந்தது. ஆல் அவுட் ஆகாமல் தப்பித்ததே அதிர்ஷ்டம்.
தவானும் லிவிங்ஸ்டனும் இணைந்து 52 ரன்களை அடித்திருந்தனர். இதுதான் இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப். இதன்பிறகு, ஜித்தேஸ் சர்மாவும் லிவிங்ஸ்டனும் 38 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இறுதியாக, கடைசி விக்கெட்டிற்கு 27 ரன்களுக்கு ராகுல் சஹாரும் அர்ஷ்தீப் சிங்கும் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இவையும் பெரிதாக கூட்டணி மனப்பான்மையுடன் வந்த பார்ட்னர்ஷிப்கள் இல்லை. ஆளாளுக்கு ஒரு புறம் தங்களுக்கே உரிய சொந்த திட்டங்களோடு ஆடிக்கொண்டிருந்தார்கள்.
இதற்கு உதாரணமாக ரஷீத்கான் வீசிய 16 வது ஓவரை குறிப்பிடலாம். இந்த ஓவரில் அரைசதத்தை கடந்திருந்த லிவிங்ஸ்டன் ஒரு பெரிய ஷாட்டுக்கு முயன்று அவுட் ஆகியிருப்பார். அவர் அவுட் ஆன அடுத்த இரண்டாவது பந்திலேயே ரஷீத்தின் பந்தில் ஷாரூக்கான் ஒரு ஸ்லாக் ஸ்வீப்பிற்கு முயன்று lbw ஆகினார். குஜராத்தின் அபாயகரமான பௌலர்களில் முதன்மையானவர் ரஷீத்கான். அந்த 16 வது ஓவர் அவரின் கடைசி ஓவர். அந்த ஒரு ஓவரை பார்த்து ஆடியிருந்தால் கடைசி நான்கு ஓவர்களிக் க்ரீஸில் நின்று வெளுத்திருக்க முடியும். ஆனால், இங்கே ஷாரூக்கான் லிவிங்ஸ்டன் அவுட் ஆன அடுத்த இரண்டாவது பந்திலேயே பெரிய ஷாட்டுக்கு முயன்று அவுட் ஆனார். ஒரு அணியாக கூட்டாக யோசிக்காத மனநிலையின் வெளிப்பாடு இது. இந்த அவசரமனநிலை பஞ்சாபின் அத்தனை வீரர்களிடமுமே இருக்கிறது.
அதேநேரத்தில், பஞ்சாப் நிர்ணயித்த டார்கெட்டை சேஸ் செய்த குஜராத் அணி வென்றதற்கு முக்கிய காரணமாக அமைந்ததும் பார்ட்னர்ஷிப்தான். சேஸிங்கின் போது அந்த அணியின் சார்பில் கில்லும் சாய் சுதர்சனும் 101 ரன்களை சேர்த்திருந்தனர். ஒருவரையொருவர் Complement செய்து சிறப்பாக ஆடியிருப்பர். இப்படி ஒரு பார்ட்னர்ஷிப் அமையாததே பஞ்சாபின் ஸ்கோரை 200 ஐ தாண்டவிடாமல் தடுத்தது.
பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் மட்டுமில்லை. சென்னை மற்றும் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியின் போதும் இப்படித்தான் தனித்தனியாக ஆடி சொதப்பியிருந்தார்கள்.
பஞ்சாப் பேட்ஸ்மேன்களின் சொதப்பல்களை பார்த்து கமெண்ட்ரி பாக்ஸில் இருந்த ஹர்ஷா போக்ளே இப்படி சொன்னார். 'Survival is important'. பிழைத்திருத்தலே பிரதானம்! அந்த பாடத்தை பஞ்சாப் இனியாவது கற்றுக்கொள்ள வேண்டும்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!