Sports

வசவுகளுக்கெல்லாம் பதிலடி.. வலிமையாக கம்பேக் கொடுத்த உமேஷ் யாதவ்!

நடந்துக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் சீசனில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமே இல்லை. அவற்றிற்கிடையில் இந்த சீசனில் ஒரு வீரர் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார். இதுவரை தன்னை விமர்சித்தவர்களை கூட வாயடைத்து போக வைத்திருக்கும் அந்த வீரர் உமேஷ் யாதவே!

ஐ.பி.எல் தொடரில் ரசிகர்களால் அதிகமாக கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளான வீரர்களில் உமேஷ் யாதவும் ஒருவர். பெங்களூரு அணிக்காக ஆடிய போது அந்த அணியில் அதிக ரன்களை வாரி கொடுத்ததால் ரசிகர்கள் உமேஷ் யாதவை கடுமையாக விமர்சித்திருக்கின்றன. எள்ளலுக்குரிய வகையில் ட்ரோலும் செய்திருக்கின்றனர். 'கோலியும் ஏபிடியும் உயிரை கொடுத்து அடிக்கும் ரன்களை இவர் போகிற போக்கில் தனது 4 ஓவர்களில் வாரி வழங்கிவிடுகிறார்' என்பதே அந்த விமர்சனங்களின் மையமாக இருக்கும்.

இந்த விமர்சனங்களில் உண்மையில்லாமலும் இல்லை. டெத் ஓவர்களில் உமேஷ் யாதவின் பந்துவீச்சு சுமாராகவே இருந்திருக்கிறது. அதிக ரன்களை கொடுத்திருக்கிறார். தோனியெல்லாம் உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் 25 க்கும் அதிகமான ரன்களை அடித்ததெல்லாம் வரலாறு. இந்த டெத் ஓவர் பந்துவீச்சு பிரச்சனையால் உமேஷ் யாதவின் ஐ.பி.எல் கரியரும் ஒரு தேக்க நிலையை நோக்கி சென்றது. பெங்களூரு அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். டெல்லி அணி அவரை வாங்கியிருந்தது. ஆனால், வாய்ப்பே கொடுக்காமல் பென்ச்சிலேயே வைத்திருந்தது உமேஷ் யாதவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

ஆனால், இந்த சீசனில் உமேஷ் யாதவின் சறுக்கல்கள் எல்லாமே காணாமல் போயிருக்கிறது. கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் உமேஷ் யாதவ் மிகச்சிறப்பாக பந்துவீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான பர்ப்பிள் தொப்பியையும் தன் வசம் வைத்துள்ளார்.

கொல்கத்தா அணிக்குமே உமேஷ் யாதவ் அவ்வளவு சீக்கிரம் வந்துவிடவில்லை. மெகா ஏலத்தின் போது முதல் இரண்டு சுற்றிலும் உமேஷ் யாதவ் விற்கப்படாத வீரராகவே இருந்தார். கடைசியில் கொல்கத்தா அணி அவரை அவரின் அடிப்படை விலைக்கே வாங்கியிருந்தது.

பெரிய எதிர்பார்ப்புகளின்றி வாங்கப்பட்ட இந்த உமேஷ் யாதவ்தான் இப்போது கொல்கத்தா அணியின் வெற்றிகளில் மிக முக்கிய பங்காக இருக்கிறார். 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். கடந்த 3 சீசன்களிலும் சேர்த்தே உமேஷ் யாதவ் 9 விக்கெட்டுகளை மட்டும்தான் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பவர்ப்ளேயிலேயே பிரதானமாக வீசும் உமேஷ் யாதவ் பந்தை நன்றாக ஸ்விங் செய்து பேட்ஸ்மேன்களை கணிக்கவே விடாமல் தனது முதல் ஸ்பெல்லிலேயே விக்கெட்டுகளை அள்ளி வருகிறார். சென்னைக்கு எதிரான முதல் போட்டியிலேயே உமேஷ் யாதவ் தனது வேலையை தொடங்கிவிட்டார். கடந்த சீசனின் ஆரஞ்சு தொப்பி வெற்றியாளரான ருத்துராஜ் கெய்க்வாட்டை தான் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆக்கியிருப்பார். அங்கிருந்து தொடங்கி ஆடியிருக்கும் 4 போட்டிகளிலுமே மிகச்சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார்.

மும்பை அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கொல்கத்தாவிற்கு எதிராக எப்போதுமே அட்டகாசமாக ஆடக்கூடியவர். அவரது ஐ.பி.எல் கரியரிலேயே கொல்கத்தாவிற்கு எதிராகத்தான் அதிக ரன்களை அடித்திருக்கிறார். அப்படிப்பட்ட ரோஹித் சர்மாவை 3 ரன்களிலேயே உமேஷ் யாதவ் வீழ்த்தியிருந்தார். அதுவும் ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரியில் என்பது கூடுதல் ஸ்பெசல். ஏனெனில், ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களில் ரோஹித் சர்மா 200+ ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். புல் ஷாட்களை அவரை விட வேறு யாராலும் நேர்த்தியாக ஆட முடியாது. அவரையே ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரியில் வீழ்த்தினார் என்பது உமேஷ் யாதவின் உயர்தர திறனின் வெளிப்பாடகவே பார்க்கப்படுகிறது. இந்த வெயிட்டான பெர்ஃபார்மென்ஸ்களின் காரணமாக கொல்கத்தா ஆடியிருக்கும் 4 போட்டிகளில் 2 போட்டிகளில் உமேஷ் யாதவே ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.

உமேஷ் யாதவ் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் என்பதை தாண்டி அவரின் எக்கானமி அதுதான் கவனிக்கப்பட வேண்டும். அதிகமான ரன்களை வாரி வழங்குகிறார் என்பதே உமேஷ் யாதவ் மீதான குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால், இந்த முறை அதிலுமே உமேஷ் யாதவ் கில்லியாகத்தான் இருக்கிறார். ஓவருக்கு 5 ரன்கள் என்ற விகிதத்தில்தான் இதுவரை வழங்கியிருக்கிறார்.

உமேஷ் யாதவ்வின் வெற்றிக்கு கொல்கத்தா அணியின் ஒத்துழைப்பும் ஒரு முக்கிய காரணம். ஏனெனில், உமேஷ் யாதவ் டெத் ஓவரில்தான் பலவீனமாக இருக்கிறார் என்பதை உணர்ந்து அவருக்கு நியுபாலில் பவர்ப்ளேயிலேயே மூன்று ஓவர்களை கொடுத்துவிடுகிறார்கள். மீதமிருக்கும் ஒரு ஓவரை மிடில் ஓவரில் வழங்கிவிடுகிறார்கள். இதனால், டெத் ஓவரில் பந்துவீசுவதற்கான வேலையே உமேஷுக்கு இல்லை.

இந்த சீசனில் இதுவரை நடந்திருக்கும் நிகழ்வுகளில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருப்பது சந்தேகமேயின்றி உமேஷ் யாதவ்வின் பவர்ப்ளே ஓவர்கள்தான். எந்த அணிகளும் சீண்ட கூட தயங்கிய நிலையில் கிடைத்த அரிய வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி தன்னுடைய திறனை நிரூபித்து தரமான கம்பேக் கொடுத்திருக்கிறார்.

Also Read: கூடுதல் அணிகள்; கூடுதல் வாய்ப்புகள்; கவனம் ஈர்க்கும் இளம் வீரர்கள் - தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறதா?