Sports
கேட்ச் ட்ராப் + தவறவிட்ட ரன் அவுட்.. டூப்ளெஸ்சிஸின் அதிரடியை விரயமாக்கிய அந்த இரண்டு விஷயங்கள்!
ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியிருந்தன. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 205-2 என்ற ஸ்கோரை எட்டியிருந்தது. ஆனால், இவ்வளவு பெரிய டார்கெட்டை நிர்ணயித்த பிறகும் அந்த அணி ஒரு ஓவர் மீதமிருக்கையிலேயே 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கிறது. காரணம் என்ன?
பெங்களூரு அணிக்காக அதன் புதிய கேப்டனான ஃபாப் டூ ப்ளெஸ்சிஸ் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். 57 பந்துகளில் 88 ரன்களை அடித்திருந்தார். 7 சிக்சர்களையும் 3 பவுண்டரிக்களையும் அடித்திருந்தார். தொடக்கத்தில் மெதுவாக தொடங்கி அதன்பிறகு போகப் போக கியரை மாற்றி அடித்து வெளுத்தெடுத்தார். இவரோடு கூட்டணி சேர்ந்து முன்னாள் கேப்டனான விராட் கோலியும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஒத்துழைப்பு கொடுத்தார்.
விராட் கோலி 29 பந்துகளில் 41 ரன்களை எடுத்திருந்தார். டெத் ஓவர்களில் இறங்கிய தினேஷ் கார்த்திக்கும் கிடைத்த சில பந்துகளில் ஒரு ஆட்டம் ஆடிவிட்டார். 14 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் 32 ரன்களை எடுத்திருந்தார். இதன்விளைவாக, பெங்களூரு அணி 20 ஓவர்களில் 205 ரன்களை எட்டியது.
206 ரன்களை பஞ்சாப் சேஸ் செய்த போது தொடக்கத்திலிருந்தே அந்த அணியின் பேட்ஸ்மேன்களும் அதிரடியாகவே ஆடியிருந்தனர். கேப்டன் மயங்க் அகர்வால் 32 ரன்களையும் தவான் 43 ரன்களையும் எடுத்திருந்தார். முதல் 10 ஓவர்களிலேயே 97 ரன்களை பஞ்சாப் எடுத்திருந்தது. ஏறக்குறைய சரியாக டார்கெட்டில் பாதி ஸ்கோரை முதல் 10 ஓவர்களில் எட்டிவிட்டனர். விக்கெட்டுகளையும் வரிசையாக விட்டிருந்தனர். மயங்க் அகர்வால், தவானை தொடர்ந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த பனுகா ராஜபக்சாவையும் ராஜ் பவாவையும் சிராஜ் ஒரே ஓவரில் வீழ்த்தியிருந்தார்.
ஆனாலும், பெங்களூரு அணியால் பஞ்சாபை கட்டுப்படுத்தி வெல்ல முடியவில்லை. காரணம், அவர்களின் சொதப்பலான ஃபீல்டிங். கடைசிக்கட்டங்களில் அதிரடி காட்டி பஞ்சாபின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது ஒடேன் ஸ்மித். இவர் வெறும் 8 பந்துகளிலேயே 25 ரன்களை எட்டியிருந்தார். பஞ்சாப் ஒரு ஓவரை மீதம் வைத்து இவ்வளவு பெரிய ஸ்கோரை எட்டியதற்கு அவரின் அதிரடியே காரணமாக இருந்தது. மூன்று சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் அவர் அடித்திருந்தார். இந்த சிக்சர்களும் பவுண்டரியும் வருவதற்கு முன்பே அவரின் விக்கெட்டை வீழ்த்தியிருக்க முடியும். அதற்கான வாய்ப்பு ஒரே ஓவரில் இரண்டு முறை பெங்களூருவிற்கு கிடைத்தது.
ஹர்ஷல் படேக் வீசிய 17 வது ஓவரின் நான்காவது பந்தில் ஒடேன் ஸ்மித் கவர்ஸ் திசையில் ஒரு பெரிய ஷாட்டை அடித்திருப்பார். அது சரியாக பவுண்டரி லைனில் நின்ற அனுஜ் ராவத்திடன் கைகளுக்கு சென்றிருக்கும். ஆனால், அந்த எளிமையான கேட்ச்சை அனுஜ் ராவத் கோட்டைவிட்டிருப்பார். அப்போது ஒடேன் ஸ்மித் வெறும் 1 ரன்னை மட்டுமே எடுத்திருந்தார்.
இந்த கேட்ச் ட்ராப் ஆன சமயத்தில் ஒரு ரன் ஓடி நான் ஸ்ட்ரைக்கர் முனைக்கு சென்றுவிடுவார். அடுத்ததாக இந்த ஓவரின் 5 வது பந்தில் ஒடேன் ஸ்மித்தை அவுட் ஆக்க இன்னொரு வாய்ப்பும் கிடைத்தது. ஸ்ட்ரைக்கில் இருந்த ஷாருக்கான் வட்டத்திற்குள் நின்ற எக்ஸ்ட்ரா கவர் ஃபீல்டரிடம் ஒரு பந்தை அடித்துவிட்டு ரன்னிற்காக கொஞ்சம் முயன்றிருப்பார். இதற்கு ரன் கிடைக்காது என்றவுடன் பின் வாங்கியிருப்பார்.
ஆனால், நான் ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்த ஒடேன் ஸ்மித் அவசர அவசரமாக ஏறக்குறைய பாதி பிட்சிற்கு ஓடி வந்துவிட்டு மீண்டும் தலை தெறிக்க க்ரீஸுக்கு திரும்பியிருப்பார். டைவ் அடித்தே அவரால் பாதுகாப்பாக க்ரீஸுக்குள் நுழைய முடிந்தது. ஸ்மித் டைவை நிறைவு செய்வதற்கு முன்பே எக்ஸ்ட்ரா கவரில் இருந்த அந்த ஃபீல்டர் ஸ்டம்புக்கு அருகே நின்ற பௌலர் ஹர்ஷல் படேலுக்கு பந்தை வீசிவிட்டார். ஆனால், ஹர்ஷல் படேலோ அதை கலெக்ட் செய்து ஒரு நொடி தாமதித்து மெத்தனமாகவே ஸ்டம்பில் அடித்திருப்பார். அந்த ஒரு நொடி தாமதம் ஒடேன் ஸ்மித் தன்னுடைய விக்கெட்டை தற்காத்துக் கொள்ள போதுமானதாக இருந்தது.
அனுஜ் ராவத் செய்த கேட்ச் ட்ராப் கொடுத்த விரக்தியில் ஹர்சல் படேல் அவ்வாறாக தாமதித்து ஸ்டம்பை தகர்த்திருக்கலாம். மேலும் ஹர்சல் படேலின் பின்பக்கத்தில் ஒடேன் ஸ்மித் டைவ் அடித்தார். ஹர்சல் படேலின் பார்வையில் படுமளவுக்கு முன்பக்கத்தில் ஸ்மித்தின் டைவ் முயற்சி நடந்திருந்தால் ஹர்சல் படேல் இன்னும் துரிதமாக ஸ்டம்பை தகர்த்திருக்க முடியும்.
அனுஜ் ராவத்தின் கேட்ச் ட்ராப் ஒரு அதிர்ச்சிகரமான விஷயமே. ஏனெனில் இதற்கு முன் ஹர்சல் படேல் வீசிய ஒரு ஓவரிலேயே தவானிற்கு வட்டத்திற்குள் ஒரு கேட்ச்சை சௌகரியமாக பிடித்திருந்தார். ஆகாஷ் தீப்பின் பந்தில் லிவிங்ஸ்டனுக்கு அதே டீப் கவரின் முன்புறத்தில் டைவ் அடித்து விழுந்து அட்டகாசமான கேட்ச்சை பிடித்திருப்பார். அப்படியான ஃபீல்டர் கைக்கு வந்த ஒடேன் ஸ்மித்தின் கேட்ச்சை விட்டதுதான் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
ஒடேன் ஸ்மித் மட்டும் அந்த 17 வது ஓவரில் ஒரு ரன்னிலோ இரண்டு ரன்னிலோ அவுட் ஆகியிருந்தாலோ ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் போயிருக்கலாம். ஏனெனில், அந்த சமயத்தில் பஞ்சாபிற்கு 21 பந்துகளில் 41 ரன்கள் தேவைப்பட்டது. ஷாரூக்கான் மட்டும்தான் க்ரீஸில் நின்றார். ஸ்மித்திற்கு பிறகு கீழ்வரிசையில் அடிப்பதற்கு வேறு பேட்ஸ்மேன்கள் கிடையாது. எனவே அழுத்தம் மொத்தமும் ஷாரூக்கான் மீது மட்டுமே இருந்திருக்கும். போட்டியும் கடைசி ஓவர் வரை இன்னும் நெருக்கமாக சென்றிருக்கும்.
போட்டிக்கு பிறகு பேசிய பெங்களூரு கேப்டன் டூ ப்ளெஸ்சிஸும் இந்த கேட்ச் ட்ராப் பற்றியும் ஒடேன் ஸ்மித்தின் அதிரடி பற்றியும் பேசியிருந்தார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?