Sports

#IPL 2022 - கேப்டன் பதவியிலிருந்து விலகல்.. ஓய்வு எப்போது?: தோனியின் திட்டம் என்ன?

திடீரென சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி தோனி அதிர்ச்சி அளித்திருக்கிறார். 41 வயதை எட்டவிருக்கும் நிலையில் இதே போன்று ஓய்வு முடிவையும் தோனி திடீரென அறிவிக்கக்கூடும் என்றும் கணிக்கப்படுகிறது. தோனி எப்போது ஓய்வு முடிவை அறிவிப்பார்? ஓய்வு குறித்து அவரின் திட்டம் என்ன?

கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இது சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்ட முடிவுதான். ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன்பாக வீரர்கள் ரீட்டெயின் செய்யப்படும்போது சென்னை அணி தோனியை விட ஜடேஜாவிற்கே அதிக தொகை கொடுத்திருந்தது. தோனியே முன்வந்து ஜடேஜாவிற்கு அதிக தொகை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போதே தோனி வெகு சீக்கிரமாக கேப்டன் பதவியிலிருந்து விலகி ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் எனும் செய்திகள் வெளியாகியிருந்தது. அதுதான் இப்போது நிஜமும் ஆகியிருக்கிறது.

ஓய்வு எப்போது?

41 வயது என்பது சராசரியாக கிரிக்கெட்டர்கள் ஓய்வு பெறும் வயதை விட கொஞ்சம் அதிகமான வயதே. இவ்வளவு நாளாக முழு உடல்தகுதியோடு தோனி ஆடியதே பெரிய விஷயம். இதற்கு மேலும் இந்த பயணத்தை நீட்டிக்க தோனி விரும்பமாட்டார். எனில், ஓய்வு எப்போது? உடனடியாக ஓய்வு முடிவை அறிவித்துவிடுவாரா? அதற்கான வாய்ப்புகழ் ரொம்பவே குறைவு. ஏனெனில், சேப்பாக்கத்தில்தான் எனது கடைசி போட்டி இருக்க வேண்டும் என தோனியே பல இடங்களில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் உறுதியாகவும் இருக்கிறார். சென்னையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டம் ஒன்றில் பேசும்போது 'சேப்பாக்கத்தில்தான் எனது கடைசி போட்டியை ஆடுவேன். அது இந்த சீசனாக இருந்தாலும் சரி இன்னும் சில சீசன்கள் கழித்தென்றாலும் சரி' என பேசியிருந்தார். ஆக, தோனி சேப்பாக்கத்தில் வைத்தே தனது பிரிவு உபச்சார போட்டி நடைபெற வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். ரசிகர்களுமே அதைத்தான் விரும்புகின்றனர்.

ஆனால், இந்த சீசன் முழுவதும் அத்தனை லீக் போட்டிகளும் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள மூன்று மைதானங்களிலுமே போட்டி நடைபெறுகிறது. ஆக, இந்த சீசனில் தோனி விரும்பியபடி சேப்பாக்கத்தில் வைத்து கடைசி போட்டியை ஆடும் வாய்ப்பு ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். எனில், தோனி அடுத்த சீசன் வரை தொடர்வாரா? என்றால் அதுவுமே சந்தேகம் என்றே சொல்லலாம். தொடர்ந்து ஆடலாம் அல்லது அடுத்தக்கட்ட வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு கிரிக்கெட் பயணத்தை இந்த சீசனோடு முடித்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே நிர்வாகம் தோனிக்காக சிறப்பு விழா நடத்தி விடைகொடுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஒரு வீரராக தோனி ஓய்வை அறிவித்தாலும் தொடர்ந்து ஒரு பயிற்சியாளராகவே ஆலோசகராகவோ சென்னை அணியுடனேயே தொடர்ந்து பயணிப்பதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது. தங்கள் அணியும் அத்தனையுமே தோனிதான் என்ற சூழலில் சிஎஸ்கே நிர்வாகமும் அதைத்தான் விரும்பும்.

எல்லா ஜாம்பவான்களுமே எதோ ஒரு கட்டத்தில் அரியாசனத்திலிருந்து இறங்கி ஓய்வே நோக்கி சென்றே ஆகதான் வேண்டும். தோனி இப்போது அந்த கட்டத்திற்கு வந்துவிட்டார். தோனி கேப்டனாக இல்லாவிட்டாலும் வீரராக ஓய்வை அறிவித்தாலும் இத்தனை ஆண்டுகாலமாக அவர் செய்த சாதனைகள் அத்தனையும் வரலாறாக என்றைக்கும் நிலைத்து நிற்கும்.

Also Read: மீண்டும் முதலிடம் பிடித்த ஜடேஜா.. IPL முதல் 5 ஆட்டங்களில் இவர்கள் கிடையாது.. காரணம் என்ன? #SportsUpdates