Sports

விளையாட்டு செய்திகள் : பயிற்சி பெற்ற அகாடமிலேயே ஷேன் வார்னே உடல் நல்லடக்கம்!

1. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோ(LOGO), மேஸ்காட்(MASCOT), டேக் லைன்(TAGLINE) உருவாக்க தேசிய அளவிலான போட்டியை தமிழ்நாடு அரசு நடத்துகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வடிவமைப்பை அனுப்புவோருக்கு பரிசு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதல் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்போர் தங்களது வடிவமைப்பை மார்ச் 26-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

2. பிரபல கிரிக்கெட் வீரரான வார்னே தனது 52வது வயதில் மார்ச் மாதம் 4ஆம் தேதி காலமானார். வார்னேவின் மறைவு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.வார்னேவின் இறப்பு குறித்த பல கட்ட விசாரணைக்கு பின் அவரது இறுதிச் சடங்கு மெல்போர்னில் இன்று நடைபெற்றது. இதில் வார்னேவின் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் என 80 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். வார்னே தனது கிரிக்கெட் பயிற்சியை தொடங்கிய செயின்ட் கில்டா அகாடமியிலேயே வார்னேவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

3. பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 19 ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து- இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 48.5 ஓவர்கள் முடிவில் 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது.இதன் மூலம் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

Also Read: T20 பாணியில் ஆசிய கோப்பை நடத்த திட்டம்.. எங்கு நடக்கப் போகிறது தெரியுமா?

4. நடப்பாண்டிற்கான மாலத்தீவுகள் ஸ்போர்ட்ஸ் அவார்ட்ஸ் பிரிவின் கீழ், ஸ்போர்ட்ஸ் ஐகான் விருது அந்நாட்டு அரசால் சுரேஷ் ரெய்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.பிரேசில் கால்பந்து வீரர் ராபர்டோ கார்லோஸ், ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் அசபா பவல், இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா உட்பட 16 சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் ரெய்னா இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

5. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம்24-ம் தேதி போர் தொடுத்தது. அன்று முதல் சுமார் 30 லட்சம் பேர் அகதிகளாக உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐ.நா.அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், உக்ரைன் குழந்தைகள் மீண்டும் கல்வியைப் பெற தனது அறக்கட்டளை வாயிலாக ‘வார் சைல்டு ஹாலந்து’ என்ற அமைப்புக்கு ரூ.3.79 கோடி நன்கொடையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Also Read: ODI கிரிக்கெட் அரங்கில் இந்திய வீராங்கனை புதிய சாதனை: ஆஸி.,க்கு எதிரான ஆட்டத்தில் நடந்த நெகிழ்ச்சி!