Sports

சரிந்தது கோலியின் சராசரி; டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான இன்னிங்ஸ் ஆடிய விராட்!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, இலங்கை 109 ரன்கள் எடுத்தது. 2வது இன்னிங்சில் இந்தியா 303 ரன்களை பதிவு செய்ய, 447 ரன்கள் வெற்றி இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.

இதில், முதல் இன்னிங்சில் கோலி 23 ரன்களும், 2வது இன்னிங்சில் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 2வது இன்னிங்சில் 16 பந்துகளுக்கு 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சுழற்பந்து வீரர் ப்ரவீன் ஜெயவிக்ரமா வீசிய பந்து கால்முட்டிக்கும் கீழ் தாழ்வாக பட்டதால் எல்.பி.டபிள்யூ முறையில் கோலி ஆட்டமிழந்தார்.

இரண்டு இன்னிங்சையும் சேர்த்து குறைவான ரன்கள் பதிவு செய்ததை அடுத்து, டெஸ்ட் அரங்கில் கோலியின் சராசரி 50க்கும் கீழ் குறைந்து 49.95 ஆக உள்ளது. இரண்டு இன்னிங்சிலும் குறைந்தது 20 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் அவரது சராசரி 50 க்கும் மேல் தொடர்ந்திருக்கும்.

சர்வதேச டெஸ்ட் அரங்கில் இதுவரை 101 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 27 சதத்துடன், 8043 ரன்களை பதிவு செய்துள்ளார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த கோலி, அதற்கு பிறகு சதத்தை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”நான் நினைச்சத விட வேற மாதிரியானவர் தோனி” - டு பிளசிஸ் கூறியது என்ன? வைரலாகும் வீடியோ!