Sports
சதங்களால் இணைந்த ஜோடி... வெஸ்ட் இண்டீஸை சாய்த்த ஸ்மிருதி மந்தனா - ஹர்மன்ப்ரீத் கூட்டணி!
பெண்களுக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது மூன்றாவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸுடன் இன்று மோதியிருந்தது. இந்தப் போட்டியை இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. அணியின் துணை கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா இருவருமே சதமடித்திருந்தனர். இவர்களின் அசத்தலான ஆட்டமே இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இந்திய அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. அணியின் பேட்டிங் ஆர்டரில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. தீப்தி சர்மா நம்பர் 4 க்கு இறக்கப்பட்டு மிதாலி ராஜ் மீண்டும் நம்பர் 3 க்கு வந்திருந்தார். மற்றபடி எந்த மாற்றமும் இல்லை. ஸ்மிருதியும் யாஸ்திகாவுமே ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர்.
இந்தக் கூட்டணியின் மனநிலையிலும் அணுகுமுறையிலுமே சில மாற்றங்கள் தென்பட்டது. அதாவது, கடந்த இரண்டு போட்டிகளிலுமே பவர்ப்ளேயில் இந்திய அணி ஓவருக்கு 3 ரன்கள் என்ற விகிதத்திலேயே ஸ்கோர் செய்திருந்தது. நியுசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் தோல்விக்கு அதுவும் மிக முக்கிய காரணமாக இருந்தது. அந்த மந்தமான ஸ்கோர் சேர்க்கும் அணுகுமுறையை இங்கே மாற்றியிருந்தனர். யாஸ்திகா அட்டாக்கிங் ரோலை எடுத்துக்கொண்டு அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்த இன்னொரு முனையில் ஸ்மிருதி மந்தனா நின்று நிதானமாக ஆடினார். யாஸ்திகாவின் அதிரடியால் முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 62 ரன்களை எடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொண்டது.
யாஸ்திகா 31 ரன்களில் அவுட் ஆன பிறகு மிதாலி ராஜ், தீப்தி சர்மா ஆகியோரும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இந்தச் சமயத்தில்தான் ஹர்மன்ப்ரீத் கவுரும் ஸ்மிருதி மந்தனாவும் கூட்டணி அமைத்தனர். இருவருமே நிலைமையை புரிந்து ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பை நல்கி சிறப்பான கூட்டணியை அமைத்திருந்தனர். ஸ்மிருதி மந்தனா செட்டில் ஆகி நின்று பெரிய இன்னிங்ஸ் ஆடுவதற்கான உதவியை ஹர்மன்ப்ரீத் கவுர் செய்தார். அவர் தொடர்ந்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தும் பவுண்டரிக்கள் அடித்தும் ஸ்மிருதியின் மீது அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். நிலைத்து நின்ற ஸ்மிருதி 66 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.
இதன்பிறகு பொறுமையை களைந்து நன்றாக பேட்டை விட்டு பெரிய ஷாட்கள் ஆடி அதிரடி காட்டத் தொடங்கினார். இன்னொரு பக்கம் ஹர்மன்ப்ரீத் கவுரும் நன்றாக ஆடிக்கொண்டிருந்ததால் ஸ்கோர் வேக வேகமாக முன்னேறியது. இருவருமே சதத்தை கடந்தனர். கடந்த உலகக்கோப்பைக்கு பிறகு 5 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் ஹர்மன்ப்ரீத் கவுர் மீண்டும் ஒரு சதத்தை அடித்திருக்கிறார். அதுவும் முக்கியமான சமயத்தில் வந்தது சிறப்பானது. ஸ்மிருதி மந்தனா கடந்த உலகக்கோப்பையிலும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சதமடித்திருந்தார். இந்த உலகக்கோப்பையிலும் அதே அணிக்கு எதிராக சதமடித்து அசத்தியிருந்தார். இருவரின் சிறப்பான ஆட்டத்தாலும் இந்திய அணி 50 ஓவர்கள் 317 ரன்களை எட்டியிருந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 318 என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதை மிக சுலபமாக எட்டிவிடும் வகையில் அவர்களின் தொடக்கம் அதிரடியாக அமைந்தது. மேத்யூஸ் மற்றும் டாட்டின் இருவருமே இந்தியாவின் பந்துவீச்சை வெளுத்தெடுத்தனர். குறிப்பாக டாட்டின் அசுரத்தனமாக ஆடினார். ஜூலன் கோஸ்வாமியின் ஓரே ஓவரில் 21 ரன்களை அடித்திருந்தனர். முதல் 12 ஓவர்களிலேயே 100 ரன்களை எட்டிவிட்டனர்.
ஆனால், இதன்பிறகே வெஸ்ட் இண்டீஸின் சரிவு தொடங்கியது. முதல் 12 ஓவர்களில் விக்கெட்டே விடாத வெஸ்ட் இண்டீஸ் அடுத்த 12 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து சொதப்பியது. வெஸ்ட் இண்டீஸின் வீழ்ச்சியை டாட்டீனை வீழ்த்தி ஸ்நே ராணா தொடங்கி வைத்தார். இந்த வீழ்ச்சியிலிருந்து வெஸ்ட் இண்டீஸால் கடைசி வரை மீள முடியவில்லை. 40.3 ஓவர்களில் ஆல் அவுட் ஆகியது. இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பௌலராக ஜூலன் கோஸ்வாமி மற்றுமொரு புதிய சாதனையை நிகழ்த்தினார்.
ஸ்மிருதி மந்தனாவுக்கு Player of the Match விருது வழங்கப்பட்டது. அந்த விருது அவர் மட்டும் வைத்துக்கொள்ளாமல் ஹர்மன்ப்ரீத் கவுரோடும் பகிர்ந்துக் கொண்டது சிறப்பான தருணமாக அமைந்தது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!