Sports
மந்தமான பேட்டிங்... 198 ரன்களுக்கு ஆல் அவுட் - நியுசிலாந்திடம் வீழ்ந்த இந்திய பெண்கள் அணி! #WomensWC
பெண்களுக்கான உலகக்கோப்பை தொடர் நியுசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் இன்று நியுசிலாந்தை எதிர்கொண்டிருந்தது. மந்தமான பேட்டிங் மற்றும் சுமாரான ஃபீல்டிங் காரணமாக இந்த போட்டியை 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றிருக்கிறது.
ஒன்றிரண்டு வாரங்களுக்கு முன்புதான் இந்திய அணி நியுசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியிருந்தது. இந்த தொடரை 1-4 என இந்திய அணி மோசமாக இழந்திருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த போட்டியை இந்திய அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
நியுசிலாந்து அணியே முதலில் பேட்டிங் செய்தது. சூசி பேட்ஸ், சோஃபி டிவைன், அமெலியா கெர் போன்ற நியுசிலாந்தின் வலுவான பேட்டிங் லைன் அப்புக்கு எதிராக இந்திய அணியின் பூஜா வஸ்தராக்கரே இந்திய அணிக்கு முதல் திருப்பத்தை பெற்றுக்கொடுத்தார். முதல் சூசி பேட்ஸை தொடக்கத்திலே ஒரு டைரக்ட் ஹிட் மூலம் ரன் அவுட் ஆக்கி அசத்தினார். அதன்பின் பவர்ப்ளேக்கு பிறகு பந்துவீசிய பூஜா சோஃபி டிவைனின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த போட்டியில் பேட்டிங்கில் பூஜா ஆடிய ஆட்டமே இந்திய அணியை காப்பாற்றியிருந்தது. இந்த போட்டியில் பௌலிங்கில் சிறப்பாக வீசி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். 10 ஓவர்களை வீசி 34 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் + 1 ரன் அவுட்டையும் நிகழ்த்தியிருந்தார்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தபோதும் ஓவருக்கு 5 ரன்கள் என்ற விகிதத்தில் நியுசிலாந்து அணியின் ஸ்கோர் முன்னேறிக்கொண்டே இருந்தது. அமெலியா கெர்ரும், சேட்டர்த்வெய்ட்டும் அரைசதம் அடித்திருந்தனர். அமெலியா கெர் இந்தியாவிற்கு எதிராக தொடர்ச்சியாக அடிக்கும் நான்காவது அரைசதம் இது. 50 ஓவர்கள் முடிவில் நியுசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்களை எடுத்திருந்தது.
சில முக்கியமான கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டிருந்த போதும் ஒட்டுமொத்தமாக இந்திய அணி நன்றாகவே பந்து வீசியிருந்தது. ஆனால், பேட்டிங்கில்தான் மொத்தமாக சொதப்பியது.
குறிப்பாக, அட்டாக்கிங்காக ஆடாமல் அதீத தற்காப்போடு மந்தமாக ஆடி கோட்டைவிட்டனர். ஸ்மிருதி மந்தனா + யஸ்திகா பாட்டியா கூட்டணி ஓப்பனிங்கில் சோபிக்கவே இல்லை. அதிகமான பந்துகளையும் விரயமாக்கியிருந்தனர். இந்த அணுகுமுறை தொடர்ந்து கொண்டே இருந்தது. முதல் 20 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. வெற்றிக்கு தேவையான ரன்ரேட் எகிற தொடங்கியது. இந்த சமயத்தில் நின்று நிதானமாக ஆடிக்கொண்டிருந்த கேப்டன் மிதாலி ராஜ் அட்டாக் செய்ய வேண்டிய நேரத்தில் சரியாக அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 56 பந்துகளில் 31 ரன்களை மட்டுமே அவர் எடுத்திருந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தபோதும் ஹர்மன்ப்ரீத் கவுர் மட்டும் ஒரு முனையில் நின்று ஆடினார். அரைசதம் கடந்த பிறகு அதிரடியாகம் ஆட ஆரம்பித்தார். ஆனால், அவராலும் இந்திய அணியை காப்பாற்ற முடியவில்லை. 198 ரன்களுக்கு அணி ஆல் அவுட் ஆனது. 62 ரன்கள் வித்தியாசத்தில் நியுசிலாந்து வென்றது.
இந்திய அணி இதுவரை ஆடியிருக்கும் இரண்டு போட்டியில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை அடைந்திருக்கிறது. தற்காப்பாக ஆடாமல் அட்டாக்கிங்காக ஆடும்பட்சத்திலேயே இந்திய அணி தோல்வியை தவிர்த்து வெற்றிகளை குவித்து அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?