Sports
சதுரங்க கட்டங்களில் நடந்த மூன்றாம் உலகப்போர்... இந்த வரலாறு தெரியுமா?
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனை மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமோ எனும் கேள்வியும் ஐயப்பாடும் எழுந்துள்ளது. ஆனால், மூன்றாம் உலகப்போர் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டதாக வரலாறு சொல்கிறது. ஆனால், அது ஏவுகணைகளாலும் பீரங்கிகளாலும் நிகழ்த்தப்பட்டதல்ல. சதுரங்க கட்டங்களில் நிகழ்த்தப்பட்டது.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது. இராணுவம், அணு ஆயுதம், விண்வெளி ஆராய்ச்சி என அத்தனை துறைகளிலும் ஒருவரை ஒருவர் வீழ்த்தி வல்லாதிக்கத்தை நிரூபிக்க இருதரப்பும் மூர்க்கத்தனமாக முயன்று கொண்டிருந்தது. ஸ்புட்னிக்கும் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் சந்திர விஜயமும் இந்த பனிப்போரின் பலன்களே. 'நீங்கள் செயற்கைக்கோளை அனுப்பினால், நாங்கள் மனிதனையே விண்ணுக்கு அனுப்புவோம்' என சோவியத்திற்கு அமெரிக்கா சவால்விட்டது. இது அனைவருக்கும் தெரிந்த ஒரு உதாரணம். ஆனால், அத்தனை துறைகளிலும் இருதரப்பும் இப்படித்தான் செயல்பட்டது. ஒருவரின் வளர்ச்சியை முன்னேற்றத்தை இன்னொருவரால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.
சீறிப்பாய்ந்து கொண்டிருந்த இந்த வல்லாதிக்க ரேஸ் 1972 ஆம் ஆண்டில் 64 கட்டங்களுக்குள் அடைபட்டு போனது. ராக்கெட்டுகளை ஏவி அணு ஆயுதங்களை விதைத்து சண்டையிட்ட மேற்குலகமும் சோவியத்தும் சதுரங்க கட்டத்திற்குள் தங்கள் போரை நிகழ்த்த தொடங்கியது.
சதுரங்கம், சோவியத் ரஷ்யாவின் பாரம்பரிய விளையாட்டு. சதுரங்கம் ஆடுவதை ரஷ்யர்கள் பெருமையாக கருதினர். லெனின் உட்பட சோவியத் தலைவர்களுமே சதுரங்க ஆட்டத்தில் பெரும் ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். அறிவுசார்ந்து சோவியத் யூனியனின் மேன்மையை உலகுக்கு எடுத்துக்காட்டும் ஆட்டமாக சதுரங்கம் இருப்பதாக பெருமிதம் கொண்டனர். உலக அளவிலான போட்டிகளில் ரஷ்ய வீரர்களின் வெற்றியும் ஆதிக்கமும் சதுரங்கத்தை ரஷ்யர்களின் ஆட்டமாகவே மாற்றிவிட்டது. மற்ற நாட்டு வீரர்களின் ஆட்டமெல்லாம் எடுபடவே இல்லை. எவ்வளவு பெரிய அறிவுஜீவியாக இருந்தாலும் அது தங்கள் நாட்டுக்குள்தான். உலகளாவிய போட்டிகள், குறிப்பாக உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் என்றால் ரஷ்யர்கள் மட்டுமே எனும் நிலை இருந்தது. இன்னும் குறிப்பாக சதுரங்கத்தில் அமெரிக்காவால் கூட சோவியத் வல்லாதிக்கத்தை உடைக்கவே முடியவில்லை.
1948 லிருந்து 1972 வரை 24 ஆண்டுகளாக உலக செஸ் சாம்பியன்கள் அத்தனை பேரும் ரஷ்யர்களே. சாம்பியன்கள் மட்டுமில்லை அவர்களை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாமிடம் பிடித்தவர்கள் அத்தனை பேருமே கூட ரஷ்யர்கள்தான். அமெரிக்கர்களால் இறுதிப்போட்டிக்கு கூட முன்னேற முடியவில்லை. ஆனால், இதெல்லாம் 1972 வரைக்கும்தான். 1969 இல் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த மூன்றே ஆண்டுகளில் சதுரங்கத்திலும் சோவியத்தின் வல்லாதிக்கத்தை முறியடித்து அமெரிக்கா தனது தடத்தை பதித்தது. சதுரங்கத்தில் அமெரிக்காவிற்காக கொடியை நட்டவர் பாபி ஃபிஸ்சர்.
அமெரிக்கரான பாபி ஃபிஸ்சர் இளம் வயதிலேயே சதுரங்கத்தில் வல்லவராக திகழ்ந்தார். 12-13 வயதிலேயே அமெரிக்காவின் மிகப்பெரிய வீரர்களை தோற்கடிக்கும் அளவுக்கு திறனை பெற்றிருந்தார். சதுரங்க வரலாற்றில் மிக முக்கிய வீரராக உயர்வார் என அப்போதே அனுமானிக்கப்பட்டார். ஆனால், பாபி ஃபிஸ்சர் சதுரங்க வரலாற்றில் மட்டுமல்ல, அமெரிக்க-சோவியத் யூனியன் பனிப்போர் வரலாற்றிலேயே மிக முக்கிய நபராக உயர்ந்தார். அமெரிக்காவின் ஹீரோவாக கொண்டாடப்பட்டார். காரணம், ஃபிஸ்சர் ஒரு ரஷ்ய வீரரை தோற்கடித்து உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.
1948 லிருந்தே ரஷ்யர்கள்தான் உலக சாம்பியன்களாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தனர். இந்த வரிசையில் 1969 ஆம் ஆண்டில் ரஷ்யாவை சேர்ந்த போரிஸ் ஸ்பாஸ்க்கி உலக சாம்பியன் ஆகியிருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும். அதன்படி, 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் போரிஸ் ஸ்பாஸ்க்கியை எதிர்த்து போட்டியிட்டவர் பாபி ஃபிஸ்சர். ஐஸ்லாந்தின் தலைநகரமான ரேக்கவிக்கில் இந்த போட்டி நடந்திருந்தது.
இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் நேருக்கு நேர் நின்று தங்கள் படைகளோடு போரிடுவதை போன்றுதான் இருநாடுகளும் இந்த போட்டியை பாவித்தன. எப்படியும் ரஷ்ய வீரரே வெல்வார் என்பதே பெரும்பாலானோரின் கணிப்பாக இருந்தது. பாபி ஃபிஸ்சரை ஒரு பொடியனாகத்தான் சோவியத் யூனியன் பார்த்தது. ஆனால், பாபியோ சோவியத் யூனியனும் ஸ்பாஸ்க்கியும் தன்னைக் கண்டு அஞ்சுவதாகவும் தான்தான் வெல்லப்போவதாகவும் வெளிப்படையாக அறிவித்தார்.
இத்தனை ஆர்வமாகப் பேசிய இந்த பாபி ஃபிஸ்சர்தான் ஸ்பாஸ்க்கிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பாக பல குட்டி கலாட்டாக்களை அரங்கேற்றி அதகளப்படுத்தினார். அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத்தொகை எனக்கு போதாது. அதை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் ஊடகங்கள் என்னை புகைப்படம் எடுக்கக்கூடாதென்றும் எக்கச்சக்க கட்டுப்பாடுகளை விதித்தார். அடம்பிடித்த ஃபிஸ்சர் போட்டியின் தொடக்கவிழாவில் கூட பங்கேற்கவில்லை. ரஷ்ய வீரரை வீழ்த்தும் அளவுக்கு திறன்படைத்தவர் என அறியப்பட்டவர் இப்படி வினோதமாக நடந்து கொள்வதேன்? இத்தனைக்கும் ஒட்டுமொத்த அமெரிக்காவும் பாபியை தோளில் தூக்கி வைத்து கொண்டாட தயாராக இருந்ததே? ஃபிஸ்சர் அப்படித்தான். சிறுவயதிலிருந்தே ஒருவித மனக்குழப்பம் மன இறுக்கம் கொண்ட நபராகவே ஃபிஸ்சர் இருந்தார். இந்த மனப்பிரச்சனையால் பெரும் கோபங்கொண்டு பல சமயங்களில் சதுரங்கத்தை விட்டே ஓடியிருக்கிறார். ஸ்பாஸ்க்கிக்கு எதிரான போட்டிக்கு முன்பான தயாரிப்பு நாட்களில் ரஷ்யா தன்னை உளவுபார்ப்பதாக எண்ணி மன உளைச்சலுக்குள்ளானர். CIA, KGB போன்றவற்றால் தன் உயிருக்கே பாதிப்பு வரும் என தேவையின்றி அச்சமுற்றார். மனக்குழப்பத்திற்கு சரியான சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளாததால் பின்நாட்களில் ஃபிஸ்சர் பெரும் துன்பங்களை சந்தித்தார். அதை பின்னால் பார்ப்போம்.
முரண்டு பிடித்துக் கொண்டிருந்த ஃபிஸ்சருக்கு வெள்ளை மாளிகையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போதைய அமெரிக்க அதிபரான நிக்சனின் வெளியுறவுத்துறை ஆலோசகரான ஹென்றி கிஸ்ஸன்ஜர் ஃபிஸ்சரிடம் பேசினார். நிக்சன் இந்த போட்டியை காண ஆவலாக இருப்பதாகவும் அமெரிக்காவிற்கு இந்த போட்டி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றெல்லாம் எடுத்துக் கூறினார். ஒருவழியாக போட்டியில் ஆட ஃபிஸ்சர் ஒத்துக்கொண்டார். கிஸ்ஸன்ஜர் பேசியதாலோ அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை நிரூபிக்க இந்த போட்டி முக்கியம் என்பதாலோ அல்ல. தான் விதித்த கட்டுப்பாடுகளுக்கு செஸ் கூட்டமைப்பு ஒத்துக்கொண்டதால் மட்டுமே.
20ஆம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த சதுரங்க ஆட்டம் எனக்கூறப்பட்ட ரஷ்யாவை சேர்ந்த போரிஸ் ஸ்பாஸ்க்கிஸ் Vs அமெரிக்காவை சேர்ந்த பாபி ஃபிஸ்சர் போட்டி தொடங்கியது. மொத்தம் 24 சுற்றுகள். முதலில் 12.5 புள்ளிகளை எடுக்கும் வீரர் உலக சாம்பியன் ஆவார். 12-12 என போட்டி டை ஆனால் ஏற்கனவே உலக சாம்பியனாக இருக்கும் ஸ்பாஸ்க்கியே சாம்பியனாக தொடர்வார்.
நிக்சன் Vs ப்ரெஶ்னஃப், அமெரிக்கா Vs சோவியத் யூனியன் பனிப்போர் இந்த முறை 64 கட்டங்களுக்குள்.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த போட்டி தொடங்கிய பிறகும் பாபி ஃபிஸ்சரின் அலும்பு குறையவில்லை. முதல் சுற்று ஆட்டங்கள் நடந்துக் கொண்டிருந்த சமயத்தில், கருப்பு காய்களோடு ஆடிக்கொண்டிருந்த ஃபிஸ்சர் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த தொலைக்காட்சி கேமராக்களும் பார்வையாளர்களும் தன்னுடைய கவனத்தை சிதற செய்வதாக பிரச்சனையை கிளப்பினார். இந்த கலாட்டாவில் முதல் சுற்றை ஸ்பாஸ்க்கி எளிதில் வென்றார்.
ஒட்டுமொத்த அமெரிக்காவும் நம்மை நம்பி காத்திருக்கிறதே எனும் கவலை ஃபிஸ்சருக்கு துளியும் இல்லை. வேறு சதுரங்க பலகை, புதிய தொந்தரவுகளற்ற போட்டி அறை, சத்தம் எழுப்பாத நேரடி ஒளிபரப்பு கேமராக்கள் இவையெல்லாம் இருந்தால்தான் போட்டியில் பங்கேற்பேன் எனக்கூறி இரண்டாம் சுற்றை புறக்கணித்தார். இதனால் ஸ்பாஸ்க்கி இரண்டாம் சுற்றையும் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
தன்னுடைய நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் போட்டியில் கலந்துக்கொள்வேன் என ஃபிஸ்சர் பிடிவாதமாக இருந்தார். ஸ்பாஸ்க்கி இறங்கி வந்தார். ஃபிஸ்சரின் நிபந்தனைகளுக்கு நானும் ஒத்துக்கொள்கிறேன் என ஸ்பாஸ்க்கி பெரிய மனுசனாக நடந்துக்கொண்டார். ஒருவழியாக ஃபிஸ்சர் மூன்றாவது சுற்றுக்கு வந்தார். இரண்டு சுற்றுகளின் வெற்றியோடு முன்னிலையில் ஸ்பாஸ்க்கி இருக்க மூன்றாவது சுற்று தொடங்கியது. ஃபிஸ்சரின் ஓப்பனிங் மூவ்களே ஸ்பாஸ்க்கியை திணறடித்தன. தொடக்க தடுமாற்றத்திலிருந்து மீளாத ஸ்பாஸ்க்கி மூன்றாவது சுற்றை இழந்தார். நான்காவது சுற்று ட்ரா ஆனது. ஐந்தாவது சுற்றையும் ஃபிஸ்சரே வென்றார்.
இருவரும் 2.5 புள்ளிகளோடு சமநிலைக்கு வந்தனர். ஆறாவது போட்டி தொடங்கியது. நூற்றாண்டின் மிகச்சிறந்த ஆட்டமாக கூறப்பட்ட இந்த ஆட்டத்தின் மிகச்சிறந்த கேமாக இந்த ஆறாவது கேமே கருதப்படுகிறது. இங்கேயும் ஃபிஸ்சரின் தொடக்க மூவ்களே திணறடிக்க ஸ்பாஸ்க்கி இந்த சுற்றையும் இழந்தார். 21 வது சுற்று வரை நீண்ட இந்த போட்டியில் முதல் நபராக 12.5 புள்ளிகளை எடுத்து ஃபிஸ்சர் வெற்றியை பெற்றார். புதிய உலக சாம்பியன் ஆனார்.
மிக்கேல் புட்வினிக், ஸ்மிஸ்லோவ், பெட்ரோசியன், ஸ்பாஸ்க்கி என ரஷ்ய பெயர்களாலயே நிரம்பியிருந்த உலக செஸ் சாம்பியன்களின் பட்டியலில் முதல் முறையாக ஒரு அமெரிக்கரின் பெயர் இணைந்தது. சதுரங்க போரில் சோவியத் யூனியனின் வல்லாதிக்கத்தை முறியடித்து பாபி ஃபிஸ்சர் அமெரிக்காவின் ஹீரோவானார்.
இன்றைக்கு வரைக்குமே ரஷ்யாவில் சதுரங்கம் என்பது ஒரு மானப் பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. 2016 இல் நடப்பு சாம்பியனான நார்வேயை சார்ந்த மேக்னஸ் கார்ல்சனுக்கும் ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகினுக்கும் இடையே உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடந்திருந்தது. கர்ஜாகின் 2014க்கு முன்பு வரை உக்ரைனின் பகுதியாக இருந்த க்ரிமியாவில் பிறந்தவர். இளம் வயதில் ரஷ்ய குடிமகனாக மாறியவர். 2014இல் க்ரிமியாவை ரஷ்யா கைப்பற்றியதற்கு முழு ஆதரவு நிலைப்பாடை கொண்டவர் கர்ஜாகின். அதேநேரத்தில், NATO வில் அங்கம் வகிக்கும் கார்ல்சனின் நார்வே ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாடை எடுத்தது. பல நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாடை எடுத்திருந்தது.
இந்த அரசியல் பின்னணியால் கர்ஜாகின் Vs கார்ல்சன் போட்டியும் பெரும் முக்கியத்துவத்தை பெற்றிருந்தது. ரஷ்ய ஹேக்கர்கள் கார்ல்சனின் கணினியை ஊடுருவி அவரின் யுக்திகளை அறிந்துக்கொள்ளும் அபாயம் இருப்பதால் கார்ல்சன் மைக்ரோசாப்ட்டின் உதவியை நாடியதாகவும் செய்தி உண்டு. பால்டிக் கடல் பகுதியில் போர்க்கப்பல்களை நிறுத்தி ரஷ்யா இன்னும் பரபரப்பை கிளப்ப, கார்ல்சன் Vs கர்ஜாகின் போட்டியை உலகம் முழுக்க 100 கோடிக்கும் அதிகமானோர் இணையத்தில் பார்வையிட்டனர். இறுதியில் நார்வேயின் கார்ல்சனே போட்டியை வென்று உலக சாம்பியன் ஆனார். கடந்த டிசம்பரில் மீண்டும் இன்னொரு ரஷ்ய வீரரான இயன் நெப்போம்னியாச்சையும் வீழ்த்தி கார்ல்சன் 5 வது முறையாக உலக சாம்பியன் ஆனார். ரஷ்யர்கள் அமெரிக்கர்கள் என சதுரங்கத்தின் ஆதிக்கவாதிகளை வீழ்த்திய பிறகும் ரஷ்ய ஜாம்பவான்களான கேரி காஸ்பரோவ் போன்றவர்களால் கார்ல்சனை முழுமையாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இப்போதே இப்படியென்றால் பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த அந்த சமயத்தில் இருதரப்பிலும் எப்படியான பரபரப்புகள் இருந்திருக்கும் என்பதை உணரும்போதுதான் பாபி ஃபிஸ்சரின் வெற்றியை முழுமையாக உணர முடியும்.
பனிப்போரின் முக்கிய நபராக அமெரிக்காவின் சூப்பர் ஹீரோவாக உயர்ந்த பாபி ஃபிஸ்சர் ஸ்பாஸ்க்கியை வீழ்த்திய போது அவரின் வயது 29 மட்டுமே. தாராளமாக இன்னும் பல ஆண்டுகளுக்கு செஸ் ஆடி தனி சகாப்தத்தை அவரால் உருவாக்கியிருக்க முடியும். ஆனால், பிஸ்சர் அந்த நூற்றாண்டு சிறப்புமிக்க போட்டிக்கு பிறகு அதிகாரப்பூர்வமான செஸ் போட்டிகளில் ஆடவே இல்லை. மனரீதியாக அவர் ரொம்பவே பாதிக்கப்பட்டார். அமெரிக்கா தன்னை பயன்படுத்திவிட்டு தூக்கியெறிவதாக எண்ணினார். அமெரிக்காவிற்கு எதிராகவே சகட்டுமேனிக்கு பேசினார். ஹீரோவாக கொண்டாடப்பட்டவர் சிறையிலெல்லாம் தள்ளப்பட்டார். நாட்டைவிட்டு வெளியேறினார். ஸ்பாஸ்க்கியை வென்ற ஐஸ்லாந்தில் குடியேறினார். 2008 இல் இறந்துபோனார்.
சதுரங்க கட்டங்களில் நடந்த மூன்றாம் உலகப்போரை அமெரிக்காவிற்காக வென்று கொடுத்தவருக்கு இப்படியொரு முடிவு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
இவரின் வாழ்வை இவரின் குணாதிசயத்தை இவரின் ஆட்ட நுணுக்கங்களை மையப்படுத்தி பல புத்தகங்களும் சினிமாக்களும் சீரிஸ்களும் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்ற Queen's Gambit இணையத்தொடரின் மையக் கதாபாத்திரத்திலும் இவருடைய தாக்கம் உண்டு.
Also Read
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்