Sports
ஆஸி., ஓபன் டென்னிஸ் : புதிய வரலாற்றுக்கு நடால்; அடுத்த அத்தியாயத்துக்கு மெத்வதேவ் - வெல்லப்போவது யார்?
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நேற்று நடந்த பெண்களுக்கான இறுதிப்போட்டியில் ஆஷ்லே பார்ட்டி ஆஸ்திரேலிய ஓபன் டைட்டிலை வென்றிருந்தார். இந்நிலையில், இன்று ஆண்களுக்கான இறுதிப்போட்டி நடக்கவிருக்கிறது. அதில், ரபேல் நடாலும் டேனில் மெத்வதேவும் மோதவிருக்கின்றனர்.
டென்னிஸ் உலகில் Big 3 என அழைக்கப்படும் ஃபெடரர், நடால், ஜோக்கோவிச் மூவருமே தலா 20 முறை க்ராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருக்கின்றனர். 21 வது பட்டத்தை வெல்பவர் டென்னிஸ் வரலாற்றிலேயே அதிக க்ராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவர் எனும் சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். இந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் காயம் காரணமாக ஃபெடரரும் தடுப்பூசி சர்ச்சை காரணமாக ஜோக்கோவிச்சும் பங்கேற்கவில்லை. இதனால், 21 வது க்ராண்ட்ஸ்லாமை வென்று வரலாறு படைக்கும் வாய்ப்பு நடாலுக்கு கிடைத்திருக்கிறது.
ஆஸ்திரேலிய ஓபனில் நடாலுக்கு இது 6 வது இறுதிப்போட்டி ஆகும். இதற்கு முன் ஆடிய 5 இறுதிப்போட்டிகளில் 2009 ஆம் ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே ஆஸ்திரேலிய ஓபனை வென்றிருக்கிறார். அந்த இறுதிப்போட்டியில் நடால் ஃபெடரரை தோற்கடித்திருப்பார். அதன்பிறகு, ஆடிய நான்கு ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியிலுமே நடால் தோற்றிருக்கிறார். ஜோக்கோவிச்சிற்கு எதிராக இரண்டு முறையும் ஃபெடரருக்கு எதிராக ஒரு முறையும் வாவ்ரிங்காவிற்கு எதிராக ஒரு முறையும் தோற்றிருக்கிறார். இப்போது 6 வது முறையாக இறுதிப்போட்டியில் மெத்வதேவுடன் மோதவிருக்கிறார்.
ரபேல் நடால் சமீபமாக காயங்களால் ரொம்பவே அவதிப்பட்டிருக்கிறார். குறிப்பாக, பாதத்தில் அவருக்கு இருக்கும் அசௌகரியத்தால் கடந்த ஆண்டில் விம்பிள்டண், டோக்கியோ ஒலிம்பிக்ஸ், அமெரிக்க ஓபன் என பெரிய தொடர்களையெல்லாம் தவறவிட்டிருந்தார். சிகிச்சை மற்றும் ஓய்விற்கு பிறகு மீண்டு வந்த நடால் கடந்த டிசம்பரில் மீண்டும் டென்னிஸ் ஆட ஆரம்பித்தார். மீண்டும் ஒரு சோதனை வந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
அதிலிருந்து மீண்டு மீண்டும் புது உத்வேகத்துடன் ஆஸ்திரேலிய ஓபனுக்கு வந்திருந்தார். ஜோக்கோவிச் இல்லாததால் நடாலே இந்த ஆஸ்திரேலியன் ஓபனை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டது. அதன்படியே சிறப்பாக ஆடி சுற்று போட்டிகள் மற்றும் நாக் அவுட்டை தாண்டி இறுதிப்போட்டிக்கும் வந்துவிட்டார்.
நடாலுக்கு 35 வயதாகிறது. அவரை எதிர்த்து இறுதிப்போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த 25 வயதான டேனில் மெத்வதேவ் களமிறங்க இருக்கிறார். மெத்வதேவ் Big 3 க்கு பிறகான அடுத்த தலைமுறையின் மிக முக்கியமான வீரராக பார்க்கப்படுகிறார். இன்றைய தேதிக்கு உலகின் நம்பர் 2 வீரராக இருக்கிறார். மெத்வதேவுக்கு இது நான்காவது க்ராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டி ஆகும். ஒரே ஒரு முறை க்ராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருக்கிறார். அதுவும் ஜோக்கோவிச்சை வீழ்த்தி. அது சாதாரண வெற்றி இல்லை. கடந்த 2021 அமெரிக்க ஓபனில் அது நிகழ்ந்திருந்தது. ஜோக்கோவிச் அந்த ஆண்டில் அதற்கு முந்தைய மூன்று க்ராண்ட்ஸ்லாம்களை வென்றிருந்தார். அந்த ஆஸ்திரேலிய ஓபனையும் வென்றால் அது கோல்டன் ஸ்லாமாக வரலாற்று வெற்றியாக இருக்கும்.
மேலும், 21 வது க்ராண்ட்ஸ்லாமை வென்று சாதனையும் படைக்கலாம் என்ற நிலையில் ஜோக்கோவிச்சை மெத்வதேவ் வீழ்த்தியிருந்தார். ஒரு மிகப்பெரிய வரலாற்று நிகழ்வை நிகழவிடாமல் தடுத்து தனது அழுத்தமாக பதிவு செய்தார் மெத்வதேவ். இப்போது நடாலுக்கு எதிராகவும் அப்படி ஒரு சம்பவத்தை செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. கடந்த ஆஸ்திரேலிய ஓபனிலும் மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். ஆனால், ஜோக்கோவிச்சிடம் தோற்றிருந்தார். நடாலுடன் இதற்கு முன்பு 2019 அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் மோதி அதில் தோற்றிருக்கிறார்.
நடால், மெத்வதேவ் இருவரும் இதற்கு முன் மொத்தமாக 4 முறை நேருக்கு நேர் மோதியிருக்கின்றனர். அதில், 3 முறை நடாலும் ஒரே ஒரு முறை மெத்வதேவும் வென்றிருக்கின்றனர். இருவருமே இந்த ஆஸ்திரேலிய ஓபனில் ஒரே மாதிரியாகவே ஆடியிருக்கின்றனர். நான்கு போட்டிகள் கொண்ட சுற்று போட்டிகளில் இருவருமே ஒரே ஒரு செட்டை மட்டுமே இழந்திருந்தனர். காலிறுதியில் இருவருமே 5 செட்கள் வரை ஆடியிருந்தனர். அரையிறுதியில் இருவருமே 4 செட்கள் வரை ஆடியிருந்தனர்.
புதிய வரலாற்றை படைக்க நடால் களமிறங்குகிறார். அந்த வரலாற்றை நிகழவிடாமல் தடுத்து டென்னிஸ் உலகின் அடுத்த அத்தியாயத்தை எழுத மெத்வதேவ் களமிறங்குகிறார். வெல்லப்போவது யார்?
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?