Sports
21 வது GRAND SLAM.. மெத்வதேவை வீழ்த்தி வரலாறு படைத்தார் நடால்!!
5 மணி நேரம் 24 நிமிடங்கள் நீடித்த ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் இறுதிப்போட்டியில் மெத்வதேவை வீழ்த்தி நடால் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். இதன்மூலம், டென்னிஸ் வரலாற்றிலேயே அதிகமாக 21 க்ராண்ட்ஸ்லாம்களை வென்ற வீரர் எனும் பெருமையையும் பெற்றிருக்கிறார். நடால் Vs மெத்வதேவ் இந்த இறுதிப்போட்டி க்ராண்ட்ஸ்லாம் வரலாற்றில் மிக முக்கிய போட்டிகளில் ஒன்றாக நிச்சயம் பதிவாகும். அத்தனை சுவாரஸ்யங்களை இந்த போட்டி பொதிந்து வைத்திருந்தது.
"நாம் அனைவரும் போர் செய்ய வேண்டும், போராட்ட குணத்தையும் கைவிடக்கூடாது. நான் இங்கு நிற்பதற்கு இவை மட்டுமே காரணம். இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது! - ரஃபேல் நடால்.
மத்தேயு பெரிட்டினிக்கு எதிரான அரையிறுதியில் வென்றுவிட்டு நடால் இப்படி பேசியிருந்தார். உண்மையிலேயே மெத்வதேவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் நடால் போர்தான் செய்திருக்கிறார்.
5 மணி நேரம் 24 நிமிடம் நடந்த இந்த போட்டியின் முதல் ஒன்றிரண்டு மணி நேரங்கள் ஆட்டம் மொத்தமும் மெத்வதேவின் கையிலேயே இருந்தது. முதல் இரண்டு செட்களையுமே கூட அவர்தான் வென்றிருந்தார். 6-2 என முதல் செட்டை வென்றவர், இரண்டாவது சுற்றில் டை ப்ரேக்கர் வரை சென்று 7-6 என வென்றிருப்பார். அங்கேயே போட்டி முடிந்துவிட்டதாகத்தான் தோன்றியது. மெத்வதேவ் மூன்றாவது செட்டையும் வென்று நேர் செட் கணக்கில் போட்டியை வென்றுவிடுவார் என்றே கணிக்கப்பட்டது. கடைசியாக அமெரிக்க ஓபனில் நடாலை போன்றே 21 வது க்ராண்ட்ஸ்லாம் கனவோடு களமிறங்கிய ஜோக்கோவிச்சையும் மெத்வதேவ் அப்படி நேர் செட் கணக்கில்தான் தோற்கடித்திருப்பார். ஆர்தர் ஆஷ் மைதானத்தில் நடந்த நிகழ்வுகள் அப்படியே ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பார்க்கிலும் நிகழ்வதற்கான சூழல் உருவாகியிருந்தது.
ஆனால், நடால் ஒரு மாயவித்தைக்காரர். அவரின் மந்திரக்கோல் இதன்பிறகுதான் வேலை செய்ய தொடங்கியது. மேஜிக் ஷோவில் மேஜிக் மேன் நம்மை ஏமாற்றும்போதும் அந்த ஏமாற்றத்தின் விளைவாக ஒரு மேஜிக் நிகழும்போதே நாம் பூரிப்படைவோம். அந்தவகையில் நடாலும் ஒரு மேஜிக் மேனை. முதல் இரண்டு செட்களில் நம்மை ஏமாற்றும் வேலையில் இறங்கியிருந்தார். இதன்பிறகுதான், தனது மேஜிக்கை நிகழ்த்த ஆரம்பித்தார்.
அடுத்த மூன்று செட்களும் அப்படியே நடாலின் கையசைவுக்கு ஒப்ப நடந்து முடிந்தது. முதல் இரண்டு செட்களிலும் தோற்ற நடால் அடுத்த 3 செட்களையுமே வென்று வரலாறு படைத்தார். அத்தனை கணிப்புகளையும் சுக்குநூறாக்கி போட்டார். எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் எழுந்து போராடுவதற்காகவே பிறந்தவன் என்பதை ஒவ்வொரு கேமிலுமே நிரூபித்திருந்தார். கடைசி செட்டின் கடைசி கேம் வரை மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டே இருந்தார். இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக இரண்டு செட்களை இழந்து போட்டியை இழக்கும் நிலையில் இருந்த நடாலா இது எனும் ஆச்சர்யத்தை உண்டாக்கினார். 35 வயதுமிக்க ஒருவர் தனது கரியரின் கடைசிக்கட்டத்தில் காயங்களோடு போராடிக்கொண்டிருப்பவர் துடிப்பான 25 வயது இளைஞரான மெத்வதேவிற்கு எதிராக நிகழ்த்தியிருக்கும் போராட்டமே நடாலுக்கு வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை பெற்று கொடுத்திருக்கிறது.
35 வயதாகும் நடால், 25 வயதான மெத்வதேவிற்கு எதிராக முதல் இரண்டு செட்டையும் தோற்ற நிலையில் அடுத்த மூன்று செட்களையும் வென்று ஆஸ்திரேலிய ஓபனை வென்றிருக்கிறார்.
'Big 3' என அழைக்கப்படும் ஃபெடரர், நடால், ஜோக்கோவிச் மூவருமே தலா 20 க்ராண்ட்ஸ்லாம்களை வென்று சமநிலையில் இருந்தனர். இந்த வெற்றி மூலம் 21 க்ராண்ட்ஸ்லாம்களை வென்று டென்னிஸ் வரலாற்றில் அதிக க்ராண்ட்ஸ்லாம்களை வென்ற வீரர் எனும் பெருமையை நடால் பெறுகிறார்.
ஆஸ்திரேலிய ஓபனில் இதற்கு முன் 5 முறை நடால் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தார். அந்த ஐந்தில் ஒரே ஒரு முறை மட்டுமே டைட்டிலை வென்றிருந்தார். 2009 இல் ஃபெடரருக்கு எதிராக அந்த சம்பவம் நிகழ்ந்திருந்தது. இப்போது இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபனை வென்றிருக்கிறார்.
இத்தனைக்கு கடந்த ஆண்டு முழுவதும் நடாலுக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் பிரெஞ்சு ஓபனில் நாக் அவுட்டில் தோல்வி. விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபனில் காயம் காரணமாக கலந்துக்கொள்ளவில்லை. காயத்திலிருந்து மீண்டு வந்தபிறகு கொரோனா பாதிப்பு. இது அத்தனையையும் தாண்டிதான் இப்போது இவ்வளவு பெரிய சரித்திர சாதனையை செய்திருக்கிறார்.
நடாலின் சக போட்டியாளர்களான ஃபெடரரும் ஜோக்கோவிச்சும் 31 க்ராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிகளில் ஆடி 20 முறை வென்றிருக்கின்றனர். ஆனால், நடாலோ 29 இறுதிப்போட்டிகளில் மட்டுமே ஆடி வரலாற்று சிறப்புமிக்க வகையில் 21 க்ராண்ட்ஸ்லாம்களை வென்றிருக்கிறார். ஃபெடரருக்கும் ஜோக்கோவிச்சுக்கும் இனி 21 வது க்ராண்ட்ஸ்லாம் என்பது இலக்காக இருக்காது. நடாலை முந்த வேண்டும் என்பதே இலக்காக இருக்கும். ஆனால், அவ்வளவு எளிதல்ல இது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?