Sports
லக்னோவிற்கு ராகுல்.. அகமதாபாத்திற்கு ஹர்திக் : IPL புதிய அணிகள் ஒப்பந்தம் செய்திருக்கும் வீரர்கள் யார்?
2022ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய நகரங்களை மையமாகக் கொண்ட இரண்டு அணிகள் புதிதாக களமிறங்க இருக்கின்றன. இந்த அணிகள் தங்களுக்கான வீரர்களை ஒப்பந்தம் செய்திருக்கின்றன. லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலும் அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.
இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடருக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக ஏற்கனவே இருந்த 8 அணிகளும் தலா 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அத்தனை அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தன. புதிதாக களமிறங்கியுள்ள லக்னோ, அகமதாபாத் அணிகளுக்கு வீரர்களக் தக்கவைக்கும் வாய்ப்பு இல்லாததால், மெகா ஏலத்திற்கு முன்பாக இரண்டு அணிகளும் நேரடியாக தங்களுக்கு தேவையான மூன்று வீரர்களை ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த வீரர்களின் பட்டியலைத்தான் இரு அணிகளும் இப்போது வெளியிட்டுள்ளன.
இதன்படி லக்னோ அணிக்கு கே.எல்.ராகுல் 17 கோடிக்கும் ஸ்டாய்னிஸ் 9.2 கோடிக்கும் ரவி பிஷ்னோய் 4 கோடிக்கும் ஒப்பந்தமாகியுள்ளனர். கே.எல்.ராகுலே லக்னோ அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா 15 கோடிக்கும் ரஷீத் கான் 15 கோடிக்கும் சுப்மன் கில் 8 கோடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட இருக்கிறார்.
இரண்டு அணிகளுமே தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலில் சில ஒற்றுமைகள் இருக்கிறது. லக்னோவின் கேப்டனான கே.எல்.ராகுல் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன். அகமதாபாத் ஒப்பந்தம் செய்திருக்கும் சுப்மன் கில்லும் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன். அதேமாதிரி, லக்னோவில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஸ்டாய்னிஸ் இருக்க அகமதாபாத்தில் அதே ரோலை செய்ய ஹர்திக் பாண்ட்யா இருக்கிறார். லெக் ஸ்பின்னராக லக்னோ அணிக்கு ரவி பிஷ்னோய் இருக்க அகமதாபாத் அணிக்கு ரஷீத் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு அணிகளும் ஒரே மாதிரியான ரோல்களை செய்யும் வீரர்களை தக்கவைத்திருப்பது சுவாரஸ்யமான விஷயமாக இருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!