Sports

இந்தியா Vs பாகிஸ்தான் மீண்டும் ஒரு பரபர மோதல் - வெளியானது டி20 உலகக்கோப்பை அட்டவணை!

2022 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்த முறையும் நேருக்கு நேர் மோதவிருக்கின்றன.

2020 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வைத்தே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக அந்த தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டும் டி20 உலகக்கோப்பையை நடத்துவதை விட இந்தியா Vs ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் தொடரை நடத்துவதிலேயே குறியாக இருந்தது. இதனால், அந்த டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற முடியாமல் போனது. 2021 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பையை இந்தியா நடத்தியிருந்தது. இந்த தொடர் முழுவதுமே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்திருந்தது. ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இந்தியா மோசமான தோல்வியை சந்தித்திருந்தது.

இந்நிலையிலேயே 2022 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை ஐ.சி.சி இப்போது வெளியிட்டுள்ளது. அக்டோபர் 16 முதல் தொடங்கும் இந்த தொடர் நவம்பர் 13 வரை நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் மொத்தம் 7 மைதானங்களில் இந்த தொடர் நடைபெறுகிறது.

முதல் சூப்பர் 12 சுற்றுக்கான தகுதிப்போட்டிகள் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இதில் இலங்கை, நமீபியா, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளோடு இரண்டு தகுதிச்சுற்று அணிகளும் மோதுகின்றன. இதிலிருந்து நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிப்பெறும்.

12 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கிறது. லீக் சுற்றுகளின் முடிவில் இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிப்பெறும். இந்திய அணி இடம்பெற்றிருக்கும் பிரிவில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் 2 தகுதிச்சுற்று அணிகள் இடம்பெறுகின்றன. இந்தியா அல்லாத இன்னொரு பிரிவில் ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து, ஆஃப்கானிஸ்தான் மற்றும் 2 தகுதிச்சுற்று அணிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சூப்பர் 12 சுற்று போட்டிகள் அக்டோபர் 22 முதல் தொடங்குகின்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும் நியுசிலாந்தும் மோதுகின்றன. 2021 உலகக்கோப்பை தொடரில் இந்த இரண்டு அணிகளுமே இறுதிப்போட்டியில் மோதியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை அக்டோபர் 23 ஆம் தேதி எதிர்கொள்கிறது. 2021 உலகக்கோப்பையிலும் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானையே எதிர்கொண்டது. உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை பாகிஸ்தான் அந்த போட்டியில் வீழ்த்தியிருந்தது. இப்போது மீண்டும் அடுத்த உலகக்கோப்பையிலேயே இரண்டு அணிகளும் தங்களின் முதல் போட்டியிலேயே மீண்டும் மோதவிருக்கின்றனர்.

முதல் போட்டியில் அக்டோபர் 23 இல் ஆடும் இந்திய அணி அடுத்த போட்டியில் அக்டோபர் 27 அன்று தகுதிச்சுற்று மூலம் உள்ளே வந்த அணியை எதிர்கொள்கிறது. அக்டோபர் 30 இல் தென்னாப்பிரிக்க அணியையும் நவம்பர் 2 இல் வங்கதேசத்தையும் நவம்பர் 6 இல் தகுதிச்சுற்று அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா முதல் முறையாக கேப்டனாக செயல்பட உள்ளார்.

கடந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் போட்டி அட்டவணை சர்ச்சையை கிளப்பியிருந்தது. இந்திய அணி பாகிஸ்தானுடன் முதல் போட்டியில் அக்டோபர் 24 ஆம் தேதி மோதியிருந்தது. அடுத்த இரண்டாவது போட்டியில் அக்டோபர் 31 ஆம் தேதியே மோதியிருந்தது. ஒரு போட்டிக்கும் அடுத்த போட்டிக்கும் இடையில் 7 நாட்கள் இடைவெளி இருந்தது. இந்திய அணி தனது இரண்டாவது போட்டியை ஆடுவதற்குள் பல அணிகள் தங்களின் மூன்றாவது போட்டியை ஆடி முடித்திருந்தன. இது கடந்த முறை விவாதத்தை கிளப்பியிருந்தது. ஒரு போட்டிக்கும் அடுத்த போட்டிக்கும் இடையில் இந்த அதிகபட்ச இடைவெளி இந்த முறை தவிர்க்கப்பட்டுள்ளது. இந்திய அணி அதிகபட்சமாக மூன்று நான்கு நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆடுவது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 13 ஆம் தேதி மெல்பர்னில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

Also Read: பவுமா + வாண்டர் டஸன் சதம்.. மிடில் ஆர்டர் சொதப்பலால் தோற்ற இந்தியா!