Sports
பவுமா + வாண்டர் டஸன் சதம்.. மிடில் ஆர்டர் சொதப்பலால் தோற்ற இந்தியா!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு நடைபெறும் இந்த தொடரையும் இந்தியா தோல்வியோடு தொடங்கியிருக்கிறது. 31 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியை வென்றிருக்கிறது. இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன?
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனான பவுமாவே டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். இந்திய அணிக்கு ராகுல் முதல் முறையாக கேப்டன் ஆகியிருந்தார். வெங்கடேஷ் ஐயருக்கு இந்திய அணியின் தொப்பி வழங்கப்பட்டிருந்தது.
தென்னாப்பிரிக்க அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களுமே சொதப்பலாக்கத்தான் ஆடியிருந்தனர். டீகாக், யானமன் மலான், மார்க்ரம் என மூவருமே சொற்ப ரன்னில் அவுட் ஆகுயிருந்தனர். மலான் பும்ராவின் பந்திலும் டீகாக் அஷ்வினில் பந்திலும் அவுட் ஆக, மார்க்ரம் வெங்கடேஷ் ஐயரால் ரன் அவுட் ஆக்கப்பட்டிருந்தார்.
தென்னாப்பிரிக்க அணி 68-3 என்ற சூழலில் திணறிக்கொண்டிருந்தது. இந்த சமயத்தில்தான் கேப்டன் பவுமாவும் வாண்டர் டஸனும் கூட்டணி சேர்ந்தனர். இருவரும் சேர்ந்து சீராக ஸ்கோர் செய்ய தொடங்கினர். ஓவருக்கு 6 ரன்கள் என்ற விகிதத்தில் எந்த தடையும் இல்லாமல் ஸ்கோரை முன் நகர்த்தினர். இருவரும் சேர்ந்து ஏறக்குறைய 30 ஓவர்களுக்கு க்ரீஸில் நின்று 204 ரன்களை எடுத்திருந்தனர். இருவருமே சதத்தை கடந்திருந்தனர்.
இந்த கூட்டணியை கட்டுப்படுத்தாமல் விட்டதே இந்திய அணியின் தோல்விக்கு முதல் முக்கிய காரணமாக அமைந்தது. இவர்களை வீழ்த்த கேப்டன் ராகுலும் பெரிதாக முயன்றிருக்கவில்லை. 5 பௌலர்கள் + ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் என இந்திய அணி களமிறங்கியது. 'வெங்கடேஷ் ஐயரை 6 வது பௌலிங் ஆப்சனாக கருதுகிறோம்' என போட்டிக்கு முன்பு கே.எல்.ராகுல் பேசியிருந்தார். ஆனால், நேற்றைய போட்டியிம் வெங்கடேஷ் ஐயருக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கவில்லை. இத்தனைக்கும் இந்திய அணியின் மெயின் பௌலர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் கடுமையாக திணறிக்கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் கூட வெங்கடேஷ் ஐயரை ராகுல் பயன்படுத்தியிருக்கவில்லை. 'ரன்கள் ஸ்கோர் செய்ய ரொம்பவே சிரமப்பட்டேன். வாண்டர் டஸன் தான் இலகுவாக ஆடினார்' என பவுமா போட்டிக்கு பிறகு பேசியிருக்கிறார். வெங்கடேஷ் வேகம் குறைவான பந்துகளை வீசி பவுமாவை அட்டாக் செய்திருந்தால் அவர் சீக்கிரமே கூட அவுட் ஆகியிருப்பார். ஆனால், இது எதையுமே ராகுல் முயன்று பார்க்கவில்லை. விளைவு, பவுமா 110 ரன்களையும் வாண்டர் டஸன் 129 ரன்களையும் எடுத்து அசத்தினர். தென்னாப்பிரிக்கா 296 ரன்களை எடுத்தது.
இந்திய அணிக்கு டார்கெட் 297. ஓப்பனரான கே.எல்.ராகுல் பார்ட் டைமரான மார்க்ரமிடம் வீழ்ந்தாலும் அதன்பிறகு கூட்டணி சேர்ந்த தவானும் கோலியும் சிறப்பாக ஆடினர். சிரமமே இன்றி தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொண்டனர். இருவரும் சேர்ந்து 92 ரன்களை எடுத்தனர். இருவருமே அரைசதத்தை கடந்தனர். இருவருமே தங்களின் வேலையை சிறப்பாக செய்துவிட்டு அவுட் ஆகியிருந்தனர். தவான் 79 ரன்களிலும் கோலி 51 ரன்களிலும் அவுட் ஆகியிருந்தனர். கோலி அவுட் ஆன போது இந்திய அணி 158-3 என்ற நிலையில் இருந்தது. மிடில் ஆர்டர் கொஞ்சம் நிலைத்து நின்றால் வெற்றி உறுதி.
ஆனால், மிடில் ஆர்டர் நிலைக்கவில்லை. வெறும் 36 ரன்களுக்குள் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர் என மூன்று முக்கிய பேட்ஸ்மேன்களுமே அடுத்தடுத்து அவுட் ஆகினர். இவர்களில் ஒருவர் நின்றிருந்தால் கூட ஆட்டம் இன்னும் சுவாரஸ்யமாகியிருக்கும். ஆனால், அது நடக்கவில்லை. இதனால் கடைசியில் ஷர்துல் தாகூர் அரைசதமடித்தும் அது வீணானது. தென்னாப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
பௌலிங்கில் மிடில் ஓவரிலும் பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் சொதப்பியதுமே இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்திய அணி தோல்வியிலிருந்து மீண்டு அடுத்த போட்டியை வென்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!