Sports
இந்திய அணியை மீட்டெடுப்பாரா கோலி? - எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள்! #IndvSA
தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் 13 புள்ளிகள் முன்னிலை பெற்றிருக்கிறது இந்தியா. சிறப்பாக இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, பும்ராவின் பந்துவீச்சில் சிக்கி 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் கேப்டவுனில் செவ்வாய்கிழமை தொடங்கியது. தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சடேஷ்வர் புஜாரா, கேப்டன் விராட் கோலி இருவரும் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். புஜாரா 43 ரன்களில் வெளியேற, கோலி தனி ஆளாகப் போராடவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். வழக்கத்தை விட அதிகமாகவே பந்துகளை விட்டார். மிகவும் கவனமாக பேட்டிங் செய்தவர், 201 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஒன்பதாவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இறுதியாக 223 ரன்கள் எடுத்தது இந்திய அணி.
முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா, ஐந்தாவது ஓவரிலேயே கேப்டன் டீன் எல்கரை இழந்தது. பும்ரா பந்துவீச்சில் வெறும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் அவர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்தது தென்னாப்பிரிக்கா.
இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய இரண்டாவது பந்திலேயே மார்க்ரம் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா. நைட் வாட்ச் மேனாக களமிறங்கி ஓரளவு சிறப்பாக ஆடிய கேஷவ் மஹராஜ் 25 ரன்கள் எடுத்தார். உமேஷ் யாதவ் வீசிய ஒரு அசத்தலான பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார் அவர். அதன்பிறகு கீகன் பீட்டர்சனும் ரஸி வான் டெர் டுசனும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்தக் கூட்டணியையும் உடைத்தார் உமேஷ். அவர் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து 21 ரன்களில் வெளியேறினார் வான் டெர் டுசன்.
ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் ஆதிக்கம் சற்று அதிகமாக இருக்க, 56-வது ஓவரில் இந்தியாவை ஆட்டத்துக்குள் கொண்டுவந்தார் முகமது ஷமி. நல்ல தொடக்கம் கண்டிருந்த டெம்பா பவுமா, கோலி பிடித்த அமர்க்களமான கேட்சால் வெளியேறினார். அடுத்த இரண்டே பந்துகளில் விக்கெட் கீப்பர் விரெய்னையும் வெளியேற்றினார் ஷமி. இந்திய கீப்பர் ரிஷப் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார் தென்னாப்பிரிக்க கீப்பர்.
63-வது ஓவரில் மார்கோ யான்சனை வெளியேற்றிய பும்ரா, தான் வீசிய அடுத்த ஓவரில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த கீகன் பீட்டர்சனை வெளியேற்றினார். இந்தத் தொடரில் தன் இரண்டாவது அரைசதத்தை அடித்த பீட்டர்சன் 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ககிஸோ ரபாடாவும் டுவேன் ஒலிவியரும் கொஞ்சம் தாக்குப்பிடித்து ஆடினர். ரபாடாவை ஷர்துல் தாக்கூர் வெளியேற்ற, கடைசி விக்கெட்டாக எங்கிடியை பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார் ரபாடா. இறுதியில் 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாப்பிரிக்கா.
13 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாகவே இருந்தது. 7 ரன்கள் எடுத்திருந்த மயாங்க் அகர்வால், ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் ஐந்தாவது ஓவரில் வெளியேற, அடுத்த ஓவரில் கே.எல்.ராகுலை வெளியேற்றினார் மார்கோ யான்சன். 24 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை, புஜாராவும் கோலியும் மீட்கும் முயற்சியில் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆட, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 57 ரன்கள் எடுத்திருக்கிறது இந்தியா.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!