Sports
ரொனால்டோ ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்.. முக்கியமான பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடுவது கேள்விக்குறி!
மான்செஸ்டர் யுனைடட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கெனவே அணியில் சிலருக்கு அவரோடு பிரச்னை ஏற்பட்டுள்ளதாக பேசப்பட்டுவந்த நிலையில், அடுத்து நடக்கும் முக்கியமான பிரீமியர் லீக் போட்டிகளில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.
கால்பந்து உலகின் மிகச்சிறந்த ஃபார்வேடுகளுள் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த சீசனுக்கு முன்பு யுவன்டஸ் அணியிலிருந்து வெளியேறி, தன் பழைய அணியான மான்செஸ்டர் யுனைடடுடன் இணைந்தார். அவர் அணியில் இணைந்ததிலிருந்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டார் ரொனால்டோ. பிரீமியர் லீகில் விளையாடிய 16 போட்டிகளில் 8 கோல்களும், 3 அசிஸ்ட்களும் பதிவு செய்திருக்கிறார். சாம்பியன்ஸ் லீகில், ஐந்தே போட்டிகளில் 6 கோல்கள் அடித்து அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு முக்கியக் காரணமாக விளங்கினார்.
சில வாரங்களுக்கு முன்னால் மான்செஸ்டர் யுனைடட் அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக, அணியின் பயிற்சியாளர் ஓலே குன்னர் ஷோல்ஷர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அப்போதே, ரொனால்டோவை அணிக்குள் கொண்டுவந்தது ஷோல்ஷரின் வழக்கமான ஆட்டமுறைக்குப் பாதகமாக அமைந்ததாகப் பேசப்பட்டது. ரொனால்டோ சரியாக பிரஸ் செய்யாதது அணியின் ஆட்டத்தைப் பாதித்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், ஷோல்ஷர் இடத்தில் இடைக்கால பயிற்சியாளராக ஜெர்மனியின் ரால்ஃப் ராக்னிக் பதவியேற்றார்.
ரால்ஃப்னிக் பிரஸ்ஸிங் கேமின் பிதாமகன் என்று கருதப்படுபவர். தன் வீரர்கள் அனைவரும் முழு வீச்சில் பிரஸ் செய்யவேண்டும் என்று நினைப்பவர். அதனால், அவர் ஆட்டத்துக்கு ரொனால்டோ செட் ஆகமாட்டார் என்று பேசப்பட்டது. இருந்தாலும், ராக்னிக்கின் அணியில் ரொனால்டோ இடம்பெற்றுவந்தார். ஆனால், சமீபத்தில் நடந்த வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணிக்கெதிரான போட்டி, பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. கேப்டன் மகுயர், துணைக்கேப்டன் புரூனோ ஃபெர்னாண்டஸ் இருவரும் இல்லாததால், மான்செஸ்டர் யுனைடட் அணியை வழிநடத்தினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
அந்தப் போட்டியில் யுனைடட் அதிர்ச்சித் தோல்வியடைய, ரொனால்டோ பல வீரர்களிடம் கோபித்துக்கொண்டதாக செய்திகள் வந்தன. மகுயர், லூக் ஷா உள்ளிட்ட வீரர்களுக்கு ரொனால்டோவோடு ஒத்துப்போகவில்லை. ரொனால்டோவின் பிரஸ்ஸிங் பயிற்சியாளருக்குப் போதவில்லை என்றெல்லாம் பேசப்பட்டன. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த ஆஸ்டன் விலா அணிக்கெதிரான போட்டியில் ரொனால்டோ விளையாடவில்லை.
ரொனால்டோ முழு உடல் தகுதியோடு இல்லையென்றும், அதனால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது என்றும் கூறினார் ராக்னிக். இதனால், அடுத்து நடக்கவிருக்கும் பிரீமியர் லீக் போட்டிகளிலும் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் நிலவுகிறது. ரொனால்டோவின் ஃபிட்னஸை விட வீரர்களுக்கும் பயிற்சியாளருக்கும் இடையிலான ரொனால்டோ மீதான அபிப்ராயம் இனி அவர் ஆடுவாரா இல்லையா என்பதில் முக்கிய அங்கம் வகிக்கும் என்று கூறப்படுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!