Sports
“விராட் கோலி விரைவிலேயே மிகப்பெரிய இன்னிங்ஸ்களை ஆடுவார்” - ராகுல் டிராவிட் நம்பிக்கை!
இந்திய டெஸ்ட் கேப்டனான விராட் கோலி அர்ப்பணிப்புடன் ஆடி வருவதாகவும் அவருடன் இணைந்து பணியாற்றுவது பெருமிதமாக இருப்பதாகவும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோஹனஸ்பர்க்கில் நாளை நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய நேரப்படி இன்று மாலை 3:30 மணிக்கு இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார்.
அப்போது நாளை நடைபெறப்போகும் போட்டி குறித்தும் கேப்டனான விராட் கோலி குறித்தும் சில விஷயங்களை பகிரிந்து கொண்டார்.
பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே உரசல் நிலவி வருவது அனைவரும் அறிந்த விஷயமே. விராட் கோலி கடைசியாக தென்னாப்பிரிக்காவிற்கு செல்வதற்கு முன்பு இந்தியாவில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அந்த சந்திப்பில்தான் கேப்டன்சி பறிக்கப்பட்டதை குறித்து பரபரப்பான சில விஷயங்களை பேசியிருந்தார். அதன்பிறகு, கோலி பத்திரிகையாளர்களை சந்திக்கவே இல்லை. கோலி பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்குபெறுவதை பிசிசிஐ விரும்பவில்லையா என்கிற சந்தேகமும் இருந்தது. இதுகுறித்து கோலி ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, 'கோலி பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருப்பதற்கு எந்த பிரத்யேக காரணமும் இல்லை. அடுத்து அவர் ஆடவிருக்கும் போட்டி அவரது 100 வது போட்டி. அந்தப் போட்டிக்கு முன்பாக கோலி பத்திரிகையாளர்களை சந்திக்க திட்டமிடப்பட்டிருக்கிறது' என ராகுல் டிராவிட் பதிலளித்திருந்தார்.
மேலும் கோலி குறித்து அவர் பேசும்போது, 'உண்மையிலேயே விராட் கோலி ஒரு நல்ல தலைவர். அது கிரிக்கெட் மைதானத்திற்குள்ளும் சரி வெளியிலும் சரி அவர் சிறந்த தலைவரே. அவருடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமை.'
கோலி சதமடித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு முழுவதும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியிலும் அவ்வளவு சிறப்பாக ஆடியிருக்கவில்லை. இது குறித்து பேசும்போது, 'அவரை சுற்றி பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும், அவரது பயிற்சி முறைகளிலும் அர்ப்பணிப்பிலும் எந்த குறையும் இல்லை. அதை பார்க்கும்போது விரைவிலேயே அவர் மிகப்பெரிய இன்னிங்ஸ்களை ஆடுவார் பெரிய ரன்களை அடிப்பார் எனத் தோன்றுகிறது' என்றார்.
நாளை நடைபெறும் போட்டி குறித்து பேசும்போது, 'வானிலை பற்றி அவ்வளவு தெளிவாக தெரியவில்லை. ஆனால், இந்த பிட்ச் கொஞ்சம் வேகமான பிட்ச்சாக இருக்கக்கூடும். ஆனால், கடந்த போட்டியை போன்ற பவுன்ஸை எதிர்பார்க்க முடியாது. போட்டிக்கு முடிவை கொடுக்கும் வகையிலான பிட்ச்சாகவே தெரிகிறது. நாட்கள் செல்ல செல்ல பேட்டிங் கடினமாகக்கூடும்' என ஜோஹனஸ்பர்க்கின் வாண்டரெர்ஸ் மைதானத்தின் பிட்ச் குறித்த தனது அனுமானங்களையும் டிராவிட் வெளிப்படுத்தியிருந்தார்.
தென்னாப்பிரிக்காவில் மட்டுமே இந்திய அணி இன்னும் ஒரு டெஸ்ட் தொடரை வெல்லவே இல்லை. இந்த முறை 1-0 என இந்தியா முன்னிலையில் இருக்கிறது. இந்திய அணி தொடரை வெல்வதற்கான வாய்ப்புகளும் சாத்தியங்களும் அதிகமாகவே இருக்கிறது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி சொதப்பல் எதுவும் இன்றி ஆடி இந்திய அணி தொடரை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!