Sports
கேப்டன் தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த வேண்டுகோள் என்ன தெரியுமா?
கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் 2021 தொடரின் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. 4வது முறையாக கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருக்கிறது என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையே சி.எஸ்.கே.வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்த சி.எஸ்.கே அணியின் நிர்வாகம் முடிவெடுத்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக சென்னை அணியின் கேப்டன் தோனி, ஷர்துல் தாகூர், ஜடேஜா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இருந்ததால் பாராட்டு விழாவிற்கான தேதி முடிவு செய்யப்படாமல் இருந்த நிலையில், தோனி இந்தியா திரும்பியதை அடுத்து சென்னை கலைவாணர் அரங்கில் சி.எஸ்.கே அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சி.எஸ்.கே கேப்டன் தோனி வெற்றிக் கோப்பையை முதல்வர் மு.கஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார். மேலும், முதல்வரின் பெயரும் 7 என்ற எண்ணும் பொறிக்கப்பட்ட ஜெர்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் தோனி.
இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னை அணிக்கான பாராட்டு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை என்றாலே சூப்பர்தான். முதல்வராக அல்ல, தோனியின் ரசிகராக பாராட்டு விழாவிற்கு வந்திருக்கிறேன்.
எனது குடும்பமே தோனியின் ரசிகர்தான். எனது மகன்,பேரன் பேத்திகள் என அனைவருமே தோனியின் ரசிகர்கள்தான். எனது தந்தை முத்தமிழறிஞர் கலைஞரும் தோனியின் ரசிகர்.
தோனியின் சொந்த மாநிலம் ஜார்கண்ட்டாக இருந்தாலும், தமிழ்நாட்டு மனிதராகவே மாறிவிட்டார். தமிழர்கள் பச்சைத் தமிழர்கள் என்றால், தோனி மஞ்சள் தமிழர்.
எந்த நெருக்கடியிலும் தலைவர் கலைஞரும், தோனியும் கூலாக இருப்பார்கள். இலக்கும், உழைப்பும் ஒன்று சேர்ந்தால் அவர்களை யாராலும் வீழ்த்த முடியாது. இது விளையாட்டுக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பொருந்தும்.
ஆட்சிக்கு வந்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்தும்போது என்னை, “தினமும் சிக்ஸர் அடிக்கிறார்” எனப் பாராட்டினார்கள். அப்போதெல்லாம் தோனியை நினைத்துக்கொண்டேன்.
அவர் அடித்த ஹெலிகாப்டர் ஷாட்டை என்னால் மறக்க முடியவில்லை. தோனி தலைசிறந்த ஃபினிஷர், விக்கெட் கீப்பர் என சொல்வதை விட சிறந்த கேப்டன் என்று சொல்லலாம். ஒரு அணியை உருவாக்கியவர்தான் தலைசிறந்த ஆளுமையாக போற்றப்படுவார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தாலும் என்னுடைய மனது மழை நிவாரண பணிகளையே சிந்திக்கிறது. கோட்டையில் இருந்தாலும் குடிசையை நினைக்க வேண்டும் என முத்தமிழறிஞர் கலைஞர் கூறுவார். அதே மனநிலையில்தான் இந்த மேடையில் நான் இருக்கிறேன்.
நீங்கள் உங்கள் விளையாட்டை தொடருங்கள், நாங்கள் மக்கள் பணியைத் தொடருகிறோம். நீங்கள் சி.எஸ்.கே அணியை நீண்ட காலம் வழிநடத்த வேண்டுகிறோம்.” எனப் பேசியுள்ளார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!