Sports
T20 WC: கேட்ச் ட்ராப்களால் திசை மாறிய போட்டி... இறுதிப்போட்டியில் காலடி எடுத்து வைத்தது ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் மோதியிருந்தன. இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றிருக்கிறது. இந்த வெற்றி மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றிருக்கிறது.
இந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியை விட பாகிஸ்தான் அணியே சிறப்பாக ஆடியிருந்தது. சூப்பர் 12 சுற்றின் 5 போட்டியிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வென்றிருந்தது. ஆனால், ஆஸ்திரேலியா அப்படியில்லை. 4 போட்டிகளில் மட்டுமே வென்றிருந்தது. இங்கிலாந்து எதிராக மொத்தமாக சொதப்பியிருந்தது. சவுத் ஆப்பிரிக்காவிற்கு எதிராக தடுமாறி வென்றிருந்தது. மேலும், UAE இல் பாகிஸ்தான் கடைசியாக ஆடிய 16 போட்டிகளிலும் வென்றிருக்கிறது. இந்த ரெக்கார்டின் படி இன்றைய போட்டி பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிரிக்கெட்டை பொறுத்தவரை ரெக்கார்டுகள் எல்லாம் பழைய கதை. அன்றைய நாளில் ஒரு அணி என்ன செய்கிறது என்பதே முக்கியம். நேற்று பாகிஸ்தானை விட ஆஸ்திரேலியா சிறப்பாக ஆடியது. போட்டியை வென்றது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச்சே டாஸை வென்றார். சேஸிங்கை தேர்வு செய்தார். இதுவே ஆஸ்திரேலிய அணிக்கு முதல் வெற்றியாக அமைந்தது. துபாய் மைதானத்தில் பெரும்பாலான போட்டிகளை சேஸ் செய்த அணியே வென்றிருப்பதால் இது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டது.
பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. வழக்கம்போல, பாகிஸ்தான் அணியின் ஓப்பனர்களான பாபர் அசாமும் ரிஸ்வானும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். 10 ஓவர்கள் 71 ரன்களை இருவரும் சேர்ந்து எடுத்தனர். 34 பந்துகளில் 39 ரன்களை எடுத்திருந்த போது ஆடம் ஷம்பாவின் பந்துவீச்சில் பாபர் அசாம் அவுட் ஆனார். தொடர்ந்து ரிஸ்வான் சிறப்பாக ஆடினார். அவரோடு ஃபகர் ஷமானும் இணைந்து அட்டகாசமாக ஆடினார்.
ஃபகர் ஷமான் கடந்த 5 போட்டிகளிலும் சேர்த்தே 54 ரன்களைத்தான் எடுத்திருந்தார். ஆனால், நேற்று 32 பந்துகளில் 55 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் இரண்டு பெரிய சிக்சர்களை அடித்து அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 176 ரன்களை எடுத்திருந்தது. ரிஸ்வான் 52 பந்துகளில் 67 ரன்களை அடித்து ஸ்டார்க்கின் பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் ஆகியிருந்தார்.
ஆஸ்திரேலிய அணி 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. முதல் ஓவரிலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தான் அணியின் அபாயகரமான பௌலரான அஃப்ரிடி ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச்சை lbw ஆக்கினார். அதே ஓவரில் மார்ஸ் அம்பயர்ஸ் காலினால் lbw விலிருந்து தப்பியிருந்தார்.
டேவிட் வார்னர் ஒரு பக்கம் நின்று மிகச்சிறப்பான இன்னிங்ஸை ஆடினார். 30 பந்துகளில் 49 ரன்களை அடித்திருந்தவர் ஷதாப் கான் வீசிய ஓவரில் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். ஆனால், அந்த பந்து வார்னரின் பேட்டில் படவே இல்லை. அம்பயர் அவுட் கொடுத்தவுடன் ரிவியூவே எடுக்காமல் டேவிட் வார்னர் பெவிலியினுக்கு சென்றார்.
இது ஆச்சர்யமான விஷயமாக இருந்தது. தொடர்ந்து மேத்யூ வேடும் ஸ்டாய்னிஸும் கூட்டணி போட்டனர். இவர்கள் இருவரும் சேர்ந்து 81 ரன்களை எடுத்தனர். இந்த கூட்டணிதான் ஆஸ்திரேலியாவிற்கு வெற்றியை தேடி தந்தது. கடைசி 2 ஓவர்களில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அஃப்ரிடி வீசிய அந்த ஓவரில் மேத்யூ வேட் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்து ஆஸ்திரேலிய அணியை வெல்ல வைத்தார்.
மேத்யூ வேட் 17 பந்துகளில் 41 ரன்களை எடுத்திருந்தார். ஸ்டாய்னிஸ் 31 பந்துகளில் 40 ரன்களை எடுத்திருந்தார். இந்த போட்டியில் கேட்ச் ட்ராப்கள் மிக முக்கிய தாக்கிய ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணி பந்துவீசிய போது பல மிஸ் ஃபீல்ட்களையும் கேட்ச் ட்ராப்களையும் செய்தது. குறிப்பாக, பவர்ப்ளேயில் மேக்ஸ்வெல்லின் ஓவரில் ரிஸ்வானுக்கு ஒரு கேட்ச்சை வார்னர் ட்ராப் செய்திருந்தார்.
அதேமாதிரி, ஃபகர் ஷமானுக்கு ஸ்மித் ஒரு கேட்ச்சை ட்ராப் செய்திருந்தார். இந்த இருவருமே அரைசதம் அடித்திருந்தனர். இவர்களின் ஆட்டத்தால்தான் பாகிஸ்தான் அணி 176 ரன்களை எடுத்தது. அதேமாதிரி, பாகிஸ்தான் பந்துவீச்சின் போது அஃப்ரிடி வீசிய 19 வது ஓவரில் ஹசன் அலி மேத்யூ வேடிற்கு ஒரு கேட்ச்சை ட்ராப் செய்திருந்தார். அந்த கேட்ச் ட்ராப்பிற்கு பிறகுதான் மேத்யூ வேட் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்து ஆஸ்திரேலிய அணியை வெல்ல வைத்தார். கேட்ச்சஸ் வின்ஸ் மேட்சஸ் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?