Sports

நடராஜன் எங்கே?.. ஓப்பனர் யார்..? இந்திய அணித்தேர்வும், சில குழப்பங்களும்!

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 17 ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்கள்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் ( துணை கேப்டன்), ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாத்வ், வெங்கடேஷ் ஐயர், சஹால், அஷ்வின், அக்சர் படேல், ஆவேஷ் கான், ரிஷப் பண்ட், இஷன் கிஷன், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷல் படேல், சிராஜ்.

இந்த தொடர் இரண்டு காரணங்களுக்காக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான ராகுல் டிராவிட் இந்த தொடரிலிருந்தே தனது பணியை தொடங்குகிறார். மேலும், கோலியின் பதவி விலகலுக்கு பிறகு புதிய கேப்டனான ரோஹித் சர்மாவுக்கும் இதுதான் முதல் தொடர்.

இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் இரண்டு விஷயங்கள் சிறிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்திய சென்சேஷன்களான ருத்துராஜ் கெய்க்வாட்டும் வெங்கடேஷ் ஐயரும் இந்திய அணிக்கு அறிமுகமாகிறார்கள்.

ஆனால், இருவருக்கும் ப்ளேயிங் லெவனில் எப்படி இடம் கொடுக்கப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியான விஷயமாகவே இருக்கிறது. இருவருமே அக்மார்க் ஓப்பனர்கள். ஏற்கெனவே ரோஹித், ராகுல் என இரண்டு ஓப்பனர்கள் இருக்கிறார்கள். ஒருவர் கேப்டன், இன்னொருவர் துணை கேப்டன். இருவரும் நிச்சயமாக ப்ளேயிங் லெவனில் இருப்பார்கள். பின்னே ருத்துராஜும் வெங்கடேஷும் என்ன செய்வார்கள்?

மிடில் ஆர்டரில் இறக்கப்படுவார்களா? அதற்கான வாய்ப்பே இல்லை. ஏனெனில், இருவரும் ஐ.பி.எல் லிலும் ஓப்பனர்களாகவே இறங்கி கலக்கியிருக்கின்றனர். இப்போது நடைபெற்று வரும் சையத் முஷ்தாக் அலி தொடரிலும் ஓப்பனர்களாகவே இறங்கி அசத்தியிருக்கின்றனர்.

இருவரும் ஓப்பனிங்கில்தான் இறங்கியாக வேண்டும். ரோஹித் ஓப்பனிங் ஸ்லாட்டிலிருந்து கீழே இறங்க முடியாது. சமீபமாக உலகக்கோப்பையில் அவர் ஆர்டரை இறக்கியபோது அது பயங்கர தோல்வியாக அமைந்திருந்தது. அதனால் ரோஹித்தின் ஓப்பனர் ரோலில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. ராகுலை மிடில் ஆர்டரில் இறக்க வாய்ப்பிருக்கிறது. அவர் இதற்கு முன்பே நம்பர் 4-5 இல் இறங்கி பழக்கப்பட்டவர்.

ராகுல் கீழே இறங்கினால் ஓப்பனிங்கில் அவர் இடத்தில் ருத்துராஜ் அல்லது வெங்கடேஷ் ஐயர் இறங்குவார்கள். சுழற்சி முறையில் இருவரும் மாற்றி மாற்றி இறக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், மூன்றே மூன்று போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் அதுவும் சந்தேகமே.

தடாலடியாக ரோஹித் நம்பர் 3 யில் மீண்டும் இறங்கி பார்க்கமாட்டார் என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது. அப்படி இறங்கினால் ஓப்பனிங்கில் வெங்கடேஷ் ஐயர், ருத்துராஜ் கெய்க்வாட் இருவருக்குமே வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இதற்கான வாய்ப்பு மிகமிகமிகமிக குறைவு. அப்படி செய்தால் சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், பண்ட் என எல்லாரின் ரோலுமே அடிவாங்கும்.

இந்த விஷயத்தில் ராகுல் ட்ராவிட்-ரோஹித் கூட்டணி என்ன செய்யப்போகிறார்கள் என்பது சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும்.

இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் இல்லாதது இந்த அணியின் இன்னொரு நெருடல். டி20 உலகக்கோப்பையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஷாகீன் ஷா அஃப்ரிடி, போல்ட் போன்ற இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கடுமையாக திணறியிருந்தனர். ஆனால், அப்படி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வகையில் இந்திய அணியில் ஒரு இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கூட இல்லாதது பெரும் ஏமாற்றமாக இருந்தது.

தவறிலிருந்து பாடம் கற்பிக்கும் விதமாக அடுத்தடுத்து இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய அணி பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த தொடரில் ஒரு இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கூட இல்லை. குறிப்பாக, தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. டி20 உலகக்கோப்பைக்கான அணியிலேயே அவர் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடந்திருக்கவில்லை.

இப்போதாவது இடம் கொடுப்பார்கள் என நினைத்தால் இப்போதும் நடராஜன் தவிர்க்கப்பட்டிருக்கிறார். நடராஜனின் சமீபத்திய பெர்ஃபார்மென்ஸ் கொஞ்சம் சுமாராக இருப்பதாக யோசித்திருந்தாலும் கூட சேத்தன் சக்காரியா, அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஆனால், தேர்வுக்குழு அதையும் செய்யவில்லை.

Also Read: T20 WC: வீழ்ந்தது ஆஃப்கன்.. அரையிறுதிக்குக் கூட செல்லாமல் வெளியேறியது இந்தியா!