Sports
ஸ்காட்லாந்துக்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி... இனி எல்லாம் ஆஃப்கனின் கையில்தான்!
டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் நேற்று இந்தியாவும் ஸ்காட்லாந்தும் மோதியிருந்தன. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றிருக்கிறது. 86 ரன்கள் டார்கெட்டை 6.3 ஓவர்களிலேயே இந்திய அணி சேஸ் செய்திருந்தது.
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியே டாஸை வென்றிருந்தார். இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முதன் முதலாக நேற்றைய போட்டியில்தான் டாஸை வென்றது. இதுவே மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
போட்டி தொடங்குவதற்கு முன் ஸ்காட்லாந்து அணி சமூகவலைதளங்களில் 'இந்தியா இந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமாயின் எங்களை தாண்டிதான் செல்ல வேண்டும்' என நகைச்சுவையாக சவால் விட்டிருந்தது. ஆனால், ஸ்காட்லாந்து அணி சவால்விட்ட அளவுக்கு எந்த சிரமத்தையும் இந்திய அணிக்கு கொடுக்கவில்லை. இந்திய அணி மிக எளிதாக இந்த போட்டியை வென்றது.
3 வது ஓவரில் பும்ரா ஒரு ஸ்லோயர் டெலிவரியில் கோட்செரின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். அங்கே இருந்து அடுத்தடுத்து ஸ்காட்லாந்து அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிய தொடங்கின. ஓப்பனரான முன்ஸே மட்டும் ரிவர்ஸ் ஸ்வீப்பாக ஆடி கொஞ்சம் பவுண்டரிக்களை அடித்தார். குறிப்பாக, அஸ்வினின் ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிக்களை அடித்தார்.
ஆனால், அவரும் நின்று பெரிதாக ஆடவில்லை. 24 ரன்களில் ஷமியின் பந்துவீச்சில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அதன்பிறகு, எந்த பேட்ஸ்மேனும் நீண்ட நேரம் நிற்கவில்லை. ஜடேஜா 4 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஸ்காட்லாந்து அணியின் மிடில் ஆர்டரை மொத்தமாக காலி செய்திருந்தார்.
ஷமி 3 ஓவர்கள் வீசி 1 மெய்டனோடு 15 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். பும்ரா 3.4 ஓவர்களை வீசி 10 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். 17.4 ஓவர்களில் 85 ரன்களில் ஸ்காட்லாந்து அணி ஆல் அவுட் ஆனது. இந்திய அணிக்கு டார்கெட் 86. இந்திய அணிக்கு நெட் ரன்ரேட் முக்கியம் என்பதால், இந்த டார்கெட்டை எவ்வளவு சீக்கிரம் அடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
அதற்கேற்றவாறு ராகுலும் ரோஹித்தும் க்ரீஸுக்குள் வந்ததிலிருந்தே வெளுத்தெடுத்தனர். ப்ராட்லே வீசிய இரண்டாவது ஓவரில் மட்டும் ராகுல் 3 பவுண்டரிக்களை அடித்தார். அடுத்த ஓவரில் ரோஹித் ஒரு சிக்சரும் பவுண்டரியும் அடித்தார். இப்படியாக தொடர்ச்சியாக அதிரடியில் அசத்தினர். ரோஹித் 16 பந்துகளில் 30 ரன்களை எடுத்து அவுட் ப்ராட்லேவின் பந்தில் lbw ஆனார். ராகுல் 19 பந்துகளில் 50 ரன்களை அடித்து மார்க் வேட்டின் பந்தில் அவுட் ஆகியிருந்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 6.3 ஓவர்களில் இலக்கை எட்டியது.
13.3 ஓவர்களை மீதம் வைத்து வென்று இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் ரன்ரேட் நியுசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளை விட அதிகமாகியிருக்கிறது. இதன்மூலம் இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்பு இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது.
நாளை நடைபெறும் நியுசிலாந்து Vs ஆஃப்கானிஸ்தான் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி நியுசிலாந்தை வென்றால் இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்பு அதிகமாகும். ஒருவேளை ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியுற்றால் இந்திய அணி உலகக்கோப்பை பயணம் அத்தோடு முடிந்துவிடும். இனி எல்லாமே ஆஃப்கனின் கையில்தான் இருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!