Sports
Pak vs Nz : ஏறக்குறைய அரையிறுதி உறுதி... வீறுகொண்டு எழும் பாகிஸ்தான்! #T20WC
டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானும் நியுசிலாந்தும் நேற்று மோதியிருந்தன. இந்த போட்டியை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. ஏற்கனவே இந்தியாவிற்கு எதிரான போட்டியையும் வென்றிருப்பதால் பாகிஸ்தான் ஏறக்குறைய அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுவிட்டது என்றே சொல்லலாம்.
பாகிஸ்தானின் வெற்றிக்கு அவர்களின் பந்துவீச்சே மிக முக்கிய காரணமாக இருந்தது. நியுசிலாந்து அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. ஷாஹின் ஷா அஃப்ரிடியே முதல் ஓவரை வீசியிருந்தார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி கேம் சேஞ்சராக இருந்த அஃப்ரிடி அதே ஃபார்மோடு இருந்தார். முதல் ஓவரையே மெய்டனாக வீசினார். மார்டின் கப்தில் இந்த ஓவரில் ரிஸ்க்கே எடுக்காமல் தற்காப்பாக ஆடி முடித்திருந்தார்.
இதன்பிறகு, கப்தில்-மிட்செல் கூட்டணி கொஞ்சம் நன்றாகவே ரன்கள் சேர்க்க தொடங்கியது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் 36 ரன்களை சேர்த்திருந்தனர். பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் ரவுஃப் வீசிய ஓவரில் போல்டை பறிகொடுத்து கப்தில் வெளியேறினார். மிட்செல் 27 ரன்களில் இமாத் வாசிமின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
நியுசிலாந்து அணியை பொறுத்தவரைக்கும் முக்கியமான வீரர்கள் பொறுமையாக நின்று நல்ல தொடங்கவே செய்தனர். ஆனால், அவர்களால் அதை பெரிய இன்னிங்ஸாகவோ அல்லது கியரை மாற்றி அதிரடி இன்னிங்ஸாகவோ மாற்ற முடியவில்லை. 20 பந்துகளை சந்தித்திருந்த கப்தில் 17 ரன்களில் அவுட். 26 பந்துகளை சந்தித்திருந்த கேப்டன் வில்லியம்சன் 25 ரன்களில் ரன் அவுட். 24 பந்துகளை சந்தித்திருந்த கான்வான் 27 ரன்களில் அவுட். 15 பந்துகளை சந்தித்திருந்த க்ளென் பிலிப்ஸ் 12 ரன்களில் அவுட். இப்படி முக்கியமான வீரர்கள் அனைவருமே நல்ல பார்ட்னர்ஷிப் அமைய வேண்டும் என்பதற்காக நின்று நிதானமாக ஜாக்கிரதையாக தொடங்கினர்.
ஆனால், அதை சரியாக ஃபினிஷ் செய்யவில்லை. மேலே குறிப்பிட்ட வீரர்களில் யாரோ ஒரு வீரர் கொஞ்சம் கூடுதலாக நின்று இன்னிங்ஸை அதிரடியாக முடித்திருந்தால் கூட நியுசிலாந்து அணியின் ஸ்கோர் இன்னும் கூடியிருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பாகிஸ்தான் சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ரவுஃப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
பாகிஸ்தானுக்கு டார்கெட் 135. கடந்த போட்டியில் இந்தியாவிற்கு எதிராக 150+ டார்கெட்டை விக்கெட்டே விடாமல் பாகிஸ்தானின் ஓப்பனர்களான பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோரே எடுத்திருந்தனர். ஆனால், நேற்றைய போட்டியில் இவர்களால் அதைபோல பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை. 9 ரன்களிலேயே பாபர் அசாமை சவுதி க்ளீன் போல்ட் ஆக்கியிருந்தார். கொஞ்ச நேரம் நிலைத்து நின்ற ரிஸ்வான் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, பாகிஸ்தானும் சீரான இடைவெளியில் விக்கெட்டை விட்டது.
15 ஓவர்கள் முடிவில் 91 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. போட்டி இருபக்கமும் சமமாகவே இருந்தது. இந்நிலையில், பெரிதாக அழுத்தம் ஏற விடாமல் ஆசிஃப் அதிரடியாக ஆடி ஆட்டத்தை முடித்து வைத்தார். அபாயகரமான டிம் சவுத்தியின் ஓவரில் 2 சிக்சர்களையும் ட்ரெண்ட் போல்டின் ஓவரில் ஒரு சிக்சரையும் ஆசிஃப் பறக்கவிட்டிருந்தார். இந்த மூன்று சிக்சர்களும் ஆசிஃபிற்கு ஒத்துழைப்பாக விக்கெட் விடாமல் நின்ற அனுபவ வீரர் சோயிப் மாலிக்கின் இன்னிங்ஸுமே பாகிஸ்தானை காப்பாற்றியது. ஆசிப் 12 பந்துகளில் 27 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். மாலிக் 20 பந்துகளில் 26 ரன்களை எடுத்திருந்தார்.
தொடர்ச்சியாக பாகிஸ்தான் பெறும் இரண்டாவது வெற்றி இது. முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது. ஐ.பி.எல் தொடங்குவதற்கு முன் நியுசிலாந்து அணி பாகிஸ்தானில் ஒரு தொடர் ஆடுவதாக இருந்தது. நியுசிலாந்து அணியும் பாகிஸ்தானுக்கு சென்று இறங்கி பயிற்சியெல்லாம் தொடங்கிவிட்டது. இந்நிலையில் திடீரென கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக நியுசிலாந்து இந்த தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணியும் தங்களது பாகிஸ்தான் தொடரை ரத்து செய்தது. இந்த இரண்டு சம்பவமும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பெரும் அவமானமாக அமைந்தது. அப்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சேர்மனான ரமீஷ் ராஜா 'நீங்கள் சாம்பியன் போல ஆடுங்கள். சாம்பியனாகுங்கள். எல்லா அணியும் நம்மை தேடி வரும்' என கூறியிருப்பார். பாகிஸ்தான் இப்போது உலகக்கோப்பையில் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!