Sports
அடிச்சா சிக்ஸ் இல்லைனா அவுட்: எதிரெதிர் அணுகுமுறையால் வெஸ்ட் இண்டீஸ் சொதப்பல்; சர்ச்சையை கிளப்பிய டீகாக்!
டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் தென்னாப்பிரிக்க அணியும் நேற்று மோதியிருந்தன. இதில், தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியே முதலில் பேட் செய்திருந்தது. வெஸ்ட் அணியை பொறுத்தவரைக்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி அந்த போட்டியில் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. இவ்வளவு மோசமான மிக முக்கிய காரணமாக அமைந்தது அவர்களின் அணுகுமுறையே. அடித்தால் சிக்சர் இல்லை அவுட் என ஆடியிருந்தனர். இது அவர்களுக்கு மோசமான தோல்வியை பெற்றுக் கொடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று இந்த அணுகுமுறையை மாற்றும் எண்ணத்தோடு வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. அதாவது, வெறுமென அதிரடியாக சிக்சர்களுக்கு மட்டும் முயற்சித்து விக்கெட்டை விடாமல் நின்று ஆட முற்பட்டிருந்தனர். ஆனால், இதுவுமே அவர்களுக்கு பின்னடைவையே கொடுத்தது. ரொம்பவே தற்காப்பாக மந்தமாக ஆடியிருந்தனர். குறிப்பாக, சிம்மோன்ஸ் 35 பந்துகளில் 16 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.
ஸ்ட்ரைக் ரேட் 45.71 மட்டுமே. டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட இதைவிட அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுவார்கள். ஏறக்குறைய 6 ஓவர்களை சிம்மோன்ஸ் மட்டுமே வீணடித்திருந்தார். மீதமிருந்த 14 ஓவர்களில் 127 ரன்களை எடுத்து ஒட்டுமொத்தமாக 143 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்திருந்தது. எவின் லீவிஸ் 35 பந்துகளில் 56 ரன்களை எடுத்திருந்தார். கெய்ல், பொல்லார்ட், ரஸல் போன்றவர்களாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
விக்கெட் விழக்கூடாது என்பதற்காக ஒரு எண்ட்டில் சிம்மோன்ஸை ஆங்கர் இன்னிங்ஸ் ஆட வைக்க வேண்டும் என நினைத்தது சரியான திட்டமே. ஆனால், டி20 யில் 120 ஸ்ட்ரைக் வரை அல்லது குறைந்தபட்சமாக Run a ball இல் ஸ்கோர் செய்வதே நல்ல ஆங்கர் இன்னிங்ஸாக எடுத்துக் கொள்ள முடியும். சிம்மோன்ஸ் ஆடியது ரொம்பவே சுமாரான ஆட்டமே. அவர் ஆடிய பந்துகளில் பாதியை கெய்ல் ஆடியிருந்தால் செட்டில் ஆகி நின்று வெளுத்திருப்பார். தென்னாப்பிரிக்கா சார்பில் பிரெட்டோரியஸ் 3 விக்கெட்டுகளையும் மகாராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
தென்னாப்பிரிக்க அணிக்கு டார்கெட் 144. கேப்டன் பவுமா தொடக்கத்திலேயே ரன் அவுட் ஆனாலும் ரீஷா ஹென்ரிக்ஸ், மார்க்ரம், வாண்டர் டஸன் என மூவரும் பொறுப்பான இன்னிங்ஸை ஆடியிருந்தனர். மார்க்ரம் 26 பந்துகளில் 51 ரன்களை எடுத்து போட்டியை வெல்ல காரணமாக அமைந்தார்.
தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கிரிக்கெட்டை தாண்டி இந்த போட்டியில் ஒரு சர்ச்சை அரங்கேறியிருந்தது. போட்டிகள் தொடங்குவதற்கு முன் ரேசிசத்திற்கு எதிராக வீரர்கள் முட்டி போட்டு கைகளை உயர்த்துவது வழக்கம். தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய வீரரான குவிண்டன் டீகாக் நேற்று இப்படி முட்டி போடுவதற்கு விரும்பாமல் போட்டியிலிருந்து விலகினார்.
தொடர்ந்து எல்லா போட்டிகளிலும் இப்படி முட்டி போட்டி ரேசிசத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஆக, இந்த முறையை விரும்பாத குவிண்டன் டீ காஜ் இந்த தொடரில் தொடர்ந்து ஆடுவாரா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. டீகாக்கின் இந்த செயலுக்கு நிறைய எதிர்ப்பும் கொஞ்சம் ஆதரவும் இருக்கிறது. நிறவெறிக்கு எதிராக முட்டி போடுவதில் என்ன பிரச்சனை? என்று ஒரு தரப்பும், டீகாக்கிற்கு அவரது அரசியல் நிலைப்பாட்டடை கடைபிடிக்க அத்தனை உரிமையும் இருக்கிறது என ஒரு தரப்பும் கருத்து தெரிவித்து வருகிறது.
தென்னாப்பிரிக்க அணியின் முதல் மற்றும் இப்போதைய கேப்டனான பவுமாவும் டீகாக்கிற்கு ஆதரவாக பேசியுள்ளது. 'டீ காக்கிற்கு அவரது எண்ணத்தை வெளிப்படுத்த உரிமை இருக்கிறது. நாங்கள் இன்னமும் ஒரு அணிதான். அவர் எங்களில் ஒருவர்தான். அவருக்கு தோள் கொடுத்து நிற்போம்' என பேசியிருக்கிறார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?