Sports
T20 உலகக்கோப்பை - ரெக்கார்டை உடைத்த பாகிஸ்தான்.. இந்தியாவின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன?
டி20 உலகக்கோப்பை தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியிருக்கிறது.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமே டாஸை வென்றிருந்தார். முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தார். இந்திய அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களில் இந்திய அணி 151-7 என்ற ஸ்கோரை எட்டியது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் இலக்கை எட்டியது.
இந்தியாவின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன?
பேட்ஸ்மேன்களின் சொதப்பல்:
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்திருந்தது. முதல் 6 ஓவர் பவர்ப்ளேக்குள்ளாகவே இந்திய அணி மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. ஓப்பனர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் ஷா அஃப்ரிடியின் பந்துவீச்சில் lbw மற்றும் போல்டாகி வெளியேறினர். ரோஹித் ரன் எதுவும் எடுக்கவில்லை. ராகுல் 3 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இந்திய பேட்ஸ்மேன்கள் எப்போதுமே தரமான இடக்கை வேகங்கள் ஓவர் தி விக்கெட்டில் வந்து வீசும் இன்கம்மிங் டெலிவரிகளுக்கு திணறவே செய்திருக்கின்றனர். நேற்றும் அப்படியே நடந்தது. ஷாகின் ஷா அஃப்ரிடியின் இன்ஸ்விங்கிற்கே ரோஹித்தும் ராகுலும் இரையாகியிருந்தனர்.
பவர்ப்ளே முடிவதற்குள்ளே 11 ரன்னில் சூரியகுமார் யாதவும் ஹசன் அலியின் பந்துவீச்சில் அவுட் ஆனார். பவர்ப்ளேயில் 36 ரன்களை மட்டுமே எடுத்து இந்தியா மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அங்கேயே இந்தியாவின் ரன்ரேட் குறைய தொடங்கிவிட்டது. இதன்பிறகு, கேப்டன் கோலியும் ரிஷப் பண்ட்டும் கூட்டணி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் போட்டனர் பண்ட் 39 ரன்களை எடுத்தார். கோலி 57 ரன்களை எடுத்தார். இவர்கள் இருவரின் ஆட்டத்தால் இந்திய அணி 150 ரன்களை கடந்து 152 ரன்களை பாகிஸ்தான் அணிக்கு டார்கெட் ஆக்கியது.
பௌலிங் பவர்ப்ளே:
பேட்டிங்கில் எப்படி பவர்ப்ளேயில் திணறி இந்தியா ஆட்டத்தை கோட்டைவிட்டதோ, அதேமாதிரி பௌலிங்கிலும் பவர்ப்ளேயில் சொதப்பியிருந்தது. பாகிஸ்தான் அணி பவர்ப்ளேயில் இந்தியாவின் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தி தடுமாற செய்தது. ஆனால், இந்திய பௌலர்களால் அப்படி பாகிஸ்தானின் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. கேப்டன் பாபர் அசாமும் முகமது ரிஸ்வானும் ஓப்பனர்களாக களமிறங்கினர். இருவருமே பாகிஸ்தானின் டாப் க்ளாஸ் பேட்ஸ்மேன்கள். பாபர் அசாம் கடந்த மூன்று ஆண்டுகளில் டி20 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர். கோலிக்கு போட்டியாக பார்க்கப்படுபவர்.
முகமது ரிஸ்வான் பாபர் அசாமுக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்கு அதிக ரன்களை எடுத்துக் கொடுக்கும் வீரராக இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்துக்கு சென்று டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்கு அதிக ரன்களை அடித்திருந்தவர் ரிஸ்வானே. ஐ.பி.எல் ஐ போன்று பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீகின் கடைசி சீசனில் அதிக ரன்களை அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பாபர் அசாம். இரண்டாவது இடத்தில் இருப்பவர் முகமது ரிஸ்வான்.
இந்திய அணி வெல்ல வேண்டுமாயின் இவர்கள் இருவரின் விக்கெட்டையும் பவர்ப்ளேக்குள்ளாகவே வீழ்த்தினால்தான் உண்டு என்ற நிலையில் இந்திய அணி இவர்களின் விக்கெட்டை எடுக்க தடுமாறியது. நின்று நிதானமாக அவசர கதியிலான ஷாட்கள் எதுவும் இல்லாமல் இருவரும் பொறுப்பாக ஆடினர். ரிஸ்வான் 79 ரன்களையும் பாபர் அசாம் 68 ரன்களையும் எடுத்து போட்டியை 18 வது ஓவரிலேயே முடித்தனர்.
ரோஹித், ராகுல், கோலி என இந்தியாவின் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாகின் ஷா அஃப்ரிடி க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதற்கு முன் இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக்கோப்பை போட்டிகளில் 12 முறை மோதியிருக்கின்றனர். 12 முறையும் இந்தியாவே வென்றிருந்தது. நேற்றைய வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி அந்த பழைய ரெக்கார்டையும் வரலாறையும் உடைத்துள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!