Sports

T20 உலகக்கோப்பை : இந்தியாவிற்கு சாதகமான அந்த மூன்று அம்சங்கள் என்னென்ன?

டி20 உலகக்கோப்பை தொடரின் முக்கிய சுற்றான சூப்பர் 12 போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்த தொடருக்குள் நுழைவதற்கு முன்பாக இந்திய அணிக்கு இயல்பாகவே வாய்க்கப் பெற்றிருக்கும் சில சாதகமான அம்சங்களை இங்கே பார்ப்போம்;

இந்திய அணியின் க்ரூப்:

சூப்பர் 12 சுற்றில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவுக்கு 6 அணிகள். இந்த 6 அணிகளும் தங்களுக்குள்ளாகவே மோதிக்கொள்ளும். இறுதியில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். முதல் பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இரண்டாம் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியுசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கிறது. ஒப்பீட்டளவில் பார்த்தால் முதல் பிரிவை விட இந்திய அணி இடம்பெற்றிருக்கும் இரண்டாவது பிரிவு கொஞ்சம் போட்டி குறைவான பிரிவாகவே இருக்கிறது. அதனால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிப்பெற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து போன்ற அணிகள் அப்செட் அளிக்கும் திறனுடையவை என்றாலும் அதற்கான வாய்ப்பு குறைவே.

ஷார்ஜாவில் போட்டி இல்லை:

துபாய், அபுதாபி, ஷார்ஜா என மூன்று இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த மூன்று மைதானங்களில் ஷார்ஜா கொஞ்சம் அபாயமான மைதானமாகவே இருக்கிறது. 2020 ஐ.பி.எல் சீசனில் ஷார்ஜா மைதானம் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மைதானமாக இருந்தது. 200+ ரன்களையெல்லாம் எளிதில் சேஸ் செய்தார்கள். ஆனால், சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல் சீசனில் ஷார்ஜா மைதானம் அதிரடிக்கு உகந்ததாக இல்லை. ரொம்பவே மந்தமான நிலையிலேயே இருந்தது. ஷார்ஜா மைதானத்தின் ஆவரேஜ் ஸ்கோரே 135-140 என்றளவில்தான் இருந்தது. பேட்ஸ்மேன்கள் ஒரு சிக்சரை அடிப்பதற்கு கூட சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்த மைதானத்தில் இரண்டாவது பிரிவில் ஆடும் மற்ற அணிகளுக்கு போட்டிகள் இருக்கும் போதும் இந்தியாவிற்கு இந்த மைதானத்தில் ஒரு போட்டி கூட இல்லை. ஷார்ஜா மைதானத்தில் வெல்லும் அளவுக்கு இந்திய அணிக்கு வலு இருந்தாலும் ரிஸ்க் எதற்கு? அதனால் ஷார்ஜாவில் போட்டி இல்லாதது ஒரு சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எல்:

இந்த உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்திய அணி 2020 க்கு முன்பு வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் அவ்வளவாக போட்டிகளில் ஆடியதில்லை. ஆனால், 2020 ஐ.பி.எல் சீசனும் 2021 ஐ.பி.எல் சீசனின் இரண்டாம் பாதியும் ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் நடந்திருக்கிறது. இப்போது உலகக்கோப்பை இந்திய அணியில் இருக்கும் அத்தனை வீரர்களும் ஒன்றரை ஐ.பி.எல் சீசனை அரபு அமீரக மைதானங்களில் ஆடியிருக்கின்றனர்.

பல மாதங்களாக அங்கேயே தங்கியிருக்கின்றனர். இந்த அனுபவத்தால் எளிதில் தங்களை அந்த சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், ஒவ்வொரு மைதானத்திற்கு எந்த மாதிரியான வீரர்களை பயன்படுத்த வேண்டும் என்கிற தெளிவான திட்டமும் ஐ.பி.எல் மூலம் கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட இப்போது ஐக்கிய அரபு அமீரகம் இந்திய அணிக்கு சொந்த நாடு போன்றே மாறியிருக்கிறது. பாகிஸ்தானும் பல ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் கிரிக்கெட் ஆடி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று அம்சங்களும் இந்தியாவிற்கு தானாகவே இயல்பாக வாய்க்கப் பெற்ற சாதகமான அம்சங்களாக பார்க்கப்படுகிறது.

Also Read: T20 உலகக்கோப்பை - சில தீர்வுகள்.. சில பிரச்சனைகள்.. பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவின் செயல்பாடு எப்படி?