Sports

பதறவைத்த தென்னாப்பிரிக்கா... கடைசி ஓவர் வரை சென்று வென்ற ஆஸி!

டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்கா அணிகளும் மோதியிருந்தன. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச்சே டாஸை வென்றிருந்தார். முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்திருந்தார்.

ஆஸ்திரேலிய அணி வென்றதற்கான முக்கிய காரணங்கள்:

ஹேசல்வுட் :

தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்கத்திலேயே அடுத்தடுத்த அதிர்ச்சியை ஹேசல்வுட் கொடுத்திருந்தார். வாண்டர் டஸன் மற்றும் குவிண்டன் டீ காக் இருவரின் விக்கெட்டையுமே அடுத்தடுத்த ஓவர்களில் வீசியிருந்தார். வாண்டர் டஸன் அதிரடி ஃபார்மில் இருந்தார். பயிற்சி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியிருந்தார். அவரை ஹேசல்வுட் வீசிய முதல் பந்திலேயே எட்ஜ் எடுத்து கீப்பரிடம் கேட்ச் ஆக வைத்தார். இரண்டாவது ஓவரில் குவிண்டன் டீ காக்கை போல்டாக்கினார். இரண்டுமே மிக முக்கியமான விக்கெட்டுகள். பவர்ப்ளேயில் 2 ஓவர்கள் அதாவது 12 பந்துகளை வீசியிருந்த ஹேசல்வுட் 11 பந்துகளை டாட் ஆக்கியிருந்தார். ஒரே ஒரு ரன்னை மட்டுமே கொடுத்திருந்தார். ஹேசல்வுட் டெஸ்ட் மேட்ச்சுக்கேற்ற பௌலர் என அறியப்பட்டவர். ஆனால், இந்த போட்டியில் அந்த டெஸ்ட் மேட்ச் அணுகுமுறையை பயன்படுத்தியே தாக்கம் ஏற்படுத்தியிருந்தார். மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரே மாதிரியாக ஒரே லைன் & லெந்த்தில் தொடர்ச்சியாக வீசி பேட்ஸ்மேனின் பொறுமையை சோதித்து விக்கெட் எடுக்க வேண்டும். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படை. ஆனால், டி20 கிரிக்கெட்டில் இது அப்படியே தலைகீழாக இருக்கும். பௌலர் ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு வேரியேஷனில் வீசி பேட்ஸ்மேனை சர்ப்ரைஸ் செய்ய வேண்டும். இது டி20 க்கான பந்துவீச்சின் அடிப்படை. ஆனால், ஹேசல்வுட் டி20யில் டெஸ்ட் அணுகுமுறையை கடைபிடிப்பவர். தென்னாப்பிரிக்காவிற்கெதிரான இந்த போட்டியில் கூட ஒரே குட் லெந்தில் வீசிய பேட்ஸ்மேன்களை தடுமாற செய்திருப்பார். இதே அணுகுமுறையோடு டெத் ஓவர்களுக்கு வரும் போது கொஞ்சம் அடியும்பட்டார். ஆனால், பெரிதாக சேதாரம் இல்லை. 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

மேக்ஸ்வெல் பௌலிங்:

தென்னாப்பிரிக்க அணியின் முதல் விக்கெட்டை மேக்ஸ்வெல்லே வீழ்த்தியிருந்தார். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் சிறப்பாக பவுண்டரிகளை அடித்த தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமாவை இரண்டாவது ஓவரில் க்ளீன் போல்டாக்கினார். தென்னாப்பிரிக்க அணியின் வீழ்ச்சியை வெற்றிகரமாக தொடங்கி வைத்திருந்தார். 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். ஆஸ்திரேலிய அணி 4 மெயின் பௌலர்களை மட்டுமே கொண்டிருந்தது. மீதமிருக்கும் நான்கு ஓவர்களை ஆல்ரவுண்டர்களை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என நினைத்திருந்தது. அதனாலயே மேக்ஸ்வெல் பயன்படுத்தப்பட்டார். ஆனால், மேக்ஸ்வெல் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது சர்ப்ரைஸாக அமைந்தது. பேட்டிங்கிலும் ஸ்மித்துடன் சேர்ந்து மேக்ஸ்வெல் போட்ட பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலியாவிற்கு பெரிதும் உதவியிருந்தது.

ஹேசல்வுட், மேக்ஸ்வெல் இவர்களுடன் கம்மின்ஸ், ஷம்பா ஆகியோரும் சிறப்பாக வீசியிருந்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 118 ரன்களுக்குள் கட்டுப்பட்டது.

எளிதான டார்கெட்டாக இருந்தாலும் தென்னாப்பிரிக்க பௌலர்களின் கிடுக்குப்பிடி பௌலிங்கால் ஆஸ்திரேலியா கடைசி ஓவர் வரை சென்றது.

மேட்ச்சை மாற்றிய அந்த ஒரு முடிவு:

முதலில் குறிப்பிட்டதை போன்றே ஆஸ்திரேலிய அணி 4 மெயின் பௌலர்களை மட்டுமே வைத்துக் கொண்டு களமிறங்கியது. மீதமுள்ள ஓவர்களை ஆல்ரவுண்டர்களை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என பேட்டிங் பலத்தை கூட்டியிருந்தது. வார்னர், ஃபின்ச், மார்ஸ், மேக்ஸ்வெல், ஸ்மித், ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட், கம்மின்ஸ் என 8 வீரர்கள் பேட்டிங் ஆடக்கூடியவர்களாக இருந்தார்கள். சேஸிங்கின் போது ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த போதும் அந்த அணி வென்றதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது அந்த அணியின் பேட்டிங் ஆழமே.

வார்னர், ஃபின்ச் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இல்லாததை கருத்தில் கொண்டே பௌலரை குறைத்து ரிஸ்க் எடுத்து கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுக்கு செல்லும் முடிவுக்கு ஆஸ்திரேலியாவை தள்ளியது. ஆனால், அந்த முடிவு இந்த போட்டியில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வீழ்ச்சிக்கு பிறகும் ஆஸ்திரேலியா போட்டியை வெல்ல காரணமாக அமைந்தது.

தென்னாப்பிரிக்க அணி தோற்றிருந்தாலும் 119 ரன்களை எளிதில் விட்டுக் கொடுக்காமல் கடைசி ஓவர் வரை இழுத்துச் சென்று ஆச்சர்யப்படுத்தியிருந்தது. ரபாடா, நோர்கியா, ஷம்சி, மகாராஜ், ப்ரிட்டோரியஸ் என அந்த அணியின் பௌலர்கள் மிகச்சிறப்பாக வீசியிருந்தனர். தென்னாப்பிரிக்காவை பொறுத்தவரை இது ஒரு வெற்றிகரமான தோல்வியே!

Also Read: T20 உலகக்கோப்பை : இந்தியாவிற்கு சாதகமான அந்த மூன்று அம்சங்கள் என்னென்ன?