Sports
T20 உலகக்கோப்பை - சில தீர்வுகள்.. சில பிரச்சனைகள்.. பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவின் செயல்பாடு எப்படி?
உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு முன்பாக இந்திய அணி பயிற்சி போட்டிகளில் ஆடி வருகிறது. முதல் பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியிருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது பயிற்சி போட்டி நேற்று நடைபெற்றது. இதிலும் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணியே டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்துருந்தது. இந்திய அணியில் விராட் கோலி, பும்ரா, ஷமி ஆகியோர் ஓய்வில் இருந்தனர். இந்திய அணியை பொறுத்தவரைக்கும் பந்துவீச்சுதான் கொஞ்சம் பிரச்சனையாக இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தை இந்தியா வென்றிருந்தாலும் இந்திய பௌலர்கள் அவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருக்கவில்லை. புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்காமல் இருந்தார். லெக் ஸ்பின்னரான ராகுப் சஹார் 4 ஓவர்களில் 43 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருந்தார். ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும் அவரின் எக்கானமி ரேட் 10 ஆக இருந்தது. அஷ்வின் எக்கானமியாக வீசினாலும் விக்கெட் எடுக்கவில்லை. பும்ரா மட்டுமே ரன்னையும் குறைவாக கொடுத்து விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். ஒட்டுமொத்தமாக சுமாரான பெர்ஃபார்மென்ஸையே பந்துவீச்சாளர்கள் வழங்கியிருந்தனர். மேலும், ஹர்திக் பாண்ட்யா பந்துவீசாததால் இந்தியாவிற்கு 6 வது பௌலிங் ஆப்சனும் இல்லாமல் இருந்தது.
இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காணும் பொருட்டே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா களமிறங்கியது. இந்த போட்டியின் மூலம் பௌலர்கள் ஓரளவுக்கு ஃபார்முக்கு திரும்பிவிட்டதாகவே தெரிகிறது. கடந்த போட்டியில் 54 ரன்களை வழங்கிய புவனேஷ்வர் குமார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 27 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். கடந்த போட்டியில் டெத் ஓவரில் அதிக ரன்களை கொடுத்திருந்தார்.
இந்த போட்டியில் டெத் ஓவர்களில் 2 ஓவர்களை வீசி 19 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். அதேமாதிரி, கடந்த போட்டியில் விக்கெட்டே எடுக்காத அஷ்வின் இந்த போட்டியில் அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் என இரண்டு அபாயகரமான விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின் 2 ஓவர்களில் 8 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். ராகுல் சஹாரும் 3 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி, ஷர்துல் தாகூர் ஆகியோர் சுமாராகவே வீசியிருந்தனர்.
இந்திய அணியின் 6 வது பௌலிங் ஆப்சன் யார்? என்கிற கேள்விக்கு மட்டும் விடை இன்னும் கிடைக்கவில்லை. கோலி 2 ஓவர்களை வீசியிருந்தார். ஆனால், முக்கியமான போட்டிகளில் அவரால் வீச முடியாது என்பதால் கோலியை 6 வது ஆப்சனாக பார்க்க முடியாது. ஹர்திக் பாண்ட்யா இந்த போட்டியிலும் பந்து வீசவில்லை. டாஸின் போது பேசிய ரோஹித் சர்மா 6 பௌலிங் ஆப்சனின் முக்கியத்துவம் குறித்தே முழுக்க முழுக்க பேசினார். மேலும், 'ஹர்திக் பாண்ட்யா இன்னும் பந்துவீச ஆரம்பிக்கவில்லை. ஆனால், போட்டிகள் தொடங்குவதற்குள் அவர் பந்துவீசும் தகுதிக்கு வந்துவிடுவார்' என நம்பிக்கை தெரிவித்திருந்தார். ரோஹித்தின் நம்பிக்கை நிஜமாவது இந்திய அணிக்கு ரொம்பவே முக்கியம்.
பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் ஓப்பனிங்கில் ரோஹித் சர்மா தான் ஃபார்மில் இருப்பதை அரைசதம் அடித்து மீண்டும் நிரூபித்துவிட்டார். சமீபமாக கொஞ்சம் தடுமாறி வந்த சூர்யகுமார் யாதவை ஒன் டவுணில் இறக்கி அவரையும் ஃபார்முக்கு கொண்டு வந்துவிட்டார்கள். ரோஹித் சர்மா 41 பந்துகளில் 60 ரன்களையும், சூர்யகுமார் 27 பந்துகளில் 38 ரன்களையும் அடித்திருந்தனர். கடைசியில் ஹர்திக் பாண்ட்யா ஒரு சிக்சர் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்திருந்தார்.
பயிற்சி போட்டிகளின் மூலம் இந்திய அணிக்கு சில குழப்பங்கள் தீர்ந்திருக்கிறது. ஆனால், இன்னமும் விடை தெரியாத சில கேள்விகளும் தொக்கி நிற்கவே செய்கிறது. அவற்றை இந்திய அணி எப்படி சமாளிக்கப்போகிறது என்பது சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும்.
இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வருகிற 24 ஆம் தேதி சந்திக்கவிருக்கிறது. இந்திய அணி ஆடிய இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் வென்றிருக்கிறது. பாகிஸ்தான் அணி ஆடிய இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!