Sports
“பெரிய விசில் அடிங்க”... கடந்த கால தவறுகளை திருத்தி 4வது முறையாக கோப்பையை வென்ற CSK !
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டியில் சென்னை அணி வென்றிருக்கிறது. இதன் மூலம், சிஎஸ்கே நான்காவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
கொல்கத்தா அணியின் கேப்டனான இயான் மோர்கனே டாஸை வென்றிருந்தார். முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தார். சென்னை அணி முதலில் பேட் செய்தது. கொல்கத்தா அணியில் ஷகிப்-அல்-ஹசன், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி என மூன்று ஸ்பின்னர்கள் நல்ல ஃபார்மில் இருந்தார்கள். இவர்களை சென்னை அணி எப்படி சமாளிக்கப்போகிறது என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. ஆனால், சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் இவர்களை லாவகமாக சமாளித்ததோடு ரன்களையும் சேர்த்தனர்.
முதல் விக்கெட்டுக்கு ருத்ராஜும், டூ ப்ளெஸ்சிஸும் 61 ரன்களை சேர்த்தனர். ருத்ராஜ் 32 ரன்களில் நரைனின் பந்தில் அவுட் ஆகி வெளியேறியிருந்தார். இந்த 32 ரன்கள் மூலம் அதிக ரன்களை எடுத்தவர்களின் பட்டியலில் கே.எல்.ராகுலை முந்தி முதலிடத்திற்கு முன்னேறி ஆரஞ்சு தொப்பியை வென்றார்.
நம்பர் 3 இல் வந்த ராபின் உத்தப்பா அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார். இவருக்கு அடுத்து வந்த மொயீன் அலியும் அதிரடியாக 20 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார்.
டூ ப்ளெஸ்சிஸ் மட்டும் ஒரு முனையொ விக்கெட்டே விடாமல் நிலைத்து நின்று ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரால் 86 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இன்னிங்ஸின் கடைசி பந்தில் அவுட் ஆகியிருந்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 192 ரன்களை எடுத்தது. கொல்கத்தா அணிக்கு டார்கெட் 193.
கொல்கத்தா அணியின் ஓப்பனர்களான வெங்கடேஷ் ஐயரும் சுப்மன் கில்லும் மிகச்சிறப்பாக ஆடினார். குறிப்பாக, வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக வெளுத்தெடுத்தார். அவர் ரன் ஏதும் எடுக்காத நிலையில் கொடுத்த ஒரு கேட்ச்சை தோனி ட்ராப் செய்திருப்பார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
வெங்கடேஷ் ஐயர் 32 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு கொல்கத்தா 91 ரன்களை சேர்த்திருந்தது. ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் கையே ஓங்கியிருந்தது. இந்நிலையில்தான் 11 வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா என இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஓவர்தான் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இதன்பிறகு போட்டி முழுவதும் சென்னை அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சுப்மன் கில் 51 ரன்களை எடுத்த நிலையில் தீபக் சஹாரின் பந்துவீச்சில் lbw ஆனார். அவ்வளவுதான். கொல்கத்தாவின் விக்கெட்டுகள் வரிசையாக விழ ஆரம்பித்துவிட்டது.
சென்னை அணியில் ப்ராவோ, தீபக் சஹார், ஷர்துல் தாகிர், ஜடேஜா, ஹேசல்வுட் என வீசிய அத்தனை பௌலர்களும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நான்காவது முறையாக சென்னை அணி கோப்பையை வென்றது. கடந்த ஆண்டு இதே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த சீசனில் சிஎஸ்கே முதல் அணியாக ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழந்து வெளியேறியிருந்தது. அவமானகரமாக வீழ்ந்த அதே இடத்திலேயே மீண்டும் வெகுண்டெழுந்து தங்களை நிரூபித்துக் காட்டியுள்ளது.
கடந்த சீசனில் சென்னை அணிக்கு என்னவெல்லாம் தவறாக அமைந்ததோ அதெல்லாம் இந்த சீசனில் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. 'ஓப்பனிங்கில் மொமண்டம் இல்லை' இதுதான் தோனி கடந்த சீசனில் அணி குறித்து வெளிப்படுத்திய முதல் குற்றச்சாட்டு. ஆனால், இந்த சீசனில் சென்னை அணியின் பலமே ஓப்பனிங் கூட்டணிதான்.
சென்னை அணி அடித்த மொத்த ரன்களில் 53% ரன்களை ருத்துராஜும், டூ ப்ளெஸ்சிஸுமே அடித்திருந்தனர். இருவரும் இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்திருந்தனர். அதேமாதிரி, கடந்த சீசனில் 7-15 மிடில் ஓவர்களில் சென்னை அணி மிகக்குறைந்த அளவிலேயே ஸ்கோர் செய்திருந்தது. இந்த முறை அந்த குறையை அதிரடியாக ஆடி மொயீன் அலி தீர்த்து வைத்தார். கடந்த சீசனில் ரெய்னா இல்லாதது பிரச்சனை. இந்த சீசனில் ரெய்னா இருந்தும் ஃபார்மில் இல்லாதது பிரச்சனை. ஆனால், ரெய்னாவுக்கு பதில் அணிக்குள் வந்த உத்தப்பா ப்ளே ஆஃப்ஸ்அற்றும் இறுதிப்போட்டியில் கலக்கிவிட்டார்.
இந்த சீசனில் முதல் பாதியில் கூட ஷர்துல் தாகூர் ரொம்பவே சுமாராகத்தான் பெர்ஃபார்ல் செய்திருந்தார். 7 போட்டிகளில் 5 விக்கெட்டுகளைத்தான் எடுத்திருந்தார். ஆனால், இந்த இரண்டாம் பாதியில் 9 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். பெரும்பாலான விக்கெட்டுகள் இக்கட்டான கட்டத்தில் அணிக்கு தேவையான சமயத்தில் வந்தவை.
இப்படி கடந்தகால தவறுகளை திருத்திக் கொண்டு இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டதாலயே சென்னை அணி கோப்பையை வென்றிருக்கிறது. போட்டிக்கு பிறகு பேசிய தோனி அடுத்த சீசனில் ஆடுவது குறித்து யோசிப்பதாக கூறியுள்ளார். அடுத்த சீசன் இந்தியாவில் வைத்து நடைபெற போகிறது என்பதால் நிச்சயம் ஆடுவார் என எதிர்பார்க்கலாம். விசில் போடுங்க!
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்