Sports
#IPL2021 - ராஜஸ்தானை ஊதி தள்ளிய மும்பை இந்தியன்ஸ்.. ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பில் நீடிப்பு!
ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை சாத்தியமாக்கும் முனைப்போடு ராஜஸ்தான் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் நேற்று மோதியிருந்தன. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றது. இதன்மூலம், மும்பை அணி ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பில் இன்னமும் நீடிக்கிறது. ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழந்தது.
ராஜஸ்தான் அணியே முதலில் பேட் செய்திருந்தது. கடந்த போட்டியில் சென்னைக்கு எதிராக 190 ரன்களை 18 வது ஓவரிலேயே சேஸ் செய்திருந்ததால், இந்த போட்டியிலும் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், போட்டி ஷார்ஜாவில் வைத்து நடைபெற்றது. கடந்த சீசனில் ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியையெல்லாம் ராஜஸ்தான் அதிரடியாக வென்றிருந்தது. ஆனால், இந்த முறை ஷார்ஜா பிட்ச் ரொம்பவே மெதுவாக இருப்பதால் கடந்த முறை போன்று எந்த அணியாலும் அதிக ரன்களை எடுக்க முடியவில்லை. இதனால் ராஜஸ்தான் அணியும் கடுமையாக திணறியது.
எவின் லீவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் ஓரளவுக்கு நன்றாகவே பேட்டிங்கை தொடங்கியிருந்தார்கள். லீவிஸ் 24 ரன்களையும் ஜெய்ஸ்வால் 12 ரன்களையும் எடுத்து அவுட் ஆகியிருந்தனர். இதன்பிறகு, ராஜஸ்தான் அணியில் எந்த பேட்டரும் சொல்லிக்கொள்லும் அளவுக்கு ரன்கள் அடிக்கவே இல்லை. டெஸ்ட் மேட்ச் போன்றே ஆடிக்கொண்டிருந்தனர். 6 வது ஓவரில் ஒரு பவுண்டரி வந்திருந்தது. அதன்பிறகு, 19 வது ஓவரில்தான் அடுத்த பவுண்டரி வந்தது. லீவிஸ் மற்றும் ஜெய்ஸ்வாலை தவிர வேறு யாரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 100 ஐ கூட தொடவில்லை.
மும்பை சார்பில் நேதன் குல்டர்-நைல் 4 ஓவர்கள் வீசி 14 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளையும், ஜிம்மி நீஷம் 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும், பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இவர்களின் சிறப்பான பந்துவீச்சால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 90 ரன்களை மட்டுமே எடுத்தது.
ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் இந்த ஸ்கோரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மும்பை எடுக்க வேண்டும். அதனால் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டினர். கேப்டன் ரோஹித் சர்மா 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். இன்னொரு ஓப்பனரான இஷன் கிஷன் நின்று அதிரடியாக ஆடினார். 25 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். சேத்தன் சர்க்காரியாவின் ஒரே ஓவரில் 21 ரன்களை எடுத்திருந்தார். முஷ்டபிஷுர் ரஹ்மான் வீசிய 9 வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையுமே பவுண்டரி மற்றும் சிக்சராக்கி வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
11.4 ஓவர்களை மீதம் வைத்து மும்பை அணி இந்த போட்டியை வென்றது. இதனால், கொல்கத்தா அணியுடன் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பில் இன்னமும் நீடிக்கிறது. சன்ரைசர்ஸுக்கு எதிராக ஆடப்போகும் கடைசி போட்டியிலும் இதே போன்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் அந்த அணி வெல்லும்பட்சத்தில் ப்ளே ஆஃப்ஸ்க்கு தகுதிப்பெறும் வாய்ப்பு இருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!