Sports

சென்னையின் தோல்வியும்; தோனி சந்தித்த அந்த 27 பந்துகளும் - தோனி சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் இது ?

ப்ளே ஆஃப்ஸ்க்கு ஏற்கனவே தகுதிப்பெற்றுவிட்ட நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று மோதின. நம்பர் 1 இடத்தை யார் பிடிப்பது? என்கிற போட்டியே இரு அணிகளுக்குள்ளும் இருந்தது. டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்டே டாஸ் வென்றார். முதலில் பந்துவீச போவதாக அறிவித்தார். சென்னை அணியில் ரெய்னாவுக்கு சிறிய காயம் ஏற்பட்டிருந்ததால் அவருக்கு பதில் ராபின் உத்தப்பா சேர்க்கப்பட்டிருந்தார்.

வழக்கமாக சிறப்பான தொடக்கம் கொடுக்கும் சென்னை அணியின் ஓப்பனர்கள் நேற்று சறுக்கினர். ருத்ராஜ் 13 ரன்களிலும் டூ ப்ளெஸ்சிஸ் 10 ரன்களிலும் நோர்கியா மற்றும் அக்சர் படேலின் பந்துவீச்சில் அவுட் ஆகியிருந்தனர். ரெய்னாவுக்கு பதில் உள்ளே வந்திருந்த உத்தப்பாவும் 19 ரன்களில் அஷ்வின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆகி அவுட் ஆனார். மொயீன் அலி 5 ரன்களில் அக்சர் படேலின் பந்தில் அவுட் ஆக்யிருந்தார்.

இதன்பிறகு, தோனியும் அம்பத்தி ராயுடுவும் கூட்டணி போட்டனர். இருவரும் மிடில் ஓவர்களில் பொறுமையாக ஆடிவிட்டு கடைசி 5 ஓவர்களில் ரன்ரேட்டை உயர்த்திக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தோடு ஆடினார். ஆனால், அவர்களின் திட்டம் சொதப்பவே செய்தது. குறிப்பாக, கேப்டன் தோனி கடுமையாக சொதப்பினார்.

9 வது ஓவரில் தோனி க்ரீஸுக்குள் வந்தார்.

20 வது ஓவர் வரை க்ரீஸில் நின்றிருக்கிறார்.

எடுத்த ரன்கள் 18 (27 பந்துகள்). பெருத்த ஏமாற்றமான இன்னிங்ஸ்.

கடந்த 3 சீசன்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக மிகக்குறைந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பது தோனிதான். Run a ball ஐ விட குறைவாக 97 தான் வைத்திருக்கிறார்.

மிடில் ஓவரில் உள்ளே வந்ததால் ஸ்பின்னர்களைத்தான் அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. டெல்லியில் லெக் ஸ்பின்னர் இல்லை என்பதால் கொஞ்சம் சமாளிப்பார் என எதிர்பார்த்தேன். விக்கெட் விடவில்லைதான் ஆனால் ஸ்பின்னர்களுக்கு எதிராக 16 பந்துகளை சந்தித்து 12 ரன்களை மட்டுமே எடுத்தார். ஸ்ட்ரைக் ரேட் 75 தான். கடந்த 3 வருடங்களில் அவரின் மோசமான ஸ்ட்ரைக்ரேட்டான 97 ஐ விட மோசமானது இது.

சரி, ஸ்பின்னுக்கு எதிராக விட்டதை வேகங்களுக்கு எதிராக அடித்து ஈடு செய்யலாம் என்றால் அதற்கும் வாய்ப்பில்லை. ஐ.பி.எல் ன் 'தி பெஸ்ட்' வேகக்கூட்டணி டெல்லியிடம் இருக்கிறது. வேகங்களுக்கு எதிராக தோனி ஷார்ட் பால்களில் அதிகம் திணறியிருக்கிறார். இன்றும் திணறினார். கடைசியில் ஆவேஷ் கான் வீசிய ஒரு ஷார்ட் டெலிவரியில்தான் எட்ஜ் வாங்கி அவுட்டும் ஆனார்.

வேகங்களுக்கு எதிராக,

ரபாடாவின் 6 பந்துகளை சந்தித்து 2 ரன்கள்.

நோர்கியாவின் 4 பந்துகளை சந்தித்து 4 ரன்கள்.

ஆவேஷ்கானுக்கு எதிராக 1 பந்தை சந்தித்து அவுட்.

மொத்தமாக 11 பந்துகளில் 6 ரன்னை மட்டும் எடுத்து விக்கெட்டையும் விட்டிருக்கிறார்.

முழுமையான சொதப்பல். தோனியின் இந்த மந்தமான ஆட்டத்தால் பவர்ப்ளேயில் 48 ரன்களை அடித்திருந்த சென்னை 7-15 ஓவரில் 45 ரன்களை மட்டுமே அடித்திருந்தது.

தோனி பழைய தோனி இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபித்திருக்கும் இன்னிங்ஸ் இது.

தோனி பழைய தோனி இல்லை என்பது அவருக்கு தெரியாதா?

நன்றாகவே தெரியும்.

பிறகும் ஏன் ஜடேஜாவுக்கு முன்பு களமிறங்கி சொதப்பினார்?

தோனி இதை ஒரு பரிச்சார்த்த முயற்சியாக செய்திருக்கக்கூடும். ருத்துராஜ் ஜடேஜா என ஒரு சில வீரர்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் ஆபத்தானது. சரியாக ப்ளே ஆஃப்ஸில் சென்று இவர்கள் சொதப்பினால் என்ன செய்வது என கேள்வி எழுந்திருக்கக்கூடும்.

ரெய்னா சுத்தமாக ஃபார்மில் இல்லை. மொயீன் அலி அரைகுறை ஃபார்ம். மிடில் ஓவரில் அம்பத்தி ராயுடு மட்டுமே எதோ ஆடிக்கொண்டிருக்கிறார். எனவே மற்ற வீரர்கள் சொதப்பினால் மிடில் ஆர்டரில் ராயுடுவுடன் கூட்டணி போட வேண்டிய பொறுப்பு தோனிக்கே இருக்கிறது.

அதற்கான ஒரி ட்ரையலாகவே தோனி இந்த போட்டியை எடுத்திருக்கக்கூடும்.

ஆனால், தோனி தான் நினைத்ததை விட மோசமான ஃபார்மில் இருக்கிறார்.

ப்ளே ஆஃப்ஸ் / ஃபைனலில் சென்னைக்கு ஒரு விஷயம் வினையாக கூடுமெனில் அது இந்த மிடில் ஆர்டர் சொதப்பலாக இருக்கக்கூடும்.

இந்த போட்டியில் கடைசியில் அம்பத்தி ராயுடு மட்டும் கொஞ்சம் பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்திருப்பார். 43 பந்துகளில் 55 ரன்கள் அடித்து ராயுடு நாட் அவுட்டாக இருந்தார்.

டெல்லி அணிக்கு டார்கெட் 137.

டெல்லி அணியும் இந்த சேஸை எளிமையாக முடித்துவிடவில்லை. கடைசி வரை இழுத்தே முடித்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டையும் விட்டுக்கொண்டிருந்தனர். ஜடேஜாவும் ஷர்துல் தாகூரும் மிடில் ஓவர்களில் எக்கனாமிக்கலாக வீசி விக்கெட்டையும் வீழ்த்தினர். ஜடேஜா 4 ஓவர்கல் வீசி 28 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் ஷர்துல் தாகூர் 4 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

கடைசி ஓவரில் 6 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், ப்ராவோ வீசிய அந்த ஓவரின் 4வது பந்தில் ரபாடா ஒரு பவுண்டரியை அடித்து மேட்ச்சை முடித்து வைத்தார். ஹெட்மயர் 28 ரன்களை அடித்து போட்டியை டெல்லி வெல்ல காரணமாக அமைந்தார்.

Also Read: செல்ஃபி எடுக்கும்போது 140 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்.. திக்திக் நிமிடங்கள்- மீட்க உதவிய Live Location