Sports
#LPL2021 ருத்துராஜ் சதமடித்தும் வீழ்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் அபார வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. ருத்துராஜ் கெய்க்வாட் அற்புதமான சதமடித்தும் சென்னை அணி தோல்வியை தழுவியிருக்கிறது.
சென்னை அணியே முதலில் பேட் செய்திருந்தது. வழக்கம்போல டூப்ளெஸ்சிஸும் ருத்துராஜ் கெய்க்வாட்டும் சிறப்பான தொடக்கமே கொடுத்திருந்தனர். முதல் விக்கெட்டுக்கு 47 ரன்களை சேர்த்திருந்தனர். டூப்ளெஸ்சிஸ் 25 ரன்களில் ராகுல் திவேதியாவின் பந்துவீச்சில் இறங்கி வந்து ஆட ஆசைப்பட்டு ஸ்டம்பிங் ஆகியிருந்தார். இதன்பிறகு, ரெய்னா , மொயீன் அலி மாதிரியான வீரர்கள் அடுத்தடுத்து வந்தாலும் ஒரே ஆளாக நின்று அசத்தியது என்னவோ ருத்துராஜ் கெய்க்வாட்தான்.
முதலில் மெதுவாக இன்னிங்ஸை தொடங்கியிருந்தார். ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற விதத்திலேயே அவரின் ரன் விகிதம் இருந்தது. ஆனால், பவர்ப்ளே முடிந்த பிறகு மெதுமெதுவாக கியரை மாற்ற தொடங்கி வேகம்பிடித்தார். 43 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருந்தார். இதன்பிறகு, ஜெட் வேகத்தில் பாய்ந்தார். கடைசி 17 பந்துகளில் மட்டும் 51 ரன்களை எடுத்திருந்தார். ருத்துராஜ் கெய்க்வாட்டை பொறுத்தவரைக்கும் அவர் ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் விதத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
கோலி, கே.எல்.ராகுல் போன்ற அனுபவமிக்க முன்னணி பேட்டர்களே இந்த சீசனில் ஸ்பின்னர்களுக்கு எதிராக 100 ஐ சுற்றியே ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கின்றனர். ஆனால், ருத்துராஜ் ஸ்பின்னர்களுக்கு எதிராக 130 என்றளவில் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். மேலும், டெத் ஓவர்களில் எந்த பௌலர் என்ற கணக்கெல்லாம் இல்லாமல் அடித்து வெளுக்கிறார். நேற்று கூட இன்னிங்ஸின் கடைசி பந்தில் சிக்சர் அடித்தாலே சென்ச்சூரி என்ற நிலையில் முஷ்டபிஷுர் ரஹ்மானின் பந்தில் சிக்சர் அடித்து அட்டகாசமாக சென்ச்சூரியை நிறைவு செய்தார்.
இந்த சீசனுக்கான ஆரஞ்சு தொப்பியும் ருத்துராஜை தேடி வந்தது. ருத்துராஜின் 101 ரன்கள் மற்றும் ஜடேஜாவின் இறுதிக்கட்ட அதிரடியால் சென்னை அணியின் ஸ்கோர் 189 ஆக உயர்ந்தது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு டார்கெட் 190. பௌலிங்கின் போது பெரிய உத்வேகம் இல்லாமல் இருந்த ராஜஸ்தான் அணி பேட்டிங்கின் போது வெகுண்டெழுந்தது. பவர்ப்ளேயில் மட்டும் 81 ரன்களை அடித்திருந்தது. இளம் வீரரான ஜெய்ஸ்வால் பயமின்றி அத்தனை பந்துகளையும் வெளுத்தெடுத்தார்.
19 பந்துகளிலேயே அரைசதத்தையும் கடந்தார். ஐ.பி.எல் வரலாற்றில் இந்திய அணிக்கு அறிமுகமாகாத வீரர் ஒருவர் அடித்த இரண்டாவது வேகமான அரைசதம் இதுவே. இவருக்கு துணையாக லீவிஸும் அதிரடியாக 27 ரன்களை சேர்த்திருந்தார். பவர்ப்ளேயில் இவர்கள் அடித்த அடியிலேயே போட்டி ராஜஸ்தான் பக்கம் திரும்பிவிட்டது. ஷர்துல் தாகூரின் ஷார்ட் பாலில் லீவிஸும் ஆசிஃப்பின் ஷார்ட் பாலில் ஜெய்ஸ்வாலும் அவுட் ஆகி வெளியேறினார்.
இதன்பிறகாவது சென்னை அணி எதாவது மேஜிக் செய்து போட்டியை மீண்டும் கைக்குள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்துவிட்டார் சிவம் துபே. இவ்வளவு நாட்களாக பென்ச்சிலேயே வைக்கப்பட்டிருந்த வெறியில் சென்னை பௌலர்களை அடித்து வெளுத்துவிட்டார். குறிப்பாக, ஸ்பின்னர்களை சிக்சராக பறக்கவிட்டார். சாம்சன் மற்றும் க்ளென் பிலிப்ஸின் உதவியுடன் அரைசதத்தை கடந்த துபே 64 ரன்கள் அடித்து போட்டியை வெற்றி பெறவும் வைத்தார். ராஜஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணி இந்த போட்டியை வென்றுள்ளதால் ப்ளே ஆஃப்ஸ்க்கான போட்டியை இன்னும் கடுமையாகியுள்ளது. மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் என நான்கு அணிகளும் ஒரே 10 புள்ளிகளோடு நான்காவது இடத்தை பிடிக்க முட்டி மோதி கொண்டிருக்கின்றனர். இதனால் இனி வரும் போட்டியெல்லாம் பரபரப்பின் உச்சத்தை தொடும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!