Sports
“முதல் அணியாக ப்ளே ஆஃப்ஸை உறுதி செய்த சென்னை..” அதிரடி காட்டாமல் சொதப்பிய பெங்களூர்!
சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது. பேட்டிங்கிற்கு சாதகமான ஷார்ஜாவில் வைத்து இந்த போட்டி நடைபெற்றதால் சிக்சர் மழை பொழியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த ஸ்பெசலும் இல்லாமல் வழக்கமான போட்டியாகவே இது நடந்து முடிந்திருக்கிறது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 156 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஷார்ஜா மைதானத்தில் இது மிகமிக குறைவான ஸ்கோர். சென்னை அணி இந்த டார்கெட்டை எளிமையாக சேஸ் செய்துவிட்டது.
சென்னை அணியின் கேப்டனான தோனியே டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருந்தார். கோலியும் படிக்கலும் ஓப்பனர்களாக களமிறங்கினர். இருவரும் மிகச்சிறப்பாக தொடங்கினர். குறிப்பாக, கேப்டன் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல அக்ரசிவாக ஆரம்பித்திருந்தார். தீபக் சஹார் வீசிய முதல் ஓவரின் முதல் இரண்டு பந்திலுமே பவுண்டரி அடித்திருந்தார். ஷர்துல் தாகூரின் ஓவரில் அடித்த் நோ லுக் சிக்சர் மைதானத்தின் மேற்கூரையில் சென்று விழுந்திருந்தது. இன்னொரு முனையில் படிக்கலும் அதிரடியாகவே ஆடியிருந்தார். இவர்களின் அதிரடியால் பவர்ப்ளேயில் மட்டும் 55 ரன்கள் வந்திருந்தது. முதல் 10 ஓவர்களில் எந்த பிரச்சனையுமே இல்லை. இந்த கூட்டணி மிகச்சிறப்பாக ஆடி 90 ரன்களை சேர்த்திருந்தது. விக்கெட்டையும் விட்டிருக்கவில்லை.
ஆனால், கடைசி 10 ஓவர்களில் பெங்களூர் அணி பயங்கர பின்னடைவை சந்தித்தது. கோலி 41 பந்துகளில் 53 ரன்களை எடுத்து ப்ராவோவின் பந்தில் அவுட் ஆகியிருந்தார். ஆரம்பத்தில் சிறப்பாக ஆடியிருந்த கோலி பிறகு ஸ்ட்ரைக் ரேட்டை மெயிண்டெயின் செய்வதில் கோட்டைவிட்டார். கொஞ்ச நேரத்திலேயே 50 பந்துகளில் 70 ரன்களை அடித்திருந்த படிக்கல் ஷர்துல் தாகூரின் பந்தில் தோனியிடம் கேட்ச் ஆகியிருந்தார். ஆரம்ப அதிரடியை இருவரும் கடைசி வரை காட்டவில்லை என்றாலும் நன்றாகவே ஆடிவிட்டு சென்றிருந்தனர். இதன்பிறகு வந்த டீவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், டிம் டேவிட் போன்ற அதிரடி சூரர்களே இந்த தொடக்கத்தை சிறப்பாக முடிக்க தவறிவிட்டனர். ஆளுக்கொரு சிக்சரை அடித்துவிட்டு அவுட் ஆகிவிட்டனர். கடைசி 5 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே வந்தது. இதனால் பெங்களூர் அணியால் 156 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
ஷார்ஜா மாதிரியான சிறிய மைதானத்தில் இதெல்லாம் மிகக்குறைவான ஸ்கோர். அதனால் முதல் பாதி போட்டி முடிந்தவுடனேயே ஏறக்குறைய சென்னையின் வெற்றி உறுதியாகிவிட்டது. பெங்களூர் அணி அசாத்தியமாக எதாவது செய்தால்தான் உண்டு என்கிற நிலை உண்டானது. ஆனால், பெங்களூர் அப்படி எதுவும் செய்யவில்லை.
சென்னை அணியின் சார்பில் டூ ப்ளெஸ்சிஸும் ருத்ராஜ் கெய்க்வாட்டும் ஓப்பனர்களாக களமிறங்கினர். ருத்ராஜ் கடந்த போட்டியை போன்றே சிறப்பாக ஆடினார். டூ ப்ளெஸ்சிஸ் கடந்த போட்டியில் தவறவிட்டதை இந்த போட்டியில் செய்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்களை சேர்த்திருந்தனர். சஹால் மற்றும் மேக்ஸ்வெல் ஓவரில் இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆனதும் சென்னை அணிக்கு ஒரு அழுத்தம் உண்டாவது போல தோன்றியது.
ஆனால், அம்பத்தி ராயுடு மற்றும் மொயீன் அலி இருவரும் தற்காப்பாக ஆடாமல் க்ரீஸுக்குள் வந்தவுடனேயே அட்டாக் செய்து அழுத்தத்தை குறைத்தனர். இவர்களுக்கு பிறகு வந்த தோனியும் ரெய்னாவும் ஆட்டத்தை சிறப்பாக முடித்தனர்.
சென்னை அணி பெறும் 7 வது வெற்றி இது. இதன்மூலம் சென்னை அணி ஏறக்குறைய ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை முதல் அணியாக உறுதி செய்துவிட்டது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?