Sports
சுப்மன் கில் - வெங்கடேஷ் அதிரடியில் வீழ்ந்த மும்பை : தொடர்ச்சியாக 2வது வெற்றியை பெற்ற கொல்கத்தா!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி மிக எளிதாக 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.
கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கனே டாஸை வென்றிருந்தார். பெங்களூர்வுக்கு எதிராக கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசியிருப்பதால் இந்த போட்டியிலும் முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்தார்.
மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணியின் சார்பில் கேப்டன் ரோஹித் சர்மாவும் டீகாக்கும் ஓப்பனர்களாக களமிறங்கியிருந்தனர். இயான் மோர்கன் முதல் ஓவரையே பகுதி நேர சுழற்பந்துவீச்சாளரான நிதிஷ் ராணாவிடம் கொடுத்தார். இது சர்ப்ரைஸான முடிவாக இருந்தது. முதல் 4 ஓவர்களையுமே ஸ்பின்னர்கள்தான் வீசியிருந்தனர். ஆனால், கொல்கத்தா எதிர்பார்த்த முதல் விக்கெட் கிடைக்கவில்லை. ரோஹித் அந்த 4 ஓவர்களில் பெரும்பாலான பந்துகளை எதிர்கொண்டு சிறப்பாக சமாளித்திருந்தார். இதன்பிறகே ஃபெர்குசன், பிரஷீத் கிருஷ்ணா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை மோர்கன் அறிமுகப்படுத்தினார்.
முதல் 4 ஓவரில் பார்த்து ஆடி செட்டில் ஆகியிருந்த ரோஹித் & டீகாக் கூட்டணி இதன்பிறகு அதிரடியில் இறங்கியது. கொல்கத்தாவுக்கு எதிராக மட்டும் 1000 ரன்களை ரோஹித் சர்மா கடந்திருந்தார். ஒரு அணிக்கு எதிராக மட்டும் 1000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் பெருமையை பெற்றார்.
முதல் விக்கெட்டிற்கு ரோஹித் - டீகாக் கூட்டணி 78 ரன்களை சேர்த்திருந்தது. இந்நிலையில் ரோஹித் 33 ரன்களில் நரைனின் பந்துவீச்சில் பெரிய ஷாட் ஆட முயன்று அவுட் ஆனார்.
ரோஹித் க்ரீஸில் இருக்கும் வரை ஆட்டம் மும்பைக்கு சாதகமாக இருப்பது போன்றே தோன்றியது. ஆனால், அவர் அவுட் ஆனதற்கு பிறகான 5 ஓவர்களில் மும்பை அணி வெறும் 26 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அரைசதம் அடித்து செட் ஆகியிருந்த டீகாக்கும் சூரியகுமார் யாதவும் அவுட் ஆகியிருந்தனர். கடைசி 5 ஓவர்களில் பொல்லார்ட் ஒரு சில அதிரடி ஷாட்களை ஆட 49 ரன்கள் வந்திருந்தது. 180 ரன்களுக்கு மேல் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணி 155 ரன்களை மட்டுமே எடுத்தது.
156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கது. கொல்கத்தா முதல் ஓவரிலிருந்தே அதிரடிதான். ட்ரெண்ட் போல்ட் வீசியிருந்த முதல் ஓவரின் இரண்டாவது பந்தையே சுப்மன் கில் சிக்சராக்கியிருந்தார். இன்னொரு ஓப்பனரான வெங்கடேஷ் ஐயர் சரவெடியாக வெடித்தார். போல்ட், மில்னே, பும்ரா என மூன்று பௌலர்களிடமும் அவர் சந்தித்த முதல் பந்தையை பவுண்டரி மற்றும் சிக்சராக்கியிருந்தார். இந்த கூட்டணியின் அதிரடியை பார்க்கும்போதே மும்பை அணியின் தோல்வி உறுதி என்பது புரிந்துவிட்டது. இடையில் சுப்மன் கில் அவுட்டாகி இருந்தாலும் வெங்கடேஷ் ஐயர் அரைசதம் கடந்து அசத்தியிருந்தார். எல்லா சம்பவங்களையும் செய்து முடித்த பிறகு இவரின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தியிருந்தார். ஆனால், அதற்குள் மேட்ச் ஏறக்குறைய முடிந்தேவிட்டது. 15.1 ஓவரில் கொல்கத்தா அணி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த இரண்டாம்பாதியில் கொல்கத்தா அணி தொடர்ச்சியாக பெற்றிருக்கும் இரண்டாவது வெற்றி இது. இதன்மூலம் ப்ளே ஆஃப் வாய்ப்புக்கான போட்டியில் கொல்கத்தாவும் வலுவாக இணைந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!