Sports
IPL 2021 : போராடாமல் வீழ்ந்த சன்ரைசர்ஸ்; முதலிடத்திற்கு முன்னேறிய டெல்லி கேப்பிட்டல்ஸ்!
வலுவான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது. எதிர்பார்த்ததை போலவே டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றுள்ளது. சன்ரைசர்ஸ் போராடாமலேயே இலகுவாக விட்டுக்கொடுத்தது வருத்தமளிக்கக்கூடிய விஷயமாக இருந்தது.
சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனான வில்லியம்சனே டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த முடிவு எவ்வளவு தவறானது என்பது போட்டி தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே தெரிய வந்துவிட்டது. டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் நோர்கியா வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே டேவிட் வார்னர் டக் அவுட் ஆனார். அணியில் அடித்து ஆடக்கூடிய அதிரடி பேட்ஸ்மேனாக இருந்த ஒரே வீரர் மூன்றாவது பந்திலேயே அவுட் ஆனது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது.
நம்பர் 3 இல் கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். இன்னொரு ஓப்பனராக களத்தில் நின்ற விருத்திமான் சஹா ரபாடா வீசிய 5 வது ஓவரின் முதல் பந்தை சிக்சராக அடித்திருந்தார். அடுத்த நான்கு பந்துகளும் டாட் ஆக 6 வதாக வீசப்பட்ட ஷார்ட் பாலில் அரைகுறையாக ஒரு ஷாட்டை ஆடி 18 ரன்னில் கேட்ச் ஆனார்.
அவ்வளவுதான். இதன்பிறகும் சன்ரைசர்ஸ் அணிக்காக எந்த வீரரும் நின்று ஆடவில்லை. பெரிய நம்பிக்கையாக இருந்த கேப்டன் வில்லியம்சனும் இரண்டு முறை கேட்ச்சிலிருந்து தப்பிய பிறகும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமல் மூன்றாவதாகவும் தானே ஒரு கேட்ச்சை கொடுத்து அக்சர் படேல் பந்தில் 26 ரன்களில் வெளியேறினார். பெரும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அப்துல் சமத்தும் ரஷீத் கானும் ஆடினர்.
அப்துல் சமத் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வீரர். பெரிய சிக்சர்களை அடிக்கக்கூடிய ஹார்ட் ஹிட்டிங் பேட்ஸ்மேன். ஆனால், இங்கே விக்கெட்டுகள் வரிசையாக வீழ்ந்து கொண்டே இருந்ததால் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆட முடியாமல் தவித்தார். 21 பந்துகளில் 28 ரன்களை எடுத்து கணிசமான பங்களிப்பை கொடுத்தார். ரஷீத் கான் கடைசி ரபாடா ஓவரில் சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து அசத்தினார். தன் பங்குக்கு அவரும் 22 ரன்களை சேர்த்து கொடுத்தார். இவர்களின் ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் 134 ரன்களை எடுத்தது.
வலுவான டெல்லி அணிக்கு இந்த டார்கெட்டெல்லாம் ஒன்றுமே இல்லை. வலைப்பயிற்சியில் ஈடுபடுவதை போல சிரமமே இன்றி நின்று நிதானமாக ஸ்கோரை வெற்றிகரமாக சேஸ் செய்தனர். ஓப்பனரான பிரித்திவிஷா எல்லா பந்துகளையும் அடித்து வெளுக்க ஆசைப்பட்டு 11 ரன்னில் கலீல் அஹமது பந்தில் வெளியேறினார்.
இதன்பிறகு, ஜோடி சேர்ந்த தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அவசரமே காட்டாமல் பொறுமையாக நின்று நிதானமாக ஆடினர். ஏதுவான பந்துகளை மட்டுமே பவுண்டரிக்கு தட்டிவிட்டனர். அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தவான் 42 ரன்னில் ரஷீத்கான் பந்துவீச்சில் பவுண்டரி லைனில் அப்துல் சமத்திடம் கேட்ச் ஆனார்.
இதன்பிறகு, உள்ளே வந்த பண்ட் வேகமாக 35 ரன்களை சேர்த்து சீக்கிரமே வெற்றிக்கு அழைத்து சென்றார். 17.5 வது ஓவரில் ஹோல்டரின் பந்தில் வின்னிங் ஷாட்டாக சிக்சர் அடித்து ஸ்ரேயாஸ் ஐயர் மேட்ச்சை முடித்தார். அவர் 47 ரன்களில் நாட் அவுட்டாக இருந்தார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி தனது கடைசி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!