Sports
IPL 2021 - சரிவிலிருந்து மீட்ட ருதுராஜ்: சரணடைந்த மும்பை இந்தியன்ஸ்; முதல் வெற்றியை பெற்றது CSK!
மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுவிடக்கூடாதென முன்னெச்சரிக்கையாக ஓய்வளிக்கப்பட்டிருந்தது. அதனால், நேற்றைய போட்டியில் பொல்லார்டே மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
டாஸை சென்னை அணியின் கேப்டனான தோனியே வென்றிருந்தார். பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தார். ஆனால், சென்னை அணி அவ்வளவு சிறப்பாக பேட்டிங்கை தொடங்கவில்லலை.
பவர்ப்ளேயான முதல் 6 ஓவரில் மட்டுமே 4 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். மேலும், அம்பத்தி ராயுடு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிட்டயர் ஹர்ட் ஆகி வெளியேறினார். போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே ஃபாப் டூ ப்ளெஸ்சிஸ் டக் அவுட் ஆக, ஆடம் மில்னே வீசிய அடுத்த ஓவரில் மொயீன் அலி டக் அவுட் ஆகியிருந்தார். அனுபவ வீரர்களான தோனி மற்றும் ரெய்னாவால் கூட போல்ட் மற்றும் மில்னேவின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை.
ரெய்னா 4 ரன்னிலும் தோனி 3 ரன்னிலும் பவர்ப்ளேக்குள்ளாகவே அவுட் ஆகியிருந்தனர். பவர்ப்ளே முடிவில் சென்னை அணி 24-4 என்ற நிலையில் இருந்தது. அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது. மும்பை அணி எளிதாக இந்த போட்டியை வென்றுவிடும் என முடிவுக்கு வந்தனர். ஆனால், இதன் பிறகுதான் போட்டி மெதுமெதுவாக சென்னை பக்கம் மாற தொடங்கியது.
ஓப்பனராக களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் பொறுப்பாக நின்று ஆடினார். அவருக்கு உதவியாக நின்று ஜடேஜாவும் கணிசமான பங்களிப்பை கொடுத்தார். முதலில் ருத்ராஜ் பெரிதாக அதிரடி காட்டவில்லை. செட்டில் ஆவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டார். 12 வது ஓவரிலிருந்தே அதிரடியை காட்ட தொடங்கினார். க்ரூணால் பாண்ட்யா வீசிய அந்த ஓவரில் பௌலரின் தலைக்கு மேல் ஒரு சிக்சரை பறக்கவிட்டவர், ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி இன்னொரு பவுண்டரியையும் அடித்தார்.
அந்த ஓவருக்கு பிறகு எல்லா ஓவரிலும் பவுண்டரி அடிக்க ஆரம்பித்தார். ஜடேஜாவும் அவருக்கு உறுதுணையாக விக்கெட்டை விடாமல் நின்று ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொடுத்தார். இந்த கூட்டணி 81 ரன்களக் சேர்த்து சென்னை அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டது. கடைசியில் ருத்ராஜும் ப்ராவோவும் அதிரடி காட்ட 5 ஓவர்களில் மட்டும் 69 ரன்கள் வந்திருந்தது. இதன் மூலம், சென்னை அணி 156 ரன்களை எடுத்தது. ருத்ராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 88 ரன்களை எடுத்திருந்தார்.
157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ஓப்பனர் மற்றும் கேப்டனான ரோஹித் சர்மா இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. தொடக்கத்திலிருந்தே சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்தது. ஓப்பனர்களான டீகாக் மற்றும் அன்மோல்ப்ரீத் சிங்கை தீபக் சஹார் வெளியேற்றி தனது கடமையை சிறப்பாக செய்து கொடுத்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூரிய குமார் யாதவும் 3 ரன்களிலேயே பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
இடக்கை பேட்ஸ்மேனான சவுரப் திவாரி மட்டும் வழக்கம் போல ஆறுதல் இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருந்தார். சென்னை அணிக்கு எதிராக எப்போதும் வெளுத்தெடுக்கும் பொல்லார்டும் நேற்று 15 ரன்களிலேயே ஹேசல்வுட் வீசிய ஒரு ஆஃப் கட்டரில் lbw ஆகி வெளியேறினார். விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்ந்தாலும் சவுரப் திவாரி-மில்னே கூட்டணி கடைசியில் சில பவுண்டரிக்களை அடித்து சென்னை அணியை பதற்றப்படுத்தியது.
ஆனாலும், அவர்களாலும் பெரிதாக மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆட முடியவில்லை. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணியால் 136-8 என்ற ஸ்கோரையே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 88 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறியிருக்கிறது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !