Sports

இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே? - கோலிக்கு கட்டம் கட்டுகிறதா பிசிசிஐ?

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் நவம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. அதன்பிறகு, பயிற்சியாளராக தொடர போவதில்லை என ரவிசாஸ்திரியே கூறியிருந்தார். அவர் தொடர நினைத்தாலும் பிசிசிஐயின் சில விதிமுறைகள் அவருக்கு சாதகமாக இல்லை என்பதால் புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை உருவாகியிருந்தது.

இந்நிலையில் பிசிசிஐ புதிய பயிற்சியாளருக்கான தேடுதல் வேட்டையை தொடங்கியிருக்கிறது. இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயவர்த்தனேவை முதலில் அணுகியிருக்கிறது. ஆனால், அவர் ஐ.பி.எல் மும்பை அணிக்கு பயிற்சியாளராக இருப்பதாலும், இலங்கை அணிக்கு பயிற்சியாளராகும் வாய்ப்பு இருப்பதாலும் ஜெயவர்த்தனே பிசிசிஐ யின் அழைப்பை ஏற்கவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான அனில் கும்ப்ளே மற்றும் வி.வி.எஸ்.லெக்ஷ்மண் இருவரையும் பிசிசிஐ அணுகியுள்ளது. இதில், அனில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக அதிக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரவிசாஸ்திரிக்கு முன்பாக இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவே இருந்தார்.

அப்போதே கோலிக்கும் அவருக்கும் செட் ஆகவில்லை. அனில் கும்ப்ளேவின் அணுகுமுறைகள் தனக்கு பிடிக்கவில்லை என கோலி வெளிப்படையாகவே பிசிசிஐயிடம் புகார் செய்திருந்தார்.

இதைத் தொடர்ந்து 2016 ஜுனில் பதவியேற்றிருந்த கும்ப்ளே 2017 ஜுனில் பயிற்சியாளர் பதவிலியிருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த விலகல் அறிக்கையிலும் கோலியின் புகார் பற்றி குறிப்பிட்டிருப்பார். மேலும், தங்கள் இருவருக்கும் இடையிலான உறவு குறித்து 'untenable' என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருப்பார்.

அடிப்படையான புரிதலே இல்லாத நிலை என இந்த வார்த்தைக்கு அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். இப்போது மீண்டும் அனில் கும்ப்ளேவை பயிற்சியாளராக வர வேண்டும் என பிசிசிஐ அழைக்கிறது.

ஏற்கனவே டி20 உலகக்கோப்பைக்கு ஆலோசகராக தோனியை பிசிசிஐ நியமித்திருந்தது. (டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு தோனியை விட வெற்றிகரமான கேப்டனாக இருந்தது கோலியே. மேலும், இது கோலிக்கு கேப்டனாக முதல் டி20 உலகக்கோப்பைதான்) பிசிசிஐயின் இந்த மூவ்கள் என்ன செய்தியை கடத்துகிறது?

அடிலெய்டு டெஸ்ட்டில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகே கோலி அதுவரை அனுபவித்து வந்த ஏகோபித்த அதிகாரமும் ஆதிக்கமும் குறைய தொடங்கிவிட்டதாக பல ஆங்கில நாளிதழ்களும் கட்டுரை வெளியிட்டிருந்தது. கோலி டி20 போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியிருந்தாலும், ஒட்டுமொத்தமாக டி20 மற்றும் ஓடிஐ இரண்டிலுமே கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க பிசிசிஐ விரும்புவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

அதனாலயே கோலியின் ஆதிக்கத்தை மேலும் குறைக்கும் வகையில் அவர் விரும்பாத ஒருவரை பயிற்சியாளராக அழைத்து வருகிறதோ என்கிற சந்தேகமும் பலருக்கும் எழுந்துள்ளது.

Also Read: கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலி.. காரணம் என்ன?