Sports

ENGvIND : பரபரப்பான இறுதிக்கட்டத்தில் ஓவல் டெஸ்ட்.. வெற்றிப்பெறுமா இந்தியா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. நான்கு நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. இப்போது வரை இரண்டு அணிகளும் சமநிலையிலேயே இருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. பௌலரான ஷர்துல் தாகூர் அதிரடியாக அரைசதம் அடித்திருந்தார். பதிலுக்கு இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் சார்பில் ஓலி போப்பும் க்றிஸ் வோக்ஸும் சிறப்பாக ஆடி அரைசதத்தை கடந்திருந்தனர். இந்திய அணியை விட இங்கிலாந்து 99 ரன்கள் அதிகமாக முன்னிலை எடுத்திருந்தது.

இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸை விட சிறப்பாக பேட்டிங் ஆடியது. குறிப்பாக, ஓப்பனரான ரோஹித் சர்மா அட்டகாசமாக ஆடி சதமடித்திருந்தார். எட்டு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிக்கொண்டிருக்கும் ரோஹித் சர்மா, இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மைதானங்களில் சதமே அடித்ததில்லை.

வெளிநாட்டு மைதானங்களில் அவருடைய ஆவரேஜும் 30 க்கு கீழ்தான் இருந்தது. இந்த குறைகளையெல்லாம் போக்கும் வகையில் ரோஹித் சர்மாவின் சதம் அமைந்திருந்தது. ரொம்பவே நிதானமாக பொறுமையாக ஆடி சதத்தை அடித்திருந்தார். ரோஹித்துடன் சேர்ந்து புஜாராவும் மிகச்சிறப்பாக ஆடி அரைசதம் அடித்திருந்தார்.

வழக்கமாக முன்னங்கால்களை பிரதானமாக வைத்து ஆடும் புஜாரா இந்த முறை பின்னங்காலை பிரதானமாக வைத்து அற்புதமாக ஷாட் ஆடியிருந்தார். ரோஹித் 127 ரன்களிலும் புஜாரா 61 ரன்களிலும் அவுட் ஆகியிருந்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலியும் 44 ரன்களில் அவுட் ஆனார்.

இதன்பிறகு, இந்தியாவை காப்பாற்றியது ஷர்துல் தாகூரே. முதல் இன்னிங்ஸை போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிரடியாக ஒரு அரைசதத்தை அடித்துக் கொடுத்தார். இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்திருந்தார். 72 பந்துகளில் 60 ரன்களை எடுத்து இந்திய அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தியிருந்தார். இவருக்கு பிறகு கடைசியில் உமேஷ் யாதவ் கொஞ்சம் அதிரடி காட்ட இந்தியா 466 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்துக்கு டார்கெட் 368. பெரிய டார்கெட்டாக இருந்தாலும் பிட்ச் பெரிதாக பௌலிங்கிற்கு ஒத்துழைக்காததால் நம்பிக்கையுடனேயே களமிறங்கியது. எதிர்பார்த்ததை போலவே இந்தியாவின் பௌலிங்கிற்கு பிட்ச் பெரிதாக கைகொடுக்காததால் இங்கிலாந்து ஓப்பனர்கள் பர்ன்ஸும் ஹசீப் ஹமீதும் சிறப்பாகவே ஆடினர். இந்த கூட்டணி 32 ஓவர்கள் ஆடிய பிறகும் இந்திய பௌலர்களால் இந்த கூட்டணியை முறியடிக்க முடியவில்லை. 77 ரன்களுக்கு விக்கெட்டே இழக்காமல் நேற்றைய நாளை முடித்திருக்கிறது இங்கிலாந்து.

கடைசி நாளில் இங்கிலாந்து வெற்றிபெற 291 ரன்கள் தேவை. 10 விக்கெட்டுகளையும் வைத்திருக்கிறார்கள். நேற்று இந்தியா பேட்டிங்கை முடித்த போது போட்டி இந்தியாவிற்கு சாதகமாகவே இருப்பது போல தோன்றியது. ஆனால், இங்கிலாந்தின் சிறப்பான தொடக்கத்திற்கு பிறகு போட்டி சமநிலைக்கு வந்துள்ளது. இங்கிருந்து யார் வேண்டுமானாலும் வெல்லலாம் என்ற சூழலே இருக்கிறது. இந்திய பௌலர்கள் இன்னும் கொஞ்சம் உத்வேகத்தோடு வீசும்பட்சத்தில் இந்தியாவும் வெல்வதற்கு அத்தனை வாய்ப்பும் இருக்கிறது.

Also Read: வரலாற்று சாதனையோடு பாராலிம்பிக்கை முடித்திருக்கும் இந்தியா!