Sports

“அபினவ் பிந்த்ராவால் துப்பாக்கி சுட வந்தேன்” : அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து சாதித்த ‘தங்க மங்கை’ அவனி!

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் இதுவரை 13 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இன்று நடந்த மகளிருக்கான 50 மீட்டர் ரைஃபிள் SH1 பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேஹரா பங்கேற்றார். 19 வயதான அவனி லேஹரா இறுதிச் சுற்றில் 445.9 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

முன்னதாக, 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் 19 வயதான அவனி லேகாரா பெற்றார்.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த அவனி லேஹராவுக்குக் கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த கார் விபத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டது. அதன்பின் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவின் வாழ்கை வரலாற்றைப் படித்தபின் அவனி, துப்பாக்கி சுடும் பயிற்சியில் 2015-ஆம் ஆண்டு சேர்ந்தார்.

2017 முதல் இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் பங்கெடுத்துவரும் அவனி, ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வருகிறார்.

கொரோனா நெருக்கடி அவரது பயிற்சியை மட்டுமல்லாது தொடர்ச்சியாக பிசியோதெரபி சிகிச்சை பெறுவதிலும் பாதிப்பை உண்டாக்கியது. அத்தனை தடைகளையும் மீறி அவர் 2 பதக்கங்களை வென்றுள்ளார்.

நடப்பு பாராலிம்பிக்ஸ் தொடரில் உலக சாதனையான 249.6 புள்ளிகளைப் பெற்று லேஹரா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பாராலிம்பிக்ஸ் ஒலிம்பிக் போட்டியில் இரு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையைப் பெற்ற அவனி லேஹராவுக்குப் பலதரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர்ர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பாராலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை அவனி லேஹரா பெற்றுள்ளதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்திய விபத்தால் நிலைகுலையாமல், நாம் அனைவரும் பின்பற்றத்தக்க எடுத்துக்காட்டாய் அவர் ஓங்கி உயர்ந்துள்ளார். அவரது மகத்தான ஊக்கத்தையும் சாதனையையும் நான் போற்றுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ஐபோனால் கேக் வெட்டிய பா.ஜ.க MLA-வின் மகன் : “பழச மறந்துட்டீங்களா சார்?” எனக் கேட்கும் தொகுதி மக்கள்!