Sports
ஜடேஜா Vs அஷ்வின் : ஒரே ஒரு இடத்திற்கு யாரை டிக் அடிக்கப்போகிறார் கோலி? #IndvsEng
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. லார்ட்ஸில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியை இந்தியா வென்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் அடுத்த டெஸ்ட்டுக்கான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.
கோலி இதே ப்ளேயிங் லெவனோடு அடுத்த போட்டியில் களமிறங்குவாரா இல்லை அணியில் ஏதேனும் மாற்றங்கள் செய்வாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. குறிப்பாக, தமிழக வீரரான அஷ்வின் ப்ளேயிங் லெவனுக்குள் வருவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அஷ்வின் ப்ளேயிங் லெவனில் இல்லாததே இந்த இங்கிலாந்து தொடரில் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. ஏனெனில், அஷ்வின் சமீபமாக மிகச்சிறப்பாக பெர்ஃபார்ம் செய்து வந்திருக்கிறார்.
கடந்த ஆஸ்திரேலியா சீரிஸ், இங்கிலாந்து சீரிஸ் போன்றவற்றில் சிறப்பாக பந்து வீசியிருக்கிறார். மேலும், ஜீனில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலுமே முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார். இந்த இங்கிலாந்து தொடருக்காக அதிகமாக பிரயத்தனப்பட்ட வீரரும் அவரே. இந்த தொடருக்காக கவுண்டி போட்டியிலெல்லாம் ஆடியிருந்தார். அதிலுமே மிகச்சிறப்பாக வீசி 6 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸில் வீழ்த்தியிருந்தார்.
பந்துவீச்சைத் தாண்டி அஷ்வினின் பேட்டிங்கும் இந்திய அணிக்கு கூடுதல் பலமாகவே இருந்திருக்கிறது. ஆஸ்திரேலியா சீரிஸில் ஹனுமா விஹாரியுடன் சேர்ந்து அவர் ஆடிய இன்னிங்ஸை காலத்துக்கும் மறக்க முடியாது. அதன்பிறகு, இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் சதமடித்திருந்தார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் சில பவுண்டரிகளை அடித்து தன்னால் இயன்ற பங்களிப்பை கொடுத்திருந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது கூட ஸ்பின்னரான அஷ்வின் எதற்கு என கேள்வி எழுந்த போது பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் கோலியும் அஷ்வினுக்கு ஆதரவாகவே பேசியிருந்தனர்.
இப்படி எல்லாவிதத்திலும் அஷ்வினுக்கு சாதகமான அம்சங்கள் இருந்ததால் எப்படியும் உறுதியாக அணியில் இருப்பார் என்றே கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதல் இரண்டு போட்டிகளிலுமே அவர் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டிருந்தார். இது அதிர்ச்சிகரமான முடிவாக இருந்தது. நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆடுவதால் ஒரே ஒரு ஸ்பின்னருக்கு மட்டுமே இடம் கொடுக்க வேண்டிய சூழல் உருவானது. அந்த ஒரு இடத்தை ஜடேஜாவுக்கு கொடுத்துவிட்டனர். ஆனால், கடந்த இரண்டு போட்டிகளிலுமே ஜடேஜாவை முழுமையாக பயன்படுத்தவில்லை. கொடுக்கப்பட்ட கொஞ்ச ஓவர்களிலுமே அவர் அவ்வளவு சிறப்பாக வீசியிருக்கவில்லை.
இந்நிலையில்தான் அடுத்தடுத்த டெஸ்ட்களுக்கு ஜடேஜாவுக்கு பதில் அஷ்வின் தேர்வு செய்யப்படுவாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஜடேஜா பந்துவீச்சில் சொதப்பினாலும் பேட்டிங்கில் கொஞ்சம் நன்றாகவே ஆடுகிறார். ஆனால், அந்த பேட்டிங்கை அஷ்வினாலுமே ஆட முடியும். மேலும், ஜடேஜாவுக்கு பதில் அஷ்வின் எடுக்கப்படும் பட்சத்தில் அவரால் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் பந்தும் வீச முடியும். இங்கிலாந்து அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஆட டேவிட் மலான் போன்ற வீரர்களை அழைத்திருக்கிறது. அவர் ஆடும்பட்சத்தில் இங்கிலாந்து அணியில் நான்கைந்து இடக்கை பேட்ஸ்மேன்கள் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஜடேஜா மாதிரியான இடக்கை பந்துவீச்சாளரின் பந்து அவ்வளவாக எடுபடாது. அஷ்வின் மாதிரியான ஆஃப் ஸ்பின்னரை வைத்தே இடக்கை பேட்ஸ்மேன்களை சமாளிக்க முடியும்.
நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுமே சிறப்பாக வீசிக்கொண்டிருப்பதால் அவர்களில் ஒருவரை நீக்க வாய்ப்பே இல்லை. அப்படியிருக்கும்பட்சத்தில் ஜடேஜா, அஷ்வின் இருவரையுமே அணியில் வைத்து ஆடுவதும் சாத்தியமில்லை. இதையெல்லாம் மனதில் வைத்துப் பார்க்கையில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளுக்கு ஜடேஜாவுக்கு பதில் அஷ்வின் தேர்ந்தெடுக்கப்படவே அதிக வாய்ப்பிருக்கிறது.
-உ.ஸ்ரீ
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!