Sports

“பதக்கத்தை விட குழந்தையின் உயிரே முக்கியம்”: ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கனை நெகிழ்ச்சி!

போலந்தைச் சேர்ந்த மரியா ஆன்ந்த்ரேசெக் டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில் போலந்து நாட்டைச் சேர்ந்த 8 மாதக் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து குழந்தையின் சிகிச்சைக்கு 3,85,088 டாலர் அதாவது இந்திய மதிப்பில், 3 கோடிக்கு மேல் தேவைப்பட்டது.

இதனையடுத்து சிகிச்சைக்கு உதவுமாறு அந்தக் குழந்தையின் குடும்பம் பல்வேறு வகையில் நிதி திரட்டிக்கொண்டிருந்தது. ஆனால், சிகிச்சைக்குத் தேவையான நிதியில் பாதியளவுகூட அவர்களால் திரட்ட முடியவில்லை. இதை அறிந்த மரியா, தன்னுடைய வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விடுவதன் மூலம் நிதியை திரட்ட முடியும் என முடிவு செய்து, அந்தக் குழந்தையின் சிகிச்சைக்காக தனது வெள்ளிப்பதக்கதை ஏலம் விட்டார். அதன்பிறகு போதுமான நிதி கிடைத்துவிட்டது.

இந்நிகையில் இதுகுறித்து மரியா கூறுகையில், “பதக்கத்தின் உண்மையான மதிப்பு என் இதயத்தில் இருக்கிறது. பதக்கம் என்பது ஒரு பொருள் மட்டுமே! பதக்கம் ஓரிடத்திலிருந்து தூசி படிவதைவிட, ஒரு உயிரைக் காப்பாற்றுவது மிகவும் உன்னதமான விஷயம் என்பதால் ஏலத்தில்விட முடிவெடுத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மரியா, பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டார். அதன்பிறகு 209 ஆம் ஆண்டு எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டு, டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு, பதக்கத்தையும் வென்றார்.

Also Read: தேர்தல் வாக்குறுதி என்னாச்சு.. கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா?: மோடி அரசை வெளுத்து வாங்கிய ‘தினகரன்’ நாளேடு!