Sports
ஜோ ரூட்டிடம் கோட்டை விட்ட இந்தியா - லீட் எடுத்த இங்கிலாந்து : மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்திருக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆகியிருக்கிறது.
முதல் இரண்டு நாள் ஆட்டமும் இந்தியாவின் கையில் இருந்தது. ஆனால், மூன்றாவது நாள் ஆட்டம் மொத்தமாக இங்கிலாந்தின் ஆதிக்கமே. குறிப்பாக, அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் ஒற்றை ஆளாக நின்று இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மொத்தமாக மீட்டிருக்கிறார்.
ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்ட்டோ கூட்டணியே ஆட்டத்தை தொடங்கியது. இரண்டாம் நாளிலேயே இந்த கூட்டணி செட்டில் ஆகிவிட்டதால் நேற்று மிகச்சிறப்பாக ஆட தொடங்கியது. பேர்ஸ்ட்டோ ஒயிட் பால் கிரிக்கெட்டில் வல்லவர். டெஸ்ட்டில் நீண்ட நாட்களாக நல்ல இன்னிங்ஸ் ஆட முடியாமல் தவித்து வந்தார். அந்த தவிப்பை நேற்று போக்கிக் கொண்டார்.
இஷாந்த், சிராஜ், பும்ரா, ஷமி என இந்தியாவின் வேகப்பந்து வீச்சு படையை அற்புதமாக எதிர்கொண்டார். கோலி வித்தியாசமான ஃபீல்ட் செட்டப்களை வைத்து ஸ்டம்ப் லைனில் தொடர்ந்து டைட்டாக பௌலர்களை வீச வைத்து விக்கெட் எடுக்க வேண்டும் என விரும்பினார். பேர்ஸ்ட்டோ இந்த திட்டத்தை சிறப்பாக எதிர்கொண்டார். பேட்டை வீசி ஆட முடியாவிட்டாலும் 'V' என சொல்லப்படும் மிட் ஆன் மிட் ஆஃப் திசைகளில் தொடர்ந்து பவுண்டரிக்களை அடித்தார். லெக் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்துகளை ஸ்கொயரில் அட்டகாசமாக ஷாட் ஆடியிருந்தார்.
இன்னொரு பக்கம் ஜோ ரூட் ஆஃப் சைடில் தன்னுடைய க்ளாஸான ஷாட்கள் மூலம் நேர்த்தியாக ஆடிக்கொண்டிருந்தார். அரைசதத்தை கடந்து சதத்தை நோக்கியும் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தார்.
பேர்ஸ்ட்டோ அரைசதத்தை கடந்து 57 ரன்களில் இருந்த போது, சிராஜ் ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஷார்ட் பாலை வீச அதை ஷாட் ஆட முயன்று எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் நின்ற கோலியிடம் கேட்ச் ஆனார் பேர்ஸ்ட்டோ. இது நன்கு திட்டமிட்டு எடுக்கப்பட்ட விக்கெட். சிராஜ் ரவுண்ட் தி விக்கெட்டி வந்து ஷார்ட் பாலாக வீச அதற்கேற்றவாறு லெக் ஸ்லிப்பெல்லாம் வைக்கப்பட்டிருந்தது.
பேர்ஸ்ட்டோ அவுட் ஆன பிறகும் கேப்டன் ஜோ ரூட்டின் ஆதிக்கம் குறையவே இல்லை. ஒற்றை ஆளாக நின்று அணியை முன்நகர்த்தி சென்றார். சதத்தையும் கடந்தார். ரூட்டுக்கு உறுதுணையாக பட்லரும் மொயீன் அலியும் கொஞ்ச நேரம் நின்றுவிட்டு ஆட்டமிழந்தனர். இருவரும் முறையே 23, 27 ரன்களை எடுத்திருந்தனர்.
இவர்கள் அவுட் ஆனதும் மொத்த சுமையும் ரூட்டின் மேல் விழுந்தது. ஆனாலும் அவர் அசரவே இல்லை. தொடர்ந்து நின்று நிதானமாக தன்னுடைய க்ளாஸான ஷாட்களை ஆடிக்கொண்டிருந்தார்.
150 ரன்களையும் கடந்து தொடர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். ஜோ ரூட்டை வீழ்த்த முடியாமல் இந்திய பௌலர்கள் திணறினர். கொஞ்சம் வேரியேஷனுக்கு ஒரு முழுநேர ஸ்பின்னர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நல்ல ஃபார்மில் இருந்த அஷ்வினை அணியில் எடுக்காமல் இருந்தது மிகப்பெரிய தவறாக தெரிந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை எடுத்திருந்தது. ஜோ ரூட்டின் க்ளாஸான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி லீட் எடுத்தது. 391 ரன்களை இங்கிலாந்து எட்டியிருந்த நிலையில் நேற்றைய நாளின் கடைசி பந்தில் கடைசி விக்கெட்டாக ஆண்டர்சனை ஷமி வீழ்த்தினார்.
ஜோ ரூட் 180 ரன்களில் நாட் அவுட்டாக இருந்தது. இங்கிலாந்து அணி 27 ரன்கள் லீட் எடுத்திருக்கிறது. இந்திய அணி தங்களுடைய கையில் இருந்த போட்டியை கோட்டை விட்டுள்ளது. ஜோ ரூட் ஒற்றை ஆளாக நின்று இந்தியாவின் ஆதிக்கத்தை உடைத்திருக்கிறார். இன்னும் இரண்டு நாள் ஆட்டம் எஞ்சியிருக்கிறது. போட்டி சரிசமமாக செல்வதால் ஒரு திரில் ஆன ஆட்டம் காத்திருப்பதாகவே தெரிகிறது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!