Sports
ஆதிக்கம் செலுத்தும் இந்தியா.. அடங்கிப்போகும் இங்கிலாந்து.. முதல் நாள் ஆட்டம் எப்படியிருந்தது? #IndvsEng
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிந்திருக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. இந்த மைதானத்தில் சிறப்பாக இங்கிலாந்து அணி கௌரவமாக கருதும். அதனால் எதிரணியை அவ்வளவு எளிதில் பெர்ஃபார்ம் செய்ய விட்டுவிடமாட்டார்கள். முட்டி மோதி போராடுவார்கள். ஆனால், நேற்றைய கதையே வேறாக இருந்தது. டாஸிலேயே கேப்டன் ஜோ ரூட் பதுங்க தொடங்கிவிட்டார்.
பிட்ச்சில் பெரிதாக புற்கள் இல்லை என தெரிந்தும் டாஸை வென்று பௌலிங்கே தேத்வு செய்தார். இதுவே ஒரு தற்காப்பு மனநிலையின் வெளிப்பாடாகவே இருந்தது. இங்கிலாந்து அணியின் பேட்டிங் ரொம்பவே சுமாராக இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்து ஒரு ப்ளானை உருவாக்கி திட்டமிட்டு ஆடும் அளவுக்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் நிலை இல்லை.
ஆக, ஏனோதானோவென சொதப்பலாக குறைவான ரன்னில் அவுட் ஆவதை விட, எதிரணிக்கு முதல் பேட்டிங்கை கொடுத்துவிடலாம். அப்போது நம் முன் ஒரு டார்கெட் இருக்கும். அப்போது எப்படி ஆட வேண்டும் என்கிற புரிதலும் கிடைக்கும். அதைவைத்து கொண்டு சமாளித்துவிடலாம். மற்ற வீரர்கள் சொதப்பினாலும் ஒற்றை ஆளாக நாமே நின்று ஸ்கோரை கொஞ்சம் நெருக்கி கொண்டு வந்துவிடலாம். இதுவே ஜோ ரூட்டின் ஐடியாவாக இருந்திருக்கும். ஆனால், இது ஒர்க் அவுட்டே ஆகவில்லை.
இந்தியா சார்பில் ரோஹித் சர்மாவும் கே.எல்.ராகுலும் ஓப்பனர்களாக களமிறங்கினர். இருவருமே மிகச்சிறப்பாக ஆடினர். துளி கூட அவசரப்படவில்லை. அடர்ந்த காட்டில் ஓடிக்கொண்டிருக்கும் சஞ்சலமற்ற நதிக்கு ஒப்பான நிதானம் இருவரிடமும் இருந்தது. முதல் ஸ்பெல்லை ஆண்டர்சனும் ராபின்சனும் வீசியிருந்தனர். இவர்களுமே பந்தை வைத்து வித்தை காட்டினார். குறிப்பாக, ஆண்டர்சன் எந்த பந்தை இன்கம்மிங் டெலிவரியாக உள்ளே வீசுகிறார்.
எந்த பந்தை வெளியே எடுக்கிறார் என்பது பயங்கர சர்ப்ரைஸாக இருந்தது. கடந்த போட்டியை விட இந்த போட்டியில் அவருக்கு பந்து நன்கு மூவும் ஆனது. கடந்த போட்டியில் வெறும் 11% பந்துகளை மட்டுமே அவரால் பேட்ஸ்மேனுக்கு உள்பக்கமாக திருப்ப முடிந்தது. ஆனால், இந்த போட்டியில் முதல் நாளிலேயே 33% பந்துகளை அவரால் உள்ளே திருப்ப முடிந்திருந்தது. ஆண்டர்சனுக்கு ஒத்துழைக்கும் விதமாக ராபின்சனும் நெருக்கடியளிக்கும் வகையில் பந்தை இரு பக்கமும் திருப்பினார்.
ஆனால், இந்த வித்தை எதற்கும் ரோஹித் & ராகுல் கூட்டணி அசைந்தே கொடுக்கவில்லை. ஸ்டம்பை விட்டு வெளியே செல்லும் பந்துகளை தவறிப்போய் கூட தொடவில்லை. உடம்புக்குள் வீசப்படும் பந்துகளை மட்டுமே தட்டிவிட்டு சிங்கிள் எடுத்தனர்.
முதல் 10 ஓவர்கள் முழுவதும் ஒரு தவம் போல இந்த அணுகுமுறையை இருவரும் பின்பற்றினர். 10 ஓவர்களுக்கு பிறகு, ரோஹித் சர்மா தவத்தை கலைத்து அட்டாக்கிங் முகத்தை காட்ட தொடங்கினார். நான்காவது பௌலரான சாம் கரனை குறி வைத்து அட்டாக் செய்தார். தொடர்ச்சியாக அவர் ஓவர்களில் பவுண்டரி அடித்த ரன் கணக்கை உயர்த்தினார். இதன்பிறகு, இந்த கூட்டணியை இங்கிலாந்து வீரர்களால் அவ்வளவாக சிரமப்படுத்தவே முடியவில்லை. ரோஹித் ஒரு பக்கம் அடித்து ஆட, ராகுல் இன்னொரு பக்கம் விக்கெட்டை காத்து நின்றார்.
மிகச்சிறப்பாக ஆடி அரைசதத்தை கடந்திருந்தார் ரோஹித். வெளிநாட்டு மைதானங்களில் அவர் இதுவரை பெரிதாக சாதித்ததில்லை. இதனால் அவர் பலத்த விமர்சனங்களுக்குள்ளாகியிருந்தார். ஆனால், நேற்றைய ஆட்டத்தின் மூலம் இந்த விஷயங்களையெல்லாம் உடைத்தெறிந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 83 ரன்களில் ஆண்டர்சன் வீசிய ஒரு டாப் ஆஃப் தி ஆஃப் ஸ்டம்ப் டெலிவரியில் போல்டை பறிகொடுத்து அவுட் ஆனார்.
ரோஹித் - ராகுல் கூட்டணி 126 ரன்களை சேர்த்திருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் SENA நாடுகளில் இந்திய ஓப்பனர்கள் 100 ரன் பார்ட்னர்ஷிப்பே போட்டதில்லை. இதுதான் முதல்முறை.
இதன்பிறகு, நம்பர் 3 இல் புஜாரா வந்தார். இவ்வளவு நேரம் அமைதி புயலாக இருந்த ராகுல் அட்டாக் செய்ய தொடங்கினார். புஜாரா பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கையில் வெறும் 9 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இன்கம்மிங் டெலிவரிக்கள் எப்போதுமே அவருக்கு ஒரு பிரச்சனையாகவே இருந்திருக்கிறது. இந்த போட்டியிலும் முதலில் ஆண்டர்சன் வீசிய ஒரு இன்கம்மிங் டெலிவரியை காலில் வாங்கியிருப்பார். அதை இங்கிலாந்து ரிவியூ எடுத்தது. உயரம் காரணமாக மட்டுமே அந்த அவுட்டிலிருந்து தப்பித்திருந்தார்.
எப்போதுமே புஜாராவுக்கு கொஞ்சம் ஒயிட் ஆஃப் தி க்ரீஸிலிருந்து மணிக்கட்டை இடப்பக்கமாக கொஞ்சம் திருப்பி நல்ல இன்கம்மிங் டெலிவரிக்களை வீசி திணறடிப்பர். நேற்றும் ஆண்டர்சன் அப்படியொரு டெலிவரியை வீசினார். ஆனால், அந்த பந்து உள்ளே வராமல் வெளியே திரும்பியது. இதை எதிர்பார்க்காத புஜாரா எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார்.
நம்பர் 4 இல் கேப்டன் கோலி களமிறங்கியிருந்தார். கடந்த போட்டியில் ஆண்டர்சனிடம் முதல் பந்திலேயே அவுட் ஆகியிருந்தார். அதனால், கோலி க்ரீஸுக்குள் வந்தவுடன் ஆண்டர்சனை முழுமையாக ராகுலே எதிர்கொண்டார். அத்தனை பேரையும் திணறடிக்கும் ஆண்டர்சனால் ராகுலை திணறடிக்க முடியவில்லை. ஆண்டர்சனின் பந்துகளில் ராகுல் அடித்த ட்ரைவ்கள் அனைத்தும் மாஸ்டர் க்ளாஸ்.
கோலியின் சதத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு நேற்றும் ஏமாற்றமே மிஞ்சியது. நேற்றைய நாள் முடிவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே இருந்த போது 43 ரன்களில் ராபின்சன் பந்துவீச்சில் எட்ஜ் கேட்ச் ஆனார். கோலியின் அட்டகாசமான ஃபுட் ஒர்க்கே அவருக்கு வில்லனாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளுக்கு முன்னங்காலை எடுத்து வைத்து ஸ்ட்ரோக் ஆட முயற்சிக்கும் போது லெக் ஸ்டம்ப் தெரிகிறது. இதனால் கூடுதலாக ஒன்றிரண்டு செ.மீ வெளியே செல்லும் பந்துகளுக்கும் கோலி பேட்டை விடுகிறார். இதில் அவர் அதிக கவனம் செலுத்தியாக வேண்டும்.
அட்டகாசமாக ஆடியிருந்த கே.எல்.ராகுல் சதத்தை கடந்து 127 ரன்களில் நாட் அவுட்டாக இருந்தார். ரஹானே ஒரு ரன்னில் க்ரீஸில் இருந்தார். அணியின் ஸ்கோர் 276-3 என்ற நிலையில் இருந்தது. இத்தோடு முதல் நாள் முடிவுக்கு வந்தது. போட்டி மொத்தமும் இந்தியாவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. இரண்டாவது நாளிலும் இதே போன்ற ஆட்டம் வெளிப்படும்பட்சத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தில் இந்திய அணி வெல்லலாம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!