Sports
வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸில் சாதிப்பாரா விராட் கோலி.. முட்டிமோத போகும் இந்தியா, இங்கிலாந்து அணிகள்!
நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக முழுமையாக ஆடப்படாமல் ட்ராவில் முடித்து வைக்கப்பட்டது. கடைசி நாள் போட்டி மட்டும் மழையில்லாமல் முழுமையாக நடந்திருந்தால் இந்தியா வெல்வதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருந்தது. இந்நிலையில், இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் களமிறங்குகிறது இந்திய அணி. இந்தப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
லார்ட்ஸ் கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் மைதானம். அத்தனை கிரிக்கெட்டர்களுக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் ஆட வேண்டும் என்பது ஒரு கனவே. அங்கே சிறப்பாக ஆடி தன்னுடைய பெயரை லார்ட்ஸின் ஹானர்ஸ் போர்டில் பதிப்பதையே வாழ்நாள் சாதனையாக கருதுகின்றனர். அப்பேர்ப்பட்ட மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக ஆடி இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்வார்களா என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்திய அணி ஒவ்வொரு முறை இங்கிலாந்து செல்லும்போதும் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் ஆடும். ஆனால், பெரிதாக வென்றதில்லை. இதுவரை லார்ட்ஸ் மைதானத்தில் ஆடிய போட்டிகளில் இரண்டே இரண்டு முறை மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது. 1986 இல் கபில்தேவ் தலைமையிலான அணி இங்கிலாந்து தொடரின் போது லார்ட்ஸ் போட்டியை வென்றிருந்தது. அதன்பிறகு, 28 ஆண்டுகள் கழித்தே தோனி தலைமையிலான இந்திய 2014 தொடரின் போது லார்ட்ஸ் போட்டியை வென்றது. இப்போது கோலி தலைமையிலான அணி இங்கிலாந்து சென்றிருக்கிறது. கோலியும் லார்ட்ஸ் போட்டியை வென்று கபில்தேவ், தோனி வரிசையில் வரலாற்றில் இடம்பிடிப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
முதல் போட்டியில் இரண்டு அணிகளின் பேட்டிங்குமே சுமாராகவே இருந்தது. ஆனாலும், எப்படியோ சமாளித்து இங்கிலாந்தை விட அதிக ரன்கள் லீட் எடுத்துவிட்டது இந்திய அணி. இந்த போட்டியில் அப்படி தடுமாற்றங்கள் இல்லாமல் சௌகரியமாக இங்கிலாந்துக்கு ஒரு பெரிய ஸ்கோரை விரட்ட கொடுக்க வேண்டும். அதற்கு ஓப்பனிங்கில் ரோஹித் சர்மா முழு ஃபார்மிற்கு திரும்ப வேண்டும். மேலும், மிடில் ஆர்டர் மும்மூர்த்திகளாக இருக்கும் புஜாரா, கோலி, ரஹானே மூவரும் சொதப்பி வருகின்றனர். கேப்டன் கோலி முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியிருந்தார். ஆனால், கோலி எப்படியும் மீண்டுவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
புஜாராவும் ரஹானேவும் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். கடந்த இரண்டு வருடமாகவே ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாமல் புஜாரா சொதப்பி வருகிறார். ரஹானே கடைசியாக ஆஸ்திரேலியா சீரிஸில் ஒரு சதம் அடித்தார். அதன்பிறகு சொல்லிக்கொள்ளுமளவுக்கு ஒரு பங்களிப்புமே இல்லை. இருவருமே திறமையான அனுபவமிக்க வீரர்களாக இருந்தாலும் தொடர்ந்து சொதப்புவது அணிக்கு பின்னடைவாகவே இருக்கிறது. 2014 இல் லார்ட்ஸ் போட்டியை வென்ற போது அதில் சதமடித்து தன்னுடைய பெயரை லார்ட்ஸின் ஹானர்ஸ் போர்டில் பதித்திருந்தவர் ரஹானே. இப்போதும் அதே மாதிரியான இன்னிங்ஸை அவர் ஆடியாக வேண்டும். பௌலிங்கை பொறுத்தவரைக்கும் இந்திய அணியில் அஷ்வின் ப்ளேயிங் லெவனுக்குள் வந்தாக வேண்டும். அதை கோலி எப்படி செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
முதல் போட்டியில் ஆடிய ஷர்துல் தாகூர் காயமடைந்திருக்கிறார். அவருக்கு பதில் இஷாந்த் சர்மா தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. 2014 லார்ட்ஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது இஷாந்த்தின் 7 விக்கெட் ஸ்பெல் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக ப்ராட் விலகியிருக்கிறார். ஆண்டர்சனுக்கும் லேசான காயம் ஏற்பட்டிருப்பதால் இந்த போட்டியில் ஆடுவது கடினம் எனக் கூறப்படுகிறது. அவர்கள் இருவருமே இல்லாதபட்சத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுடனேயே இங்கிலாந்து களமிறங்கும். அதுவும் இந்தியாவுக்கு சாதகமாக அமைய வாய்ப்பிருக்கிறது. சாதக பாதகங்கள் சம அளவில் குலைந்து காணப்படும் நிலையில் லார்ட்ஸில் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்று வெற்றியை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- உ.ஸ்ரீ
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு