Sports

ஒரே இடத்தில் பயிற்சி.. ஒலிம்பிக்கில் வென்ற ரவி தாஹியா.. சிறையில் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட சுஷில் குமார்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் ரவிக்குமார் தாஹியாவின் மல்யுத்தப் போட்டியை முன்னாள் மல்யுத்த வீரர் சுஷில்குமார் திஹார் சிறையில் இருந்தவாறு டி.வியில் பார்த்து உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த விளையாட்டில் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா. இதன் மூலம் 2012-ல் வென்ற சுஷில் குமாருக்குப் பிறகு வெள்ளிப் பதக்கம் வென்ற இரண்டாவது மல்யுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

ரவிக்குமார் விளையாடிய இறுதிப்போட்டியை முன்னாள் மல்யுத்த வீரர் சுஷில் குமார் டெல்லி திஹார் சிறையில் இருந்தபடி தொலைக்காட்சியில் பார்த்துள்ளார். அப்போது ரவி தஹியா தோல்வி அடைந்ததை பார்த்த சுஷில் குமார் உணர்ச்சிவசப்பட்டதாக திஹார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுஷில் குமார் மற்றும் ரவிக்குமார் தாஹியா இருவரும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இருவருமே டெல்லியில் உள்ள சத்ரசால் மைதானத்தில் பயிற்சி எடுத்தவர்கள். ரவிக்குமார் தாஹியா, சுஷில்குமாரை இன்ஸ்பிரேஷனாக கொண்டு வளர்ந்தவர்.

சுஷில்குமார் 2008-இல் ஒலிம்பிக் பதக்கம் வென்றதைப் பார்த்து அதேபோல நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என சூளுரைத்து தற்போது வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் ரவிக்குமார்.

சுஷில் குமார், சக மல்யுத்த வீரரான சாகர் தன்கர் ராணா என்பவர் சத்ரசால் ஸ்டேடியத்தின் கார் பார்க்கிங்கில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் இருக்கும் சுஷில் குமார், ரவி தாஹியாவின் போட்டியைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நூறாண்டு கால பதக்க ஏக்கத்தைத் தீர்த்த நீரஜ் சோப்ரா... ஒலிம்பிக்ஸில் வரலாறு படைத்தது இந்தியா!