Sports
நூறாண்டு கால பதக்க ஏக்கத்தைத் தீர்த்த நீரஜ் சோப்ரா... ஒலிம்பிக்ஸில் வரலாறு படைத்தது இந்தியா!
இந்தியாவின் நூறாண்டு கால பதக்க ஏக்கத்தை தீர்த்து வைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. இந்தியா இதுவரை தடகளத்தில் பெரிதாகச் சாதித்ததில்லை. 1900ஆம் ஆண்டு நார்மன் பிரிட்சர்ட் எனும் ஆங்கிலோ இந்தியர் தடகளத்தில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தார். ஆனால், அவரது பதக்கத்தை இந்தியா கணக்கில் சேர்ப்பதா பிரிட்டன் கணக்கில் சேர்ப்பதா என்பது இன்னமும் தீராத பஞ்சாயத்தாக இருக்கிறது. ஆக, இந்தியாவிற்கு தடகளத்தில் முதல் பதக்கத்தை வென்று கொடுத்திருக்கும் இந்தியர் நீரஜ் சோப்ராவே. அதுவும் தங்கப்பதக்கம்.
23 வயதாகும் நீரஜ் சோப்ரா இந்தியாவில் விளையாட்டுகளின் புனித பூமியான ஹரியானாவைச் சேர்ந்தவர். ஹரியானாவில் எல்லா இளைஞர்களுமே ஏதோ ஒரு விளையாட்டில் தீவிர ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள். அந்தவகையில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலை தேர்வு செய்து அதில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டார். சிறுவயதில் அதிக உடல் எடையுடன் காணப்பட்டிருந்தார் நீரஜ். உடல் ஆரோக்கியத்திற்காகவே தீவிரமாஜ விளையாட்டில் ஈடுபட்டவர் ஒரு கட்டத்தில் சாதனை மேல் சாதனைகளாகச் செய்யத் தொடங்கினார்.
2017, 2018 என இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆசிய போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப், காமென்வெல்த் போட்டி என மூன்று பெரிய தொடர்களிலுமே தங்கம் வென்று அசத்தியிருந்தார். இந்தியாவின் நூற்றாண்டு கால பதக்க ஏக்கத்தை தீர்க்கப்போகும் தலைமகன் அவர்தான் என்பது அப்போது தீர்மானமாகிவிட்டது.
இடையில் சில காயங்கள் ஏற்பட பல மாதங்கள் ஓய்விலிருக்க வேண்டிய சூழல் உருவானது. காயத்திற்கு பிறகு அவருடைய செயல்பாட்டில் கொஞ்சம் சுணக்கம் இருந்தது. ஆனாலும் சீக்கிரமே மீண்டு வந்தார். ஒரு தேசத்தின் நூற்றாண்டு கால கனவை சுமந்து கொண்டிருக்கிறோம் என்கிற பொறுப்பு அவரின் ஒவ்வொரு வீச்சிலுமே தெரிந்தது. ஒலிம்பிக்கிற்காக தனது டெக்னிக்கில் நிறைய மாற்றங்களை செய்திருந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கை குறிவைத்து தயாரானவர் முழு ஃபார்மோடு டோக்கியோவில் காலடி எடுத்து வைத்தார். தகுதிச்சுற்றில் ஒவ்வொரு வீரருக்கும் மூன்று வாய்ப்புகள் வழங்ப்பட்டது. அதற்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 83.50 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீச வேண்டும். மற்ற வீரர்கள் ஃபவுல் எல்லாம் வாங்கி சொதப்பிக் கொண்டிருக்க, தீர்க்கமான பார்வையோடு தெளிவாக உள்ளே வந்த நீரஜ் சோப்ரா 85.64 மீட்டருக்கு ஈட்டியை வீசி முதல் வாய்ப்பிலேயே இறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற்று மிரட்டிவிட்டார். மற்ற வீரர்களால் நீரஜ் சோப்ராவின் தூரத்தை தாண்ட முடியவில்லை என்பதால் தகுதிச்சுற்றில் முதலிடமே அவருக்குதான். அப்போதே பதக்கம் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
இன்று இறுதிப்போட்டி நடந்தது. இன்றைக்கும் முதல் வீச்சிலேயே அட்டகாசப்படுத்தி பெரிய நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டார். முதல் வீச்சிலேயே 87.03 மீட்டர். மற்ற வீரர்களால் 87 மீட்டரை கூட தாண்ட முடியவில்லை. இரண்டாவது வாய்ப்பில் இன்னும் பிரமாதமாக 87.58 மீட்டருக்கு வீசி பதக்கத்தை உறுதியே செய்துவிட்டார். இதன்பிறகு எந்த வீரராலும் கொடுக்கப்பட்ட 6 வாய்ப்புகளில் நீரஜ் சோப்ராவின் தூரத்தை தாண்ட முடியவில்லை.
நூறாண்டு கால இந்தியாவின் பதக்க ஏக்கம் நீரஜ் சோப்ராவால் நிறைவேறியிருக்கிறது. 2008 இல் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றிருந்தார். அவருக்கு பிறகு தங்கம் வெல்லும் இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாளில் மீராபாய் சானு வெள்ளி வென்று சிறப்பாக தொடங்கி வைத்திருந்தார். கடைசி நாளில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று மிகச்சிறப்பாக முடித்து வைத்திருக்கிறார். நீரஜ் சோப்ராவின் வெற்றியால் இந்தியா 7 பதக்கங்களுக்கு உயர்ந்திருக்கிறது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்த முறைதான் இந்தியா இவ்வளவு அதிக பதக்கங்களை வென்றிருக்கிறது. மொத்தத்தில் ஒரு மிகப்பெரிய வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது.
-உ.ஸ்ரீ
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!