Sports
“தோனியின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது ஏன்?” - கொந்தளிக்கும் ரசிகர்கள்... மீண்டும் வழங்கப்படுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் சமூக வலைதளம், மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள், நிறுவனங்களோடு தொடர்புடையவர்கள் தங்களது தனிப்பட்ட கணக்கை உறுதி செய்துள்ளதன் அடையாளமாக அவர்களுக்கு verified என்றழைக்கப்படும் ப்ளூ டிக் அங்கீகாரத்தை வழங்குகிறது.
உலக அளவில் சிறந்த கேப்டனாகத் திகந்த, கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதர்சமான கிரிக்கெட் வீரராகத் திகழும் மகேந்திர சிங் தோனிக்கும் ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக் வழங்கியிருந்தது.
தோனி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போதுவரை ட்விட்டரில் ஆக்டிவாக இருந்த தோனி, ஓய்வுக்குப் பிறகு தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.
தோனி குறித்த பல்வேறு தகவல்களையும், புகைப்படங்களையும் அவரது மனைவி சாக்ஷியே சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். தோனி தொடர்ந்து ட்விட்டர் கணக்கைப் பயன்படுத்தாமல் இருந்து வந்ததால், அவருக்கு வழங்கப்பட்ட ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில் 8 மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட மகேந்திர சிங் தோனியின் பக்கத்திற்கு வழங்கப்பட்டிருந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிரபலங்கள், தங்களின் ட்விட்டர் கணக்கை ஓராண்டுக்கு மேல் பயன்படுத்தவில்லை என்றால் ப்ளூ டிக் நீக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உட்பட சில பிரபலங்களின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் சமீபத்தில் நீக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் மீண்டும் ப்ளூ டிக் கொடுக்கப்பட்டது.
தோனிக்கும் தற்போது ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் அவரது பக்கத்திற்கு ப்ளூ டிக் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!