Sports
ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் முதலிடம்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா!
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று அதிகாலை தடகளத்தில் ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ராவும் சிவ்பால் சிங்கும் கலந்துக்கொண்டனர். நீரஜ் சோப்ரா மிகச்சிறப்பாக செயல்பட்டு தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறார். இந்தியாவிற்கு இன்னொரு பதக்க நம்பிக்கையாக உயர்ந்திருக்கிறார்.
ஈட்டி எறிதலில் ஒரு வீரருக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அதில், நிர்ணயிக்கப்பட்ட 83.50 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீச வேண்டும். அப்படி வீசுபவர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும். பல வீரர்களும் மூன்று வாய்ப்பில் பல முறை ஃபவுல் வாங்கினர். ஜெர்மனியை சேர்ந்த உலக சாம்பியன் ஜோனஸ் வெட்டர். அவரே மூன்று வாய்ப்புகளையும் வீசியிருந்தார். அதில் கடைசி வாய்ப்பில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட எல்லையை தாண்டினார். 85.64 மீட்டருக்கு அவர் வீசியிருந்தார்.
நீரஜ் சோப்ராவுக்கு இதுதான் முதல் ஒலிம்பிக்ஸ். ஆனால், முதல் வீச்சிலேயே நிர்ணயிக்கப்பட்ட எல்லையை தாண்டிவிட்டார். 86.65 மீட்டருக்கு அவர் ஈட்டியை வீசினார். ஒரே வாய்ப்பில் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுவிட்டார். உலக சாம்பியனையெல்லாம் மிஞ்சி தகுதசுற்றில் முதலிடமும் பிடித்துவிட்டார். இன்னொரு இந்திய வீரரான சிவ்பால் சிங் 76.40 மீட்டர் மட்டுமே வீசி தகுதிச்சுற்றோடு வெளியேறினார்.
நீரஜ் சோப்ரா ஹரியானாவை சேர்ந்தவர். 2017, 2018 காலகட்டங்களில் ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டி, காமென்வெல்த் போட்டி என மூன்று பெரிய தொடர்களிலும் தங்கம் வென்றிருந்தார். அப்போதே இவர் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பார் என முடிவாகிவிட்டது.
அந்த நம்பிக்கையை பொய்யாக்காமல் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். தடகள போட்டிகளில் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை ஒரு பதக்கத்தை கூட வென்றதில்லை. அந்த ஏக்கத்தை நீரஜ் சோப்ரா தீர்த்து வைப்பார் என பெரிதாக நம்பப்படுகிறது. 85 மீட்டருக்கு மேல் எப்போதும் சீராக வீசக்கூடிய திறன் உடையவர். மேலும், தகுதிச்சுற்றில் கலந்துக்கொண்ட 32 வீரர்களில் அதிக தூரம் வீசியிருப்பதும் நீரஜ்தான் என்பதால் இந்திய ரசிகர்களின் பதக்க எதிர்பார்ப்பு வீண் போகாது என்றே நம்பப்படுகிறது. நீரஜ் சோப்ரா பங்குபெறும் இறுதிப்போட்டி ஆகஸ்ட் 7 ம் தேதி நடைபெறுகிறது.
-உ.ஸ்ரீ
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!